முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 6, 2011

ஆறுமுக நாவலர் தந்த சைவத் தமிழ்ச் சூழல்

உலகம் முழுவதும் தமிழர். 41 நாடுகளில் கணிசமான தொகையில் தமிழர். மேலும் 20 நாடுகளில் சிறு சிறு தொகைளில். மொத்தமாக 2041 (2010)இல் 9.5 கோடித் தமிழர். இவர்களுள் 7 கோடித் தொகையினர் சைவத் தமிழர்.
கடந்த 200 ஆண்டுகளாக, தென்னிந்தியாவுக்கும் ஈழத்துக்கும் அப்பால், 14 நாடுகளில் புதிதாக 4,500 தமிழ்ச் சைவக் கோயில்கள். கடந்த 25 ஆண்டுகளில் மேலும் 20 நாடுகளில் புதிதாக, 500 தமிழ்ச் சைவக் கோயில்கள். தென்னிந்தியாவுக்கும் ஈழத்துக்கும் அப்பால், உலகெங்கும் தோராயமாக, 5,000 தமிழ்ச் சைவக் கோயில்கள்.
கடந்த 1,000 ஆண்டுகளாக, தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்கொக்குவில் அரசப் பூங்காவில் நடைபெறும் ஊஞ்சல் விழாவில் தோடுடைய செவியன் எனத் தொடங்கும் தேவாரம் ஓதுதல். தாய்லாந்து அரசரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை ஓதுதல்.
கடந்த 200 ஆண்டுகளாக, கிழக்கே பிஜி நாடு தொடக்கம், மேற்கே கரிபியன் தீவுக் கூட்டம் வரை சூரியன் மறையாமலே கேட்டு வருவது தேவார, திருவாசகங்களை, திருப்புகழை, காவடிச் சிந்துகளை.
இன்றோ, உலகெங்கும் 30 நாடுகளில் திருமுறைகளையும் சைவத் தமிழ் பாக்களையும் பயிற்றுவிக்கும் 25,000 பாடசாலைகள். இங்கே பயிலத் தோராயமாக ஏழு இலட்சம் சைவத் தமிழ் மாணவ மாணவியர் வருகின்றனர்.
ஹவாய்த் தீவில் அமைந்துள்ள சிவன் கோவிலில் ஓதுவார் இசைக்கும் தேவார திருவாசகங்களையும் சேர்த்துக் கொண்டால், சூரியன் மறையாத தமிழ்ச் சைவச் சூழலில் பூமிப் பந்து சுழல்வதை  உணரலாம்.
இவ்வாறு உலகெலாம் உணர்ந்து ஓதுவாற்கு, வேண்டுவார் வேண்டுவதை ஈயும் சிவபெருமான், உலகச் சைவத் தமிழ்ச் சூழலுக்குத் தலைவன்.
முழுமை என உண்டா? முழுமையை அடையலாமா? என்ற வினாக்களின் விடையே சிவநெறி. முழுமையானவர் சத்தியும் சிவனும் ஆய கடவுள். முழுமையற்றது உயிர். முழுமையை நோக்கிய பயணமே பிறவிகளுக்கு ஊடான உயிர்க் கூர்மை. முழுமையை நோக்கிய உயிரின் பயணத்தைத் தடுப்பன மலங்கள். மலங்களின் தடைகளைக் கடக்க, வினைகள் பாற, புலன்களின் வேட்கையைத் தணிவிக்க, மனத்தை வழிப்படுத்த, பார்வதி உடனுறை சிவபெருமானே துணை நிற்கிறார் என்ற அறிவுசார் நிலையே சைவத் தமிழ்ச் சூழலாம்.  
உலகெங்கும் சைவத் தமிழ்ச் சூழலை உருவாக்கி அருள் பெருக்கிய பெருமுயற்சிக்கு நீண்ட வரலாறுண்டு.
புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கி, மேலான நன்னெறி ஒழுக, சைவ நெறிக்கு ஆட்படுத்தக் காலத்துக் காலம், அருளாளர் பெருமக்கள் தொண்டாற்றி வந்துள்ளனர்.
பரசமயகோளரியாகிய திருஞானசம்பந்தர், அடக்குமுறைக்குப் பணிவோம் அல்லோம் என வாழ்ந்த திருநாவுக்கரசர் போன்ற சைவத் தமிழ்ப் போரளிகளின் வழியில் 188 ஆண்டுளுக்கு முன் (திபி 1853 மார்கழியில், 18.12.1822) யாழ்ப்பாணத்து நல்லூரில் பிறந்தவர் ஆறுமுக நாவலர்.
புலமை வளம், பொருள் வளம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். எனவே வாழ்க்கை அவருக்குப் போராட்டமாகவில்லை. ஆனால் போராட்டத்தையே வாழ்க்கையாக்குவதற்கான புறச் சூழல் ஆறுமுக நாவலருக்கு இருந்தது.
சைவத்தையும் தமிழையும் தம் இரு கண்களாகப் போற்றினார். அக்காலச் சூழலுக்கு ஏற்றவாறு சைவத் தமிழ்ச் சூழலைப் பார்த்தார். எதிர்காலத்தில் உலகம் முழுவதும் சைவத் தமிழ்ச் சூழல் அமையுமாறு வழி சமைத்தார்.
பெரிய புராணம் ஒரு கட்டுக் கதை என்றார் தமையனார் தியாகராசா. வெகுண்டெழுந்தார் ஆறுமுக நாவலர்.  கத்தி ஒன்றை எடுத்தார். மூத்தவர், தமையனார் என்றெல்லாம் பாரார். வெட்ட முனைந்தார், இளமைப் பராய ஆறுமுக நாவலர். அதன் பின் தியாகராசருடன் முகம் கொடுக்கா விரதமிருந்தார். தியாகராசர் இறக்கும் காலை, ஆறுமுக நாவலரை அழைத்தார், நடந்ததற்கு வருந்தினார்.
ஆறுமுக நாவலரின் கொள்கைக்கு இஃது ஓர் எடுத்துக் காட்டு. சைவத் தமிழ்ச் சூழல் பெரிதா, குடும்பம் பெரிதா? சைவத் தமிழ்ச் சூழலே ஆறுமுக நாவலருக்குப் தேவையானதாகத் தெரிந்தது.
 யார்? எவர்? எனப் பாரார், எந்தச் சூழல்? எந்தத் தேவை? எனப் பாரார். சைவத் தமிழ்ச் சூழலுக்குரியதை, சிவநெறி வளர்ச்சிக்குரியதை மட்டுமே நோக்கினார் ஆறுமுக நாவலர்.
அவருடைய போராட்டங்களின் பின்னணி இதுவே.
ஆறுமுக நாவலருக்கு 25 வயது. யாழ்ப்பாணத்து நல்லூர் முருகன் கோயிலில் சிவாகம விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற போராட்டத்தைத் தொடக்குகிறார். 57 வயதில் அவர் இறக்கும் வரை அந்தப் போராட்டத்தைக் கைவிடவில்லை.
கருவறையில் முருகனின் சிலை அமைய வேண்டும். கோயிலில் உயிர்ப் பலி கொடுக்கக் கூடாது. சிவாகம விதிகளைக் கோயிலில் பின்பற்றவேண்டும். இவை போராட்டக் கரு.
உயிர்ப் பலி இன்றில்லை. முருகன் சிலை கொண்ட கருவறைக்காகக் கரூரில் இருந்து கொண்டு சென்ற கருங்கற்கற்களால் கட்டிய கட்டடம் முடிவடையவில்லை. சில ஆண்டுகள் முன்பு வரை முற்றுப்பெறாக் கோயிலாக இருந்த அக் கருவறையின் சான்றுகள் கூட இன்று நல்லூர் முருகன் கோயிலில் இல்லை.
ஆனாலும் ஆறுமுக நாவலரின் முயற்சியால் அவரது 56ஆவது வயதில் தொடங்கிய வழக்கு, அவர் இறந்து 40 ஆண்டுகளின் பின் தீர்ப்பாகி, நல்லூர் முருகன் கோயில் கணக்குகளை ஆண்டுதோறும் நீதிமன்றத்துக்குக் கொடுக்கும் நிலை வந்தது.
தேவதாசிப் பெண்களைத் தமிழ்நாட்டிலிருந்து அழைத்து வந்து ஈழத்துக் கோயில் திருவிழாக்களில் நடனமாடிக் களிக்கும் அடியார்களை ஆறுமுக நாவலர் சாடினார். அந்த வழக்கத்தை விட்டுத் திருமுறைகளைப் பாராயணம் செய்யும் வழக்கத்தை ஊக்குவித்து பெருமளவு வெற்றியும் கண்டார்.
ஆறுமுக நாவலருக்கு 41 வயது. சிவ தீட்சை பெறாத வைதிக பிராமணர்கள், கருவறைக்குள் சென்று திருமேனி தொட்டுப் பூசை செய்யலாகாது,  வழிபடலாகதென்பது ஆறுமுக நாவலரின் நிலை. அந்தப் பணியை ஆதி சைவர்களான சிவாச்சாரியார்களே செய்யலாம் என்றார். சுமார்த்தர்களிடம் திருநீறு வாங்குவது பொருத்தமானதல்ல என்பது அவர் வாதம். ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் இக்கருத்துகளைப் பரப்பி வெற்றிகண்டார்.
ஆறுமுக நாவலருக்கு 47 வயது. சிதம்பரத்தில் தில்லையில் தீட்சிதர்கள் வேதவேள்விக்காக உயிர்ப்பலி கொடுக்க முயல்கின்றனர். ஆறுமுக நாவலர் ஒப்பவில்லை. அங்குள்ளவர்களை அழைக்கிறார். கண்டிக்கிறார். தீட்சிதர்களின்  முயற்சி தோல்வியில். இதனால் ஆறுமுக நாவலர் மீது தீட்சிதர்கள் கோபம் கொள்கின்றனர்.
ஆறுமுக நாவலருக்கு 49 வயது. திருமுறைகளே அருட்பாக்கள் என ஆறுமுக நாவலர் கருதினார். சைவத் தமிழ்ச் சூழலுக்குரிய அருட்பாக்கள் வேறு எதுவும் இல்லை என்றார். இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை திருஅருட்பாக்கள் என்றவர்களைக் கண்டித்தார். இந்த வாதம் நெடுங் காலம் தொடர்ந்தது. ஆறுமுக நாவவருக்குப் பின்னும் அவரின் மாணவர் பலர் இந்த விவாதத்தினைத் தொடர்ந்தனர்.
சைவத் தமிழ்ச் சூழலின் எழுச்சிக்கும் தொடர்ச்சிக்கும் மீள்வளர்ச்சிக்கும் மக்களிடையே அறிவு பெருகவேண்டும் என நாவலர் கருதினார். சைவத் தமிழ் நூல்களை அக்கால மக்கள் எளிதில் புரியுமாறு எழுதினார், பதிப்பித்தார். தற்காலப் பதிப்புலகின் தந்தை, தமிழ் வசன நடையின் முன்னோடி என ஆறுமுக நாவலரைப் பாராட்டுவர்.
ஆறுமுக நாவலர் காலத்தில் சைவத் தமிழ்ச் சூழலின் மிகப் பெரிய சவாலாக, கிறித்துவ மதமாற்றம் நடைபெற்று வந்தது. ஈழத் தமிழர்கள் பலர், பணத்துக்காகவும் பதவிக்காகவும் கிறித்துவ மதத்தைக் கைக்கொண்டனர்.
கிறித்துவ மதமாற்றத்துக்கு எதிராக ஆறுமுக நாவலர் நடத்திய போராட்டங்கள் பல.
சைவத் தமிழ்ச் சூழலின் பெருமைகளை விளக்கி, நூல்கள் வெளியிட்டார். கிறித்துவ மதத்தின் கொள்கைகளில் உள்ள குறைபாடுகளை விளக்கிப் பிரச்சாரம் செய்தார். சைவப் பாடசாலைகளை உருவாக்கினார். சைவ அமைப்புகளை வளர்த்தார்.
தனது நாவன்மையாலும் எழுத்து வன்மையாலும் கிறித்துவ மதமாற்றத்தைப் பெரிதும் தடுத்து நிறுத்தினாார்.
இவரது போராட்டங்களில் இவருக்குத் துணையாக, இவரது மாணவர்கள் பணி புரிந்தனர். காசிவாசி செந்திநாதய்யர், சதாசிவம்பிள்ளை, பொன்னம்பலம்பிள்ளை, சி. வை. தாமோதரம்பிள்ளை, கறோல் விசுவநாதபிள்ளை என இவர் பின்னால் அணி திரண்டோரின் எண்ணிக்கை கணக்கிலடங்கா.
போராட்டங்களையே வாழ்வாகக் கொண்டு 57 ஆண்டுகள் வாழ்ந்தார். திபி 1910 கார்த்திகை மகத்தன்று (5.12.1879) சிவனடிப்பேறு எய்தினார்.
கடந்த 25 ஆண்டுகளாக ஏறத்தாழ 30 நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர், சென்ற இடமெல்லாம் சைவத் தமிழ்ச் சூழலை வளர்த்து வருகின்றனர் எனில், ஆறுமுக நாவலர் தொடக்கிவைத்த சைவ மறுமலர்ச்சிப் பணியே காரணமாகும். 
ஆறுமுகநாவலர் வாழ்ந்த காலத்தில் உலகெங்கும் ஐரோப்பிய குடியேற்ற ஆட்சி மேலாதிக்கத்துக்கு எதிரான இயங்கங்களை முன்னின்று நடத்தியோர் சிலர்.



நிலப்பகுதி
பெயர்
Name
திபி ஆண்டு
திபி ஆண்டு
பொது
ஆண்டு
பொது
ஆண்டு
இந்தியா
இராசா இராம் மோகன்ராய்
Raja Ram Mohan Ray
1806
1864
1775
1833
பிரான்சு
பிரஞ்சுப் புரட்சி
French revolution
1820
1789
பிரித்தானியா
கார்ல் மார்க்சு
Karl Marx
1849
1914
1818
1883
இந்தியா
ஈசுவர சந்திர பந்தோபத்தியாயா
Iswara Chandra Bandopathyaya
1851
1922
1820
1891
இலங்கை
ஆறுமுகநாவலர்
Arumuka Naavalar
1853
1910
1822
1879
உருசியா
சார் நிக்கலசுக் காலப் புரட்சி
Tsar Nicholas
1856
1886
1825
1855
அமெரிக்கா
அடிமைத்தனம் நீக்கும் சங்கம்
Anti slavery society
1864
1833
அமெரிக்கா
பெண்விடுதலை
Womens liberation
1864
1833
யப்பான்
மத்தசுகாத்தா மசாயோசி
Matsukata Masayoji
1866
1955
1835
1924
பிரித்தானியா
மக்கள் பட்டயம்
Peoples Charter UK
1869
1838
யப்பான்
இத்தோ இரோபாமி
Ito Hirobami
1872
1940
1841
1909
சீனா
காங்கு யூவை
Kang Ywwei
1889
1958
1858
1927
அமெரிக்கா
ஆபிரகாம் லிங்கன்
1892
1896
1861
1865
இலங்கை
அனாகரீக தருமபாலா
Anakarika Dharmapala
1895
1964
1864
1933
பிரித்தானியா
கிளாத்தோன் சீராக்கம்
Gladstone reforms
1895
1931
1864
யப்பான்
மன்னராட்சி மீட்பு
Imperial Rule restoration
1899
1931
1868
இந்தியா
தயானந்த சரசுவதி
Dayananda Saraswathi
1906
1931
1875
அமெரிக்கா
தியோசொபிக்கல் சங்கம்
Theosophical Society
1906
1931
1875
செவ்விந்தியர்
Red Indians
ஆத்திரேலியா
கூரி
Koori
ஆபிரிக்கா
நீகிரோவர்
Africans
ஆபிரிக்கா
வட ஆபிரிக்கர் இசுலாமியராதல்
Islam in sub Saharan Africa

வட கடல் மீனவர்களுக்கு வளமான எதிர்காலம்


17.4.2011 அன்று, சிங்கள மீனவர் பதின்மரை ஆந்திரப் பிரதேசத்தின் மேற்குக் கோதாவரி மாவட்டத்திற்குக் கிழக்கே இந்தியக் கடலோரக் காவற்படை கைது செய்தது. இந்தியப் பொருளாதார வலையத்துள் மீன் பிடித்தார்கள் என்ற குற்றச் சாட்டில் கைது செய்தது.


இலங்கை மீனவர், பல நாள்கள் கடலில் தங்கக்கூடிய மீன்பிடிக் கப்பல்களில் திருகோணமலையில் இருந்து புறப்பட்டு வடக்கே வங்காள விரிகுடாவில் இந்தியப் பொருளாதார வலையத்துள் வந்து மீன்பிடித் தொழில்செய்கின்றனர்.
அந்தக் கப்பல்களில், எரிபொருள், மின்சாரம், தொலைத்தொடர்பு, புவிநிலைஅறிகருவி, பொழுதுபோக்குக்காணொலி, கேட்பொலி, உலக வானொலி, தங்கும் வசதி, கழிப்பறை வசதி, சமையல் வசதி, சமைக்க மளிகைப் பொருள்கள், ஆழ்கடல் மீன்பிடி வலைகள், பனித்தண் களஞ்சியங்கள், தப்ப மிதவைகள், தப்பப்படகுகள்,  என 15 அல்லது 20 மீனவர், மீனவர் தலைவர், கப்பல் ஓட்டுநர் தலைவர், எந்திரத் திருத்துநர் என மீன்பிடிப்படை ஒன்று பயணிக்கிறது.
வங்காள விரிகுடாவுக்குள் இந்தியப் பொருளாதார வலையத்துள் இலங்கை மீன்பிடிக் கப்பல் வரவு அண்மைக் கால உள்ளீடு.
30 ஆண்டுகளுக்கு முன் இருந்தே இந்தியப் பொருளாதார வலையத்துள் மீன்பிடிக்க வரத் தொடங்கியோர் தாய்லாந்தவர், பின்னர் தாய்வானியர், அப்பப்போ யப்பானியர், பிரஞ்சுக்காரர். அவர்கள் தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கிறார்கள்.
செயற்கைக்கோள் வழி மீன்பெயர்ச்சி, மீன்கூட்டம், காலநிலை பற்றி, அந்த அந்த நாட்டு அரசுகளே மீனவருக்குத் தகவல் சொல்ல, பன்னாட்டு மீனவக் கப்பல்கள் பொலிந்த கடலாக வங்காள விரிகுடா.
இந்தியக் கடல் எல்லையின் நீளம் ஏறத்தாழ 7,500 கிமீ. இந்தியப் பொருளாதார வலையத்தின் பரப்பளவு 21,72,000 சதுரகிமீ. கீழுள்ள வரைபடத்தில் நீல வண்ணத்தில் இந்தியப் பொருளாதார வலையப் பகுதிகள்.
  
தமிழகக் கடல் எல்லை நீளம் 1076 கிமீ. அதில் வடகடலின் கரை நீளம் 50.6% அல்லது 545 கிமீ. (நாகப்பட்டினம் 170, திருவாரூர்  20, தஞ்சாவூர்  45, புதுக்கோட்டை  39, இராமநாதபுரம் 271).
தமிழகத்தில் 442 மீனவக் குடியிருப்புகள், அதில் வடகடல் கரையோரத்தில் 224 மீனவக் குடியிருப்புகள் (நாகப்பட்டினம் 60, திருவாரூர் 04, தஞ்சாவூர் 27, புதுக்கோட்டை 34, இராமநாதபுரம் 99).
இந்த 224 குடியிருப்புகளிலும் 2,97,365 மீனவர் (நாகப்பட்டினம்1,10,000; திருவாரூர் 10,365; தஞ்சாவூர் 17,000; புதுக்கோட்டை12,000, இராமநாதபுரம் 1,48,000).
இந்த 2,97,365 மீனவரிடமும் 8,568 மீன்பிடி எந்திர வள்ளங்கள், 7,134 பாய்மரத் தோணிகள், 4,203 கட்டுமரங்கள்.
தமிழகத்தின் மொத்த மீன் உற்பத்தி ஆண்டுக்கு 360,000 மெட்றிக் தொன். வடகடலின் மொத்த மீன் உற்பத்தி 1,82,817 மெட்றிக் தொன் (நாகப்பட்டினம் 78,000; திருவாரூர் 2,000; தஞ்சாவூர் 10,900; புதுக்கோட்டை 8,500; இராமநாதபுரம் 83,417).
ஏறத்தாழ 72 இலட்சம் சதுரகிமீ. பரப்பளவுள்ள இந்தியப் பொருளாதார வலையத்துள், வட கடலின் 10,000 சதுரகிமீ. பரப்பளவுக்குள் முடங்கி மீன்பிடிக்கும் 3 இலட்சம் மீனவர்களையும் வட கடலுக்கு அப்பால் வடக்கு நோக்கி மீன்பிடிக்க அனுப்பவேண்டிய காலம் கனிந்துள்ளது.
வட கடலைத் தாண்டி, வடக்கே வங்காள விரிகுடாவுக்குள் மீன்பிடிக்க அவர்கள் போகாமல், கிழக்கே எல்லையைக் கடந்து வட கடலின் இலங்கை எல்லைக்குள் புகுந்து மீன் பிடிக்கிறார்கள்.
அவர்கள் வசமுள்ள 9,000 எந்திரப் படகுகள் ஒருநாளைக்குக் கடலில் தங்கும் வசதி கொண்டவை. மதியம் புறப்பட்டால் மறுநாள் காலை துறைக்குத் திரும்பும் வலு கொண்டவை. எனவே வட கடலின் ஆழமான கிழக்குக் கடலுள், இலங்கை எல்லைக்குள் மீன்பிடிப்பதை வழக்கமாக்கி உள்ளனர். இலங்கைக் கடற்படை இவர்களைத் தாக்குகிறது, சுட்டுக் கொல்கிறது, ஆனாலும் விடாமல் அங்கு செல்கிறார்கள், மீன்பிடிக்கிறார்கள்.
நாகப்பட்டினத்துக்கு நேர் கிழக்காக, இந்தியப் பொருளாதார வலையத்துள் 9 வலைகளை அளவோடு பயன்படுத்தினால் ஆண்டுக்கு 20,000 மெட்றிக் தொன் மீன் பிடிக்கலாம்.
கன்னியாகுமரிக்கு நேரே தெற்காகக் குமரித் தரவை பரந்து கிடக்கிறது. கடந்த நூறாண்டுகளாக, கொழும்பிலிருந்து வரும் இலங்கை இழுவைக் கப்பல்கள் இங்கே மீன் பிடித்து வருகின்றன. ஆண்டொன்றுக்கு 50,000 மெட்றிக் தொன் மீன்களை அள்ளிச் செல்கின்றன.
1976இன் இலங்கை இந்திய உடன்பாடு, 2000இன் பொருளாதார வலையம் பற்றிய உலக உடன்பாடு யாவும் இக் குமரித் தரவையை இந்தியாவின் எல்லைக்குள் தந்தபின்னரும் இலங்கைக் கப்பல்கள் இந்நாள்வரை குமரித் தரவைக்கு வந்து, சில நாள்கள் கடலில் தங்கி, இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றன.
வங்காள விரிகுடாவிலும் குமரிக் கடலிலும் இந்தியப் பொருளாதார வலையத்துள் வந்து இலங்கைக் கப்பல்கள் மீன் வளத்தை அள்ளிச் செல்கின்றன. அதே மீன்வளத்தைத் தமிழக மீனவர்கள் கொள்வதில்லை. ஏனெனில் அவர்களிடம் அதற்கான வசதிகள் இல்லை.
சில நாள்கள் கடலில் தங்கி மீன்பிடிக்கும் வசதியுடன், எரிபொருள், மின்சாரம், தொலைத்தொடர்பு, புவிநிலைஅறிகருவி, பொழுதுபோக்குக்காணொலி, கேட்பொலி, உலக வானொலி, தங்கும் வசதி, கழிப்பறை வசதி, சமையல் வசதி, சமைக்க மளிகைப் பொருள்கள், ஆழ்கடல் மீன்பிடி வலைகள், இழுவை வலைகள், பனித்தண் களஞ்சியங்கள், தப்ப மிதவைகள், தப்பப்படகுகள்,  என 15 அல்லது 20 மீனவர், மீனவர் தலைவர், கப்பல் ஓட்டுநர் தலைவர், எந்திரத் திருத்துநர் என மீன்பிடிக் கப்பல்கள் பத்து அல்லது பதினைந்தை இராமேச்சர மீனவர்களுக்குக் கொடுத்தால், அவர்கள் வட கடலுக்கு வடக்கே செல்வார்கள், பருத்தித் தரவையில் மீன் பிடிப்பார்கள்,  தெற்கே செல்வார்கள் குமரித் தரவையில் மீன் பிடிப்பார்கள்.
இத்தகைய கப்பல்கள் மட்டும் இருந்தால் போதுமா? மீன்பிடித் துறைமுகங்கள் வேண்டும். கொண்டு வரும் மீனைச் சேமிக்க அத்துறைமுகமருகே பனித்தண் களஞ்சியங்கள் வேண்டும். அங்கே கப்பல் திருத்தும் பணி மனைகள் வேண்டும். மீன்பிடியாளருக்குப் பயிற்சி வேண்டும்.
வடகலை விட்டு அக்கப்பல்கள் வெளியேற, வடக்கே கோடித் திடலிலும் தெற்கே சேதுத்திடலிலும் கால்வாய்களை ஆழமாக்கவேண்டும், தொடர்ந்து தூர்வாரவேண்டும்.
பருத்தித் தரவையும் குமரித் தரவையும் முதல்நிலை விரிவாக்கமே. தெற்கே இந்துப் பெருங்கடல் விரிந்திருக்கிறது. சுறா, சூரை மீன் வகைகள் மலிந்து கிடக்கின்றன.
பிரஞ்சு, யப்பானிய, தாய்வானிய தாய்க் கப்பல்களைச் சுற்றிச் சிறுகப்பல்கள் நிலைகொண்டு மீன்பிடிக்கின்றன. சூரை மீன் வளங்களை அள்ளிச் செல்கின்றன.
இவ்வளங்கள் யாவும் தமிழக மீனவர்களின் வேட்டைக் கடலாக மாறும் நாள்களை நோக்கிய திட்டங்களை வகுக்கவேண்டும். இந்தியப் பொருளாதார வலையத்தின் 72 இலட்சம் சதுரகிமீ. பரப்பளவு மட்டுமன்று, அதைத் தாண்டிய பொதுக் கடலாகிய இந்துப் பெருங்கடல் வளங்களும் தமிழக மீனவர்களுக்காகக் காத்திருக்கின்றன.
வட கடலுக்குள் முடங்கி, வாழ்வா சாவா என்ற வாய்ப்பான் பிழைப்பான் வாழ்வாதாரத்தை விட்டுநீங்கி, விரிந்து பரந்த கடல்வேட்டைக்காகத் தம்மைத் தயார் செய்துகொள்வதிலேயே தமிழக மீனவர்களின், சிறப்பாக வட கடல் மீனவர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

தகவல் களஞ்சியத்தின் தலைமைச் செயலகம்


மேசைக் கணிணிகள் புழக்கத்துக்கு வந்த காலம். ஆப்பிள் நிறுவனம், ஐபிஎம் நிறுவனம் இரண்டும் மேசைக் கணிணிகளை விற்பனைக்கு விட்டிருந்தன. அந்தக் கணிணிகளின் படிமக் கணிணிகளைத் தாய்வான் குழுமங்கள் மலிவு விலையில் வழங்கிய காலம்.
1984இல் என்னிடம் அத்தகைய படிமக் கணிணி ஒன்றிருந்தது. அதில் பொருத்துவதற்காகத் தமிழ் எழுத்துருக்களைத் தேடினேன். சென்னைக்கு வந்தேன். தமிழில் எழுத்துருக்கள் உண்டா எனத் தேடினேன். தலைமைச் செயலகம் சென்றேன். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை நடராசனாரைச் சந்தித்தேன்.
சென்னை அண்ணா சாலையில், தேவி - திரை அரங்க வளாகத்தில் திருவள்ளுவர் எழுத்துரு விற்பனையாகும் திசி ஆலை அலுவலக முகவரியைத் தந்தார். தமிழில் கணிணி எழுத்துருக்களை முதலில் வணிகமயமாக்கியோர் தில்லியில் உள்ள திசி ஆலை நிறுவனத்தினர். தமிழக அரசுக்கு அந்த எழுத்துருக்களை விற்பனை செய்ததாக முனைவர் அவ்வை நடராசனார் கூறி என்னை அங்கு அனுப்பினார்.
  முனைவர் அவ்வை நடராசனாருடனான முதல் சந்திப்பில் அவருடைய உற்சாகமூட்டும் சொற்கள் என்னை ஈர்த்தன. விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்தார். நினைவாற்றலுடன் துல்லியமாக எடுத்துக் கூறினார். தமிழ்ச் சொற்களைக் கனிந்து உச்சரித்தார். முன்பின் பழக்கமில்லாத என்னை, நீண்ட காலத் தோழமை உணர்வுடையவராகக் கருதினார், உதவினார், உபசரித்தார்.
2008ஆம் ஆண்டு. பன்னிரு திருமுறைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தேன். திருமந்திரத்தை ஆங்கிலத்தில் எவராவது மொழிபெயர்த்துள்ளார்களா எனப் பலரிடம் உசாவி வந்தேன். தொலைப்பேசியில் முனைவர் அவ்வை நடராசரானாருடன் பேசுகையில் என் உசாவலைக் கூறினேன். கன்னியாகுமரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்த முனைவர் நடராசன் திருமந்திரம் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், திருக்கோவிலூர் மடத்தாரிடம் விசாரியுங்கள் என எனக்கு வழிகாட்டினார்.
கணிணி எழுத்துருவாயிலென், திருமந்திர மொழிபெயர்ப்பாயிலென், தகவல் களஞ்சியமாக முனைவர் அவ்வை நடராசனார் எனக்கு உதவினார். இன்றைக்கு நாம் தகவல்களை இணையத்தில் தேடுகிறோம். முனைவர் அவ்வை நடராசனாரோ நடமாடும் இணைய தளமாக நெடுங்காலமாகவே இயங்கிவந்துள்ளார்.
எனக்கு மட்டுமா? எத்தனையோ பேருக்கு அவரது நினைவாற்றலும் புலமையும் பொலிவான தமிழும் கைகொடுத்து வந்துள்ளன.
தகவல்களைத் தெரிந்துகொள்வதில் அவர் காட்டும் ஆர்வம் அதைவிட அதிகம்.
தமிழைச் செம்மொழியாக அறிவித்த காலத்தில் இரவு விருந்து ஒன்றில் என்னுடன் பேடிக்கொண்டிருந்தார். ஏற்கனவே ஐந்து மொழிகளைச் செம்மொழிகளாக இந்திய அரசு ஏற்றுள்ளதையும் ஆண்டுதோறும் குடியரசு விழாவில் வாழ்நாள் பரிசு உள்ளிட்ட விருதுகளை, சமஸ்கிருதம், பிராகிருதம், பாளி, பாரசீகம், அரபு ஆகிய மொழிசார் புலமையாளருக்குச் செம்மொழி விருதுகளாக இந்திய அரசு வழங்கி வருவதையும், ஆட்சிமொழி, பிராந்திய மொழி, பின்தங்கிய மொழி, செம்மொழி என்ற வகைகளை இந்திய அரசின் நாடாளுமன்றமே ஏற்ற செய்திகளையும் சொன்னதும் ஆதாரங்கள் உண்டா எனக் கேட்டார்.
இரவு விருந்து முடிந்து, தியாகராயர் நகரில் உள்ள அவரது அலுவலகம் சென்று அவரது கணிணியில் இணைய தளங்களில் ஒவ்வொன்றாக அவற்றை வரிசையாக்கினேன். பள்ளி மாணவனின் ஆர்வம், கள ஆய்வாளனின் தகவல் தேடும் கூர்மை, தகவல்களை மனத்துள் வாங்கிப் பகுப்பாய்ந்து உடனுக்குடன் தன் நினைவில் இருந்தவற்றுடன் பொருத்தி நோக்கல், எந்தத் தகவல் எங்கே யாருக்குப் பயன்படும் என்ற கவனம் எனச் சில மணி நேரங்கள் அந்தத் தேடலில் அவர் திளைத்தார். சில பகுதிகளை அச்சானில் இடச் சொன்னார். எடுத்துச் சென்றார், இவற்றை இதுவரை எவரும் கண்டுகொள்ளவில்லையே என வருந்தினார். 
 உரிய இடங்களில் அந்தத் தகவல்களைப் பரிமாறியமையால் இந்திய அரசின் செம்மொழித் தகைமை அறிவிப்புகளில் பிற்காலத்தில் மாற்றங்கள் வந்தன என அவரே என்னிடம் பின்னர் சொன்னார்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக முனைவர் அவ்வை நடராசனார். 1995 தையில் எட்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு. தஞ்சாவூர் முழுவதும் விழாக்கோலம். தொடக்க நாளுக்கு முதல்நாள், மாலைப் பொழுது. என் பேராளர் பதிவைத் தேடி அலுவலகம் செல்கிறேன். பதிவுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
முனைவர் அவ்வை நடராசனார், முனைவர் சி. பாலசுப்பிரமணியனார், முனைவர் க. இராஜாராம் ஆகியோர் வந்துகொண்டிருந்தனர். என் பின்னாலே இரு காவல்துறை அதிகாரிகள். பதிவுக்காகக் காத்திருக்கிறேன், என்னுடன் மகன் பிஞ்ஞகன்.
காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்தனர். அந்த அறையின் ஓரத்தில் அனைவரின் முன்பாக, நீங்கள் இங்கிருந்து நீங்கிவிடுங்கள் என்றனர். பேராளருக்கான என் விண்ணப்பம், செலுத்திய தொகைக்கான சிட்டை யாவும் காட்டினேன். எதிரே நின்றகொண்டிருந்த முனைவர் இராஜாராம் அவர்களைச் சுட்டினேன். அவருக்கு நேரடியாக விவரம் தெரியும் என்றேன். நீங்கள் போய்விடுவதே நல்லது என்றனர் காவல்துறையினர்.
முனைவர் அவ்வை நடராசனார், முனைவர் சி. பாலசுப்பிரமணியனார் இருவரும் என்னிடம் வந்தனர், மாநாட்டைச் சிறப்பாக நடத்தவேண்டும், காவல்துறையுடன் ஒத்துழையுங்கள் என்றனர். அப்பொழுது முனைவர் அவ்வை நடராசனாரின் முகத்தில் கண்ணீர் வழிந்ததைக் கண்டேன். அந்த இடத்தை விட்டு உடன் நீங்கினேன். எனக்கு மட்டுமல்ல, எனக்குப் பின்னர் அடுத்த நாள் பேராசிரியர்கள் சிவத்தம்பி, சண்முகதாஸ், மனோன்மனி என மேலும் சிலருக்கு இந்த நிலை. முனைவர் அவ்வை நடராசனார் கையறுநிலையில் இருந்தார், கண்ணீர் விட்டார், நிச்சயமாகத் தன் அறைக்குள் சென்றபின் கதறி அழுதிருப்பார்.
ஈழத் தமிழரின் சைவத் தமிழ்ப் பற்றை விளக்கச் சுவையான நிகழ்வைப் புனைந்து மேடைகளில் முனைவர் அவ்வை நடராசனார் கூறுவார். ஈழத்தமிழர் ஒருவர் இவரின் வீட்டுக்கு வந்தாராம். இவர் குளியலறையில் இருந்தாராம். வந்தவரை மகன் இருக்கச் சொன்னாராம். தம்பி தேவாரப் புத்தகம் இருக்கிறதா என ஈழத்தமிழர் மகனிடம் கேட்டாராம். தேவாரம் ஓய்வுபெற்றுப் பல மாதங்கள் ஆகிவிட்டதே என மகன் சொன்னாராம். தேவாரம் காவல்துறை அதிகாரியாக இருந்தவர். 
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நாவன்மையாளர்களுள் முனைவர் அவ்வை நடராசனார் ஒருவர். கேட்டார்ப் பிணிக்கும் தகவாகப் பேசுவார். அவருக்கு மாலைப் பொழுது மேடைகளே காப்பரண்கள், அவையே அவர் உடல் நலத்தின் காப்பரண்களுமாம். அவர் தலைமையில் பேச எனக்கும் ஓரிரு வாய்ப்புகள் கிடைத்ததால் மகிழ்ந்திருக்கிறேன்.
ஆகா, உங்கள் காட்சி விளக்கம் மிக அருமையாக இருந்ததாமே! சேதுக் கால்வாய் பற்றி இப்படி ஒரு பார்வையா? இவ்வாறு ஒருநாள் முனைவர் அவ்வை நடராசனார் என்னைப் பாராட்டினார். இவர் அங்கு வரவில்லையே! என நான் ஐயுற்றிருந்தபொழுது, என் மகன் அருள் என்னிடம் கூறினார், தமிழ் ஊடகப் பேரவையில் உங்களது காட்சி விளக்கத்தை அவர்தான் ஏற்பாடு செய்தார், வீட்டுக்கு வந்ததும் அப்படிப் பாராட்டினார், நான் வரமுடியவில்லையே என வருந்தினேன் என்றார்.
பேரறிஞர் அவ்வை துரைசாமிப்பிள்ளையை நேரில் அறியும் வாய்ப்புப் பெற்றிலேன். எனினும் அன்னாரின் மகன், மருமகள், பெயரர்களை அறியும் வாய்ப்புப் பெற்றேன். மெய்வழி ஆண்டவர் சார்ந்த மருமகளைப் பெற்ற திருமண விழாவுக்கு முனைவர் அவ்வை நடராசனார் என்னை அழைத்திருந்தார். மருத்துவரான தன் மற்றொரு மகன் ஆஸ்திரேலியாவில் பணி தேடும் காலத்தில் அவரை என்னிடம் அனுப்பி ஆலோசனை கேட்பித்தார். அவரின் மