முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 6, 2011

தகவல் களஞ்சியத்தின் தலைமைச் செயலகம்


மேசைக் கணிணிகள் புழக்கத்துக்கு வந்த காலம். ஆப்பிள் நிறுவனம், ஐபிஎம் நிறுவனம் இரண்டும் மேசைக் கணிணிகளை விற்பனைக்கு விட்டிருந்தன. அந்தக் கணிணிகளின் படிமக் கணிணிகளைத் தாய்வான் குழுமங்கள் மலிவு விலையில் வழங்கிய காலம்.
1984இல் என்னிடம் அத்தகைய படிமக் கணிணி ஒன்றிருந்தது. அதில் பொருத்துவதற்காகத் தமிழ் எழுத்துருக்களைத் தேடினேன். சென்னைக்கு வந்தேன். தமிழில் எழுத்துருக்கள் உண்டா எனத் தேடினேன். தலைமைச் செயலகம் சென்றேன். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை நடராசனாரைச் சந்தித்தேன்.
சென்னை அண்ணா சாலையில், தேவி - திரை அரங்க வளாகத்தில் திருவள்ளுவர் எழுத்துரு விற்பனையாகும் திசி ஆலை அலுவலக முகவரியைத் தந்தார். தமிழில் கணிணி எழுத்துருக்களை முதலில் வணிகமயமாக்கியோர் தில்லியில் உள்ள திசி ஆலை நிறுவனத்தினர். தமிழக அரசுக்கு அந்த எழுத்துருக்களை விற்பனை செய்ததாக முனைவர் அவ்வை நடராசனார் கூறி என்னை அங்கு அனுப்பினார்.
  முனைவர் அவ்வை நடராசனாருடனான முதல் சந்திப்பில் அவருடைய உற்சாகமூட்டும் சொற்கள் என்னை ஈர்த்தன. விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்தார். நினைவாற்றலுடன் துல்லியமாக எடுத்துக் கூறினார். தமிழ்ச் சொற்களைக் கனிந்து உச்சரித்தார். முன்பின் பழக்கமில்லாத என்னை, நீண்ட காலத் தோழமை உணர்வுடையவராகக் கருதினார், உதவினார், உபசரித்தார்.
2008ஆம் ஆண்டு. பன்னிரு திருமுறைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தேன். திருமந்திரத்தை ஆங்கிலத்தில் எவராவது மொழிபெயர்த்துள்ளார்களா எனப் பலரிடம் உசாவி வந்தேன். தொலைப்பேசியில் முனைவர் அவ்வை நடராசரானாருடன் பேசுகையில் என் உசாவலைக் கூறினேன். கன்னியாகுமரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்த முனைவர் நடராசன் திருமந்திரம் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், திருக்கோவிலூர் மடத்தாரிடம் விசாரியுங்கள் என எனக்கு வழிகாட்டினார்.
கணிணி எழுத்துருவாயிலென், திருமந்திர மொழிபெயர்ப்பாயிலென், தகவல் களஞ்சியமாக முனைவர் அவ்வை நடராசனார் எனக்கு உதவினார். இன்றைக்கு நாம் தகவல்களை இணையத்தில் தேடுகிறோம். முனைவர் அவ்வை நடராசனாரோ நடமாடும் இணைய தளமாக நெடுங்காலமாகவே இயங்கிவந்துள்ளார்.
எனக்கு மட்டுமா? எத்தனையோ பேருக்கு அவரது நினைவாற்றலும் புலமையும் பொலிவான தமிழும் கைகொடுத்து வந்துள்ளன.
தகவல்களைத் தெரிந்துகொள்வதில் அவர் காட்டும் ஆர்வம் அதைவிட அதிகம்.
தமிழைச் செம்மொழியாக அறிவித்த காலத்தில் இரவு விருந்து ஒன்றில் என்னுடன் பேடிக்கொண்டிருந்தார். ஏற்கனவே ஐந்து மொழிகளைச் செம்மொழிகளாக இந்திய அரசு ஏற்றுள்ளதையும் ஆண்டுதோறும் குடியரசு விழாவில் வாழ்நாள் பரிசு உள்ளிட்ட விருதுகளை, சமஸ்கிருதம், பிராகிருதம், பாளி, பாரசீகம், அரபு ஆகிய மொழிசார் புலமையாளருக்குச் செம்மொழி விருதுகளாக இந்திய அரசு வழங்கி வருவதையும், ஆட்சிமொழி, பிராந்திய மொழி, பின்தங்கிய மொழி, செம்மொழி என்ற வகைகளை இந்திய அரசின் நாடாளுமன்றமே ஏற்ற செய்திகளையும் சொன்னதும் ஆதாரங்கள் உண்டா எனக் கேட்டார்.
இரவு விருந்து முடிந்து, தியாகராயர் நகரில் உள்ள அவரது அலுவலகம் சென்று அவரது கணிணியில் இணைய தளங்களில் ஒவ்வொன்றாக அவற்றை வரிசையாக்கினேன். பள்ளி மாணவனின் ஆர்வம், கள ஆய்வாளனின் தகவல் தேடும் கூர்மை, தகவல்களை மனத்துள் வாங்கிப் பகுப்பாய்ந்து உடனுக்குடன் தன் நினைவில் இருந்தவற்றுடன் பொருத்தி நோக்கல், எந்தத் தகவல் எங்கே யாருக்குப் பயன்படும் என்ற கவனம் எனச் சில மணி நேரங்கள் அந்தத் தேடலில் அவர் திளைத்தார். சில பகுதிகளை அச்சானில் இடச் சொன்னார். எடுத்துச் சென்றார், இவற்றை இதுவரை எவரும் கண்டுகொள்ளவில்லையே என வருந்தினார். 
 உரிய இடங்களில் அந்தத் தகவல்களைப் பரிமாறியமையால் இந்திய அரசின் செம்மொழித் தகைமை அறிவிப்புகளில் பிற்காலத்தில் மாற்றங்கள் வந்தன என அவரே என்னிடம் பின்னர் சொன்னார்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக முனைவர் அவ்வை நடராசனார். 1995 தையில் எட்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு. தஞ்சாவூர் முழுவதும் விழாக்கோலம். தொடக்க நாளுக்கு முதல்நாள், மாலைப் பொழுது. என் பேராளர் பதிவைத் தேடி அலுவலகம் செல்கிறேன். பதிவுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
முனைவர் அவ்வை நடராசனார், முனைவர் சி. பாலசுப்பிரமணியனார், முனைவர் க. இராஜாராம் ஆகியோர் வந்துகொண்டிருந்தனர். என் பின்னாலே இரு காவல்துறை அதிகாரிகள். பதிவுக்காகக் காத்திருக்கிறேன், என்னுடன் மகன் பிஞ்ஞகன்.
காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்தனர். அந்த அறையின் ஓரத்தில் அனைவரின் முன்பாக, நீங்கள் இங்கிருந்து நீங்கிவிடுங்கள் என்றனர். பேராளருக்கான என் விண்ணப்பம், செலுத்திய தொகைக்கான சிட்டை யாவும் காட்டினேன். எதிரே நின்றகொண்டிருந்த முனைவர் இராஜாராம் அவர்களைச் சுட்டினேன். அவருக்கு நேரடியாக விவரம் தெரியும் என்றேன். நீங்கள் போய்விடுவதே நல்லது என்றனர் காவல்துறையினர்.
முனைவர் அவ்வை நடராசனார், முனைவர் சி. பாலசுப்பிரமணியனார் இருவரும் என்னிடம் வந்தனர், மாநாட்டைச் சிறப்பாக நடத்தவேண்டும், காவல்துறையுடன் ஒத்துழையுங்கள் என்றனர். அப்பொழுது முனைவர் அவ்வை நடராசனாரின் முகத்தில் கண்ணீர் வழிந்ததைக் கண்டேன். அந்த இடத்தை விட்டு உடன் நீங்கினேன். எனக்கு மட்டுமல்ல, எனக்குப் பின்னர் அடுத்த நாள் பேராசிரியர்கள் சிவத்தம்பி, சண்முகதாஸ், மனோன்மனி என மேலும் சிலருக்கு இந்த நிலை. முனைவர் அவ்வை நடராசனார் கையறுநிலையில் இருந்தார், கண்ணீர் விட்டார், நிச்சயமாகத் தன் அறைக்குள் சென்றபின் கதறி அழுதிருப்பார்.
ஈழத் தமிழரின் சைவத் தமிழ்ப் பற்றை விளக்கச் சுவையான நிகழ்வைப் புனைந்து மேடைகளில் முனைவர் அவ்வை நடராசனார் கூறுவார். ஈழத்தமிழர் ஒருவர் இவரின் வீட்டுக்கு வந்தாராம். இவர் குளியலறையில் இருந்தாராம். வந்தவரை மகன் இருக்கச் சொன்னாராம். தம்பி தேவாரப் புத்தகம் இருக்கிறதா என ஈழத்தமிழர் மகனிடம் கேட்டாராம். தேவாரம் ஓய்வுபெற்றுப் பல மாதங்கள் ஆகிவிட்டதே என மகன் சொன்னாராம். தேவாரம் காவல்துறை அதிகாரியாக இருந்தவர். 
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நாவன்மையாளர்களுள் முனைவர் அவ்வை நடராசனார் ஒருவர். கேட்டார்ப் பிணிக்கும் தகவாகப் பேசுவார். அவருக்கு மாலைப் பொழுது மேடைகளே காப்பரண்கள், அவையே அவர் உடல் நலத்தின் காப்பரண்களுமாம். அவர் தலைமையில் பேச எனக்கும் ஓரிரு வாய்ப்புகள் கிடைத்ததால் மகிழ்ந்திருக்கிறேன்.
ஆகா, உங்கள் காட்சி விளக்கம் மிக அருமையாக இருந்ததாமே! சேதுக் கால்வாய் பற்றி இப்படி ஒரு பார்வையா? இவ்வாறு ஒருநாள் முனைவர் அவ்வை நடராசனார் என்னைப் பாராட்டினார். இவர் அங்கு வரவில்லையே! என நான் ஐயுற்றிருந்தபொழுது, என் மகன் அருள் என்னிடம் கூறினார், தமிழ் ஊடகப் பேரவையில் உங்களது காட்சி விளக்கத்தை அவர்தான் ஏற்பாடு செய்தார், வீட்டுக்கு வந்ததும் அப்படிப் பாராட்டினார், நான் வரமுடியவில்லையே என வருந்தினேன் என்றார்.
பேரறிஞர் அவ்வை துரைசாமிப்பிள்ளையை நேரில் அறியும் வாய்ப்புப் பெற்றிலேன். எனினும் அன்னாரின் மகன், மருமகள், பெயரர்களை அறியும் வாய்ப்புப் பெற்றேன். மெய்வழி ஆண்டவர் சார்ந்த மருமகளைப் பெற்ற திருமண விழாவுக்கு முனைவர் அவ்வை நடராசனார் என்னை அழைத்திருந்தார். மருத்துவரான தன் மற்றொரு மகன் ஆஸ்திரேலியாவில் பணி தேடும் காலத்தில் அவரை என்னிடம் அனுப்பி ஆலோசனை கேட்பித்தார். அவரின் மக்களும் அவரைப் போலவே புலமை, ஆற்றல், செம்மாந்த நோக்கு, பண்பட்ட நெஞ்சம், பாராட்டும் பண்பு, கனிவான கண்ணோாட்டம் கொண்டவர்கள். என் உரையைக் கேட்பதற்காகவே வந்ததாக ஒருநாள் அவரின் துணைவியார் மருத்துவர் தாரா நடராசன் என்னிடம் கூறியபொழுது நான் வெற்றுப் பாராட்டாகக் கொள்ளவில்லை. கொல்லன்தெருவில் வாழ்பவர், ஊசியின் தரத்தை அறியதவாரா?  
முனைவர் அவ்வை நடராசனாருக்கு இந்தியத் திருநாடே தாமரைத்திரு (பத்மசிறீ) விருது வழங்கிப் பாராட்டியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் விருது பெறும் காட்சியைப் பார்த்ததும் நானே அங்கிருப்பதுபோன்று மகிழ்ந்தேன். பல்லாண்டு உடல் நலத்தோடு வாழ்ந்து மேன்மேலும் தொண்டாற்றித் தமரெல்லாம் செழிக்குமாறு முனைவர் அவ்வை நடராசனார் வாழ்வாராக.

தமிழ் மணத்தையும் சைவ நெறியையும் பரப்புபவர்


காந்தளகம் பதிப்பகத்தின் நிறுவனர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் மின்தமிழ், மின்னஞ்சல் குழுமத்தில் மிக ஆழமான கருத்துக்களை மிகவும் ஆழகாகப் பதிவு செய்து வருகின்றவர்.

இணையம் இன்று உலகில் உள்ள தமிழர்களை இணைக்கிறது. தமிழ்நூல் இணையதளம் www.tamilnool.com மற்றும் தமிழின் அரிய முயற்சியான www.thevaaram.org இணைய தளத்தில் பன்னிரு திருமுறைகளையும் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, கன்னடம், சிங்களம், சீனம் போன்ற பல மொழிகளில் ஒலிபெயர்த்துப் பதிவேற்றப்படுவதில் அவர் உந்து சக்தியாகவும் தூண்டுதலாகவும் மிகவும் ஆற்றலுடன் செயல்படுகிறவர்.
12ம் நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்த ஐன்னன் என்ற ஒரு கன்னடக் கவி கூறிய வரிகளை நினைவு கூர்கிறேன்.                  
புதிய மாலை கட்டுகிறான் ஒரு
பூக்காரன்,அதைச் சூடிக் கொள்பவர்
இல்லையெனில் வாடிப்போகாதோ!
என்றார் அவர்.
இலக்கியம் படைத்தால் மட்டும் போதாது. அதை இரசிக்கக் கூடியவர்களின் அவசியத்தையும் கவி ஐன்னன் எடுத்துக் கூறுகிறார்.
ஐயா சச்சிதானந்தன் அவர்கள், நமது தமிழின் சைவ இலக்கியப் பொக்கிசத்தை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம், உலக மொழிகளில் சைவத்திருமுறையின் நறுமணத்தை இணையதளத்தின் வாயிலாகத் தமிழ் மணத்தையும் சைவ நெறியையும் பரப்ப உறுதுணையாக உள்ளார். இதனால் நான் பெருமிதம் அடைகிறேன்.
ஐயா மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் முதல்முதலாக, மொழிபெயர்ப்புக் காரணமாகத் தொலைப்பேசியின் மூலமாக எனக்கு அறிமுகமானவர்.
அவர் சிறந்த எழுத்தாளராகச் சிறந்த பதவியில் இருந்து வந்த போதிலும் மிகவும் எளிமையானவரும் ஆவார்.
அவருடைய வார்த்தையில் அன்பும், பண்பும், ஞானமும், நிறைந்திருக்கும்.
மற்றவர்களை மிக வேகமாகக் கவரக்கூடிய பேச்சாற்றலும் மனிதநேயமும் கொண்ட மாமனிதராகவும், எழுத்தாளர்களுக்கு முன்னேறும் ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் உண்டாக்கும் வண்ணம் பேசும் திறன் கொண்டவரும் ஆவார்.
ஆன்மீகத்தின் மீது மிக்க ஆர்வம் கொண்ட அவர், நம்மையும் ஊக்கப்படுத்தி மிக எளிமையாக ஆன்மீக இலக்கியத் தொண்டில் ஈடுபடச்செய்யும் மிக உன்னதமான சக்தியைக் கொண்டவர்.
அவருடைய ஆன்மீக இலக்கியத் தூண்டுதலால்தான் என்னால் ஒன்பதாம் திருமுறையைக் கன்னடத்தில் மொழிபெயர்க்க முடிந்தது.





செம்மொழி மாநாட்டின் சிறப்பு வெளியீடாகவும் அந்நூல் வெளிவந்தது.
12ம் நூற்றாண்டின் வசன இலக்கியத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த கன்னடப் புலவர் பசவண்ணா அவர்களின் வரிகள் நினைவில் வருகின்றன. ஒரு நல்ல மனிதர் என்றால் வாக்கும், நடையும் ஒன்றே ஆக இருக்க வேண்டும் என்றார் அவர்.
இதைக் கடைப்பிடித்துக் கொண்டிருப்பவர் சச்சிதானந்தன் ஐயா அவர்கள். நான் என்ற (அகம்) இல்லாமல் அனைத்திலும் சிவனைக் காண்பவர். சிவனை அன்றி ஒரு அணுக்கூட அசையாது என்றும், அனைத்தும் சிவமயம் என்பதிலும் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டவரும் ஆவார்.
உலகளாவிய எண்ணற்ற உலக மொழிகளில் திருமுறையின் மூலம் சிவனைப்பற்றி அனைத்து மனித இனங்கள் மொழி இனம் பாகுபாடு அன்றிக் கணிணி மூலமாகவும் நூல்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளும் வாய்ப்பினை நல்கியுள்ளார்.
திருமுறைகளைக் கன்னடத்துக்கு மொழிபெயர்க்கும் இவ்வரிய வாய்ப்பினை எனக்கு நல்கிய சச்சிதானந்தன்  ஐயா, மற்றும் மயிலாடுதுறை  தருமபுரம் ஆதீனத்திற்கும் சென்னை காந்தளகத்திற்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.
மலர்விழி, க.
Prof. Malarvizhi, K., Presidency College, Kempapura, Hebbal, Bangalore-24
26-03-2011

Tuesday, May 3, 2011

அரனருள் திருமுறை இசை ஆராதனை விழா துவக்க உரை

அரனருள் அறக்கட்டளையின் ஆண்டு விழாவில்
திருமுறை இசை ஆராதனை விழா 
துவக்க உரை: கயிலைமணி மறவன்புலவு க. சச்சிதானந்தன்

நிகழ்ச்சியின் சில பகுதிகள் காணொலியாக..


Sunday, May 1, 2011

நெஞ்சை நெகிழ்வித்த நிகழ்வுகள்


31.08.2010 செவ்வாய் காலை; யாழ்ப்பாணக் குடாநாடு; என் பேருந்துப் பயணத்தின் அடைநிலை. சாவகச்சேரியைத் தாண்டியதும் நுணாவில்; அடுத்தது கைதடி நுணாவில். அங்கே, அறவழிக் குழு அலுவலக வாயிலில் பேருந்து என்னை இறக்கியது. அடுத்த சில வாரங்களுக்கு நான் அங்கு தங்குகிறேன்.
அறவழிக் குழுவின் தோற்றமும் பணிகளும்:
1979 மாசியில் கைதடி மண்டபத்தில் தொடர்ந்து பத்து நாள்கள் நான் நடத்திய அறவழிப் பயிலரங்கு. பயின்றவர் அனைவரும் இணைந்தனர். அறவழிப் போராட்டக் குழுவாயினர். நான் அக்குழுவின் நிறுவனராயினேன். கடந்த 32 ஆண்டுகளாக அவர்களோடு நானும் இருக்கிறேன்.
இந்த 32 ஆண்டுக் காலம். நீண்ட பயணம். இடையூறுகளையும் தடைகளையும் தாண்டிய பயணம். அறவழிச் சிந்தனைகளுடன் அமைந்த பயணம். தொண்டுகளைத் தாங்கி, மக்கள் துயரங்களைப் போக்க முயன்ற பயணம்.
32 ஆண்டுக் காலமும் திருமிகு மு. க. சீவகதாசர் அறவழிக் குழுவின் செயலாளர். அவருக்கு இப்பொழுது 64 வயது. காந்தியச் சிந்தனை அன்றி வேறறியார். அனைவரையும் அரவணைப்பதையே தன் வாழ்வாக்குபவர். காலத்துக்குக் காலம் ஏற்படும் அழிவுகளால் அல்லலுறுவோர் அறவழிக் குழுவின் பயனாளிகள்.
1983 இனக் கலவரமாயிலென், 2003 ஆழிப் பேரலையாயிலென், துன்புற்றோர் துயர் போக்க அறவழிக் குழு அங்கிருக்கும். நான் தங்கியுள்ள அறவழி அலுவலகம் அந்த நீண்ட துயர் துடைக்கும் பயணத்தின் விளைவு.
ஆண்டுக்குத் தோராயமாக 2 கோடி ரூபாய்க்கு நிதித் திட்டம். யாவும் நன்கொடைகள், அதுவும் ஐரோப்பிய, வட அமெரிக்க, ஆத்திரேலிய நலம்பேண் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடைகள். இந்தியக் காந்தீய நிறுவனங்களுடன் அறவழிக் குழுவினர்க்குத் தொடர்பிருப்பினும் நிதி உதவி ஏதும் தமிழகத்திலிருந்தோ, இந்தியாவிலிருந்தோ பெறமுடியவில்லை.
முதலாவது நிகழ்வு:
தந்தையரை இழந்த 47 சிறுவர்களுடன் அறவழி அலுவலகத்தில் 02.09.2010 காலை கலந்துரையாடல். நான்காவது ஈழப் போரின் இறுதிக் கால அழிவுகளில் தந்தையரை இழந்த சிறுவர்களே யாவரும்.
கல்விக் கட்டணமாக ஒவ்வொருவருக்கும் ரூ.300, பயிற்சிப் புத்தகம் எழுதுகோல், பற்பசை, சவர்க்காரம் உள்ளிட்ட பொருள்கள், நன்கொடையாளரிடம் பெற்றவற்றைப் பயனாளிகளான சிறுவருக்கு வழங்கும் பணி என்னதாயது. தென்மராட்சி அன்பர்கள் பிரித்தானியாவிலிருந்து அனுப்பிய நன்கொடை. யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்கு நிலப் பகுதியே (தென்மர் + ஆட்சி =) தென்மராட்சி. சாவகத்திலிருந்து மணிமேகலை காலத்தில் புண்ணியராசனுடன் வந்தவர் இன்று வரை வாழ்ந்துவரும் சேரியே சாவகச்சேரி. தென்மராட்சியின் தலைநகர் சாவகச்சேரி. மேற்கே நாவற்குழி தொடக்கம் கிழக்கே இயக்கச்சி வரை தென்மராட்சி.
தென்மராட்சி அன்பர்கள் வழங்கிய நன்கொடைகளைத் தந்தையரை இழந்த அச்சிறுவர்களிடம் கையளித்த ஒருமணி நேரமும் என் கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்துகொண்டிருந்தது. ஒவ்வொருவராக அழைத்தேன். பெயர், வயது, முகவரி, இழப்பின் விவரம், இன்றைய நிலை… யாவற்றையும் கேட்டறிந்தேன். அனைவரையும் ஒன்றாக இருத்தி, உற்சாமூட்டும் சொற்களை அவர்களுக்காக்கினேன்.
அழிவிலும் உண்டு ஆக்கம் என்ற வள்ளுவரின் வாக்கை எடுத்துக் கூறினேன். ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் உணர்வை ஊட்ட அபிராமிப் பட்டர் துணை நின்றார். மனதில் உறுதி வேண்டும், வாக்கினில் இனிமை வேண்டும் என்ற தொடரைப் பாரதி வாக்காக்கினேன். திருமூலரின் மூச்சுப் பயிற்சி வரிகளைக் கூறி, உயிர் வாழ்வுக்கு மூச்சின் துணையைக் காட்டி, செயல்முறை விளக்கமாக்கினேன். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்…. பணிவோம் அல்லோம் என்ற அப்பரின் வரிகளைத் துணைகொண்டேன்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த குழந்தைகள் என்னைச் சுற்றின, கைகளைப் பற்றின, கட்டிப் பிடித்தன, என்னுடனேயே ஒன்றின. உணர்வுப் பிழம்பாக்கின. அவர்களுள் பலர் மீண்டும் முகாமுக்குள் தாயாரிடம் போகவேண்டிய கட்டாயம். சிலர் குடிசைகள் அமைத்து வாழ்கின்ற தாயாரிடம் செல்லும் நிலை. நிச்சயமற்ற உடனடி எதிர்கால வாழ்வு அவர்களுக்கு!
அன்று மாலை கவிஞர் இராதேயனும் நானுமாக, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விளையாட்டுத் திடலில் வீரகேசரி இதழின் 80ஆவது ஆண்டு விழா நிகழ்வாக நடந்த தமிழிசை நிகழ்வுக்குச் சென்றோம். சீர்காழி சிவசிதம்பரத்தின் இசைக் கச்சேரி. நிகழ்ச்சி முடிந்ததும் அவரைச் சந்தித்தேன். காந்தளகம் ஐயா வாருங்கள் எனப் பாசத்துடன் அழைத்தார். பேசினோம்.
இரண்டாவது நிகழ்வு:
ஆத்திரேலியாவில் வாழும் தென்மராட்சி அன்பர்கள் வழங்கிய நன்கொடைகளைத் தந்தையரை இழந்த சிறுவர்களுக்கு வழங்கும் நிகழச்சி 03.09.2010 காலை அறவழி அலுவலகத்தில். 02.09.2010இல் வந்த சிறுவர் அல்லாத 57 சிறுவர்களே பயனாளிகள். சீர்காழி சிவசிதம்பரத்துடன் காலையில் தொலைபேசியில் பேசினேன், நிகழ்ச்சிக்கு அழைத்தேன். வருவதாக உடன்பட்டார். உரிய நேரத்துக்கு வந்தார். அந்த அன்பளிப்புகளைச் சிறுவர்களுக்கு வழங்கினார், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… எனத் தொடங்கும் பாடலைச் சிறுவர்களுக்காகத் தன் வெண்கலக் குரலில் பாடி மகிழ்வித்தார்.
நான்காவது ஈழப் போரின் இறுதிக் காலத்தில் காயமுற்ற இளைஞர்களுக்கு வாழ்வாதாரப் பயிற்சிகளை அறவழிக் குழு வழங்குகிறது. கனடிய உலகப் பல்கலைக்கழக நிறுவனம் வழங்கும் நிதியுடன் அப்பயிற்சியைப் பெறும் இளைஞர்களைச் சீர்காழி சிவசிதம்பரம் சந்தித்தார், ஊனமுற்றவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்தச் சிறுவர்களுட் பலர் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தென்மராட்சிக்குள் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள். தென்மராட்சிக்குள் வந்தவர்களுக்கு விருந்தோம்பும் பண்புடன் வெளிநாட்டில் வாழ் தென்மராட்சி அன்பர்கள் இந்தப் பணியைத் தொடர்ந்து தொண்டாக்கி வருகின்றனர். இந்தச் சிறுவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையை ஊட்ட, அஞ்சேல் என ஆதரவுக் கரம் நீட்ட, உலககெங்கும் பரந்து வாழும் தென்மராட்சி அன்பர்கள் தொடர்ந்து தொண்டாக்குகின்றனர்.
மூன்றாவது நிகழ்வு:
கனடிய உலகப் பல்கலைக்கழக நிறுவனத்தின் உதவியுடன் பயிற்சிபெறும் இளைஞர்களின் விதவைகளான தாய்மார்களுக்கு உடுதுணி மற்றும் ஆடைகளைக் கணடாவிலிருக்கும் திரு. வ. ச. துரைராசா அனுப்பியிருந்தார்.
1979இல் என்னிடம் பயிற்சிபெற்ற அவர், அறவழிக் குழுவின் தலைவராக 1988 வரை உழைத்தவர். அவரது அறவழி நோக்குடன் பிறருக்கு எழுந்த முரணால் உயிரச்சம் காரணமாய்க் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். அவரது புலப்பெயர்வுக்கு நான் அப்பொழுது உதவினேன். அங்கு சென்றாலும் அவரது நினைவுகள், அறவழிக் குழுவுடன் ஒன்றியன.
அவர் அனுப்பிய உடுதுணிகளைக் கையளிக்கும் பணி 04.09.2010 அன்று காலை எனதாயது.
அத்தாய்மார்கள், கணவர்களை நான்காவது ஈழப் போர்க் காலத்தில் இழந்தவர்கள். சிலர் கூலி வேலை, சிலர் தையல் வேலை, சிலர் பொரித்த உணவு தயாரிக்கும் வேலை, சிலர் வீட்டு வேலை எனத் தம் உடல் உழைப்பை நம்பிய வாழ்வாதாரத்துடன் நிச்சயமற்ற எதிர்காலத்தை ஏக்கத்துடன் நோக்கி வாழ்பவர்.
அவர்களுட் சிலர் மறுமணமாகும் வயதினர். ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை பெருகிய போர்ப்பின் எழும் வழமையான வரலாற்றுச் சூழ்நிலை அத்தாய்மார்களின் மறுமண எதிர்காலத்துக்கு உற்சாகமானதாக அமையவில்லை.
தொண்டர்தம் பெருமை:
2010 செப்டம்பர் திங்களின் 2, 3, 4 ஆகிய இந்த மூன்று நாள்களும் அறவழி அலுவலகத்தில் நெஞ்சத்தை நெகிழ்விக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர் அறவழிக் குழுச் செயலாளர் திருமிகு மு. க. சீவகதாசர். அவருக்கு உறுதுணையாக, திருமதி லோகேசுவரி, செல்வி சாந்தி, திருமிகு ராசன் ஆகியோர் இருந்தனர்.
அறவழி அலுவலக வளாகத்தில் இரண்டு மாடிக் கட்டடத்தில் அலுவலகம், நூலகம், கணினிப் பயிலகம் உள்ளன. அருகிலுள்ள பரந்த தொழிற் பயிற்சிக் கூடத்தில் உலோக ஒட்டுப் பயிற்சி, மின்கம்பி இணைப்புப் பயிற்சி, கணினி திருத்தும் பயிற்சி, வானொலி – தொலைக்காட்சி திருத்தும் பயிற்சி, உந்தீருருளி திருத்தும் பயிற்சி யாவும் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன. அறவழிக் கலையரங்கத்தில் கூட்டங்களும் கலைநிகழ்ச்சிகளும் பயனாளிகளுக்கான வழங்கல் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
September 6, 2010

Friday, April 29, 2011

தங்கம் ஜெகதலப் பிரதாபன்


தம்பி ஆனந்தம் 70ம் ஆண்டு நிறைவடைகின்றார் என்றதும் எனது உள்ளத்தில் பசுமையான நினைவுகள்.  அவரைச் சிறுபிள்ளையாக முதன்முதல் கண்ட காட்சி கண்முன் தோன்றுகிறது.
1947ஆம் ஆண்டு என் தந்தையார் மழவராயர்,  மலாயாவில் வாழ்ந்தது போதும் எனக் கருதினார்,  தாய் நாடு திரும்ப அவாக் கொண்டார்.  எனவே நாங்கள் இலங்கைக்கு வந்தோம்.
இலங்கையில் மறவன்புலவு எங்கள் கிராமம்.  வானம் பார்த்த நெல் விளையும் பூமி.  வயல்களோடு ஆங்காங்கே தென்னையும் பனையும் வளர்ந்து காணப்படும்.  வயல்களின் நடுவே மண்மேடுகள்.  அம்மேடுகளில் அங்கொன்று இங்கொன்றாகக் குடிமனைகள் காட்சியளிக்கும். 
அறுவடைக்குப் பிந்திய காலங்களைத் தவிர எங்கள் வீட்டிற்கு வாகனங்கள் வர வழி கிடையாது.  வரப்பு வழியாக நடந்து சென்றால் சிறிது தூரத்தில் ஒரு வீதியை வந்தடையலாம். 
அந்தத் தெருவில் எங்கள் குலதெய்வமாகிய வள்ளக்குளத்துப் பிள்ளையார் கோவிலில் குடிகொண்டுள்ளார். கோவிலையடுத்து வள்ளக்குளம் என்ற அழகிய தாமரைத் தடாகம்,  கண்டவர் மனதைப் பரவசங் கொள்ளச் செய்யும்.  
கோவிலுக்கு அருகே எனது அப்பாச்சியின் (தந்தையின் தாயார்) ஒன்றுவிட்ட  சகோதரியும் அவரது ஒரே மகன் கணபதிப்பிள்ளையும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர்.
உறவுமுறையில் கணபதிப்பிள்ளை எனக்கு குஞ்சியப்பு (சித்தப்பா) ஆவார்.  முன்பு ஒரு முறை எனது மூத்த சகோதரி ஊருக்கு வந்தபொழுது மாம்பழங்கள் கொண்டுவந்ததால் கணபதிப்பிள்ளைக் குஞ்சியப்புவை  மாம்பழக் குஞ்சியப்பு என்று மூத்த அக்கா அழைத்ததால் நாங்களும் அவரை அவ்வாரே அழைக்கலானோம்.
ஒரு மாலைப்பொழுதில் மாம்பழக் குஞ்சியப்புவும் குஞ்சியாச்சியும் அவர்களது மூன்று பிள்ளைகளும் தின்பண்டங்கள் கொண்டு ஊருக்கு வந்துள்ள எங்களைக் காண வரப்புவழியாக நடந்து வந்தனர்.
தேவி,  சாந்தா என்ற இரு சகோதரிகட்கும் இடைப்பட்ட அருமையான பிள்ளை தம்பி ஆனந்தம். 
அப்பாவின் சாயலில் உடல் மெலிவு,  ஒடுக்கமான முகம்.  நல்ல நிறம்.  அப்பாவின் அதே புன் சிரிப்பு. இவையெல்லாம் ஒன்றினைந்து அமைந்த ஒரு அழகுச் சிறுவன் தம்பி ஆனந்தம். 
இன்று அவர் வளர்ந்து,  பேரப்பிள்ளைகளையும் கண்டு 70 ஆண்டுகள் நிறைவை எய்தியுள்ளார்.
தம்பியின் குணங்களை நோக்கும்பொழுது அவரது அன்பும், பணிவுமே என்னை முதற்கண் ஈர்த்தன. எவரோடும் அன்பாகப் பழகுவதும், மூத்தோரைக் கனம்பண்ணுவதும், அவர்களிடத்துப் பணிவாக நடந்து கொள்வதும் தம்பியின் இயற்கையான குணமாகும்.
அக்கா என்று அவர் என்னை அழைத்தால் மீண்டுமொரு முறை அழைக்கமாட்டாரா எனத் தொனிக்கும்.
 உற்றார் உறவினர், நண்பர் ஆகியோரின் தொடர்புகளை மேற்கொள்வதில் தம்பி அதி சிறந்தவர். எவ்வளவு இடைஞ்சல்களுக்கு இடையிலும் நேரத்தை ஒதுக்கி அவர்களைக் கண்டு நலன் விசாரித்துச் செல்லும் தன்மையவர்.
தமிழ் என்றால் தம்பிக்கு உயிர் என்றே கூறுவேன், எங்கள் நாட்டில் தனிச் சிங்கள மசோதா நிறைவேற்றப்பட்டபொழுது அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துத் தமிழுக்கு சம உரிமை வேண்டி நின்றவர்களில் தம்பியும் ஒருவராவார்.
தம்பியின் பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்பொழுது பள்ளியில் கற்பிக்கப்பட்ட ஆங்கில மழலைப் பாடல்களைத் தமிழாக்கம் செய்து சொல்லிக்கொடுத்தார் என நான் அறிந்ததுண்டு. தமிழறிவைப் பிள்ளைகளுக்கு ஊட்டுவதில் மிகவும் சிரத்தை கொண்டவர்.  
தமிழ்ப் பண்பாட்டைப் பேணுவதிலும் மிக்க அவாக் கொண்டவர் என்பதற்கு அவரது மகன்கூறிய ஒரு சம்பவம் சான்று.  
சென்னையில் ஒரு கலை கலாச்சார நிகழ்ச்சி. விழா மண்டபத்தில் தந்தை நிற்கிறார். மகன் பிஞ்ஞகன் மேலை நாட்டு உடை அணிந்து வருகிறார். தந்தை, வீட்டிற்குச் சென்று வேட்டி அணிந்து வா என்று கண்டிக்கிறார்.
இவ்வாறு நமது பண்டைய பண்பாடுகளில் நின்றும் வழுவாது தனது பிள்ளைகளிடத்தும் மிகவும் கட்டுபாட்டுடன் நடந்து கொள்வார்.
அவரது தமிழ்பற்றின் உச்ச நிலையாக அமைந்தது காந்தளகம். 
இலங்கையர் ஒருவர் தமிழ் நாட்டில் ஒரு தமிழ்ப் பதிப்பகத்தை அமைத்து, நவீன முறைகளைக் கையாண்டு அதன்மூலம் அவர் தமிழுக்கு ஆற்றும் சேவையைக் கண்டு இலங்கைத் தமிழராகிய நாம் பெருமை கொள்ளாது இருக்க முடியாது.
தம்பி ஆனந்தம் குடும்பத்தினருடன் சென்னையில் வாழ்ந்து வந்தார். 
1989-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் தல யாத்திரை செய்ய விரும்புகிறேன் என்று கூறிய பொழுது மறு சிந்தனையின்றி அகமகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றார்.
தம்பியின் மனைவியை நான் மச்சி என்று அழைப்பதுண்டு. தம்பி, மச்சி பிள்ளைகள், முருகா, பிஞ்சகன், கயல்விழி, சிவகாமி யாவரும் என்னை அன்போடு உபசரித்தனர். பிள்ளைகளுக்கு என்னை முன்பின் தெரியாது. எனினும் அவர்கள் என்னுடன் பழகியமை அன்பு பாராட்டியமை. வேண்டிய உதவிகளைச் செய்தமை யாவற்றையும் என்னால் மறக்கமுடியாது.
அவர்கள் இல்லம் இலங்கையிலிருந்து வரும் நண்பர்களுக்கும் உறவினர்க்கும் ஒரு சரணாலயமாக அமைந்ததெனின் அது மிகையாகாது.
 இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க தம்பியின் குடும்பம் பண்பாட்டைக் கடைப்பிடித்து வருவோர்க்கு விருந்தோம்பி உபசாரம் செய்து வருகிறது.
எனது தல யாத்திரைக்கு ஒரு சீரானதும் செலவைக் கட்டுப்படுத்துவதுமான திட்டத்தைக் கச்சிதமாய் வகுத்து தந்தார். அவரிடம் காணப்பட்ட சமயோசித புத்தியும், திறமையுமல்லவா அவர் இலங்கை அரசாங்கத்திலும் FAO/UNஇலும் உயர் பதவி வகிக்க உதவின.
2005ம் ஆண்டு நான் சென்னைக்கு வந்தபொழுது குஞ்சியாச்சி மகனுடன் வாழ்ந்து வந்தார். தம்பியின் பிள்ளைகள் யாவரும் தத்தம் பருவத்திற்கேற்ப மணமுடித்துப் பெற்றார் மனைவிட்டுப் பறந்து சென்று பிற நாடுகளில் தம் கூடுகளை அமைத்துக் கொண்டனர். மச்சியும் ஒரு மகளுக்கு துணையாக அமெரிக்கா சென்றிருந்தார்.
குஞ்சியாச்சி நோயுற்றிருந்தார். தாய்க்குத் தனது கையால் உணவு சமைத்து வைத்து, தாயாரைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருந்த தாதியிடம் பொறுப்பை விட்டுக் காந்தளகம் செல்வார். மாலையில் வந்தவுடன் இன்முகத்துடன் தாயாரின் நலன் விசாரித்துவிட்டுத்தான் மற்றக் கருமங்களைத் தொடங்குவார்.
மகனைக் கண்டவடன் தாயின் முகம் ஆதவனைக் கண்ட தாமரை போல் மலரும். இராப்போசனத்தையும் தானாகவே செய்து பரிமாறுவார். அக்கா நான் அம்மாவை ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்துப் பார்க்கிறேன் என்று தம்பி கூறும்பொழுது தாயார் கண்ணைக் கூசிச் கூசிச் சிரித்து இன்புறுவார்.
தாயின் சிறந்த கோயிலில்லை என்பதற்கேற்ப தாயை தெய்வமாகவே மதித்து வந்தார். அவரின் மனங்கோணாது மி்க்க அன்போடு அவரது கடமைகளை அவர் இவ்வுலகைவிட்டு நீங்கும் வரை செய்வதோடு அவரது ஈமக்கிரிகைகளையும் செவ்வனே செய்து முடித்தார்.
பெற்றாருக்குச் செய்யும் தொண்டு மிகவும் மகத்தானது. கடமைக்காகப் பெற்றாரைப் பார்பப்பவர் பலர் ஆனால் தம்பி ஆனந்தம் தனது கடமையைக் கண்ணுங் கருத்துமாகக் கொண்டு அன்போடு ஆற்றிய உத்தம புத்திரன் ஆவார்.
தம்பி ஆனந்தம் நற்சுகத்துடன் நீடுழி காலம் நலமே வாழ எல்லாம் வல்ல வள்ளக்குளத்துப் பிள்ளையார் அருள் புரிவாராக.
ஆக்கம் : தங்கம் ஜெகதலப் பிரதாபன்.
11/l / BLOCK
GOVT FLATS
BAMBALAPITIVA
SRILANKA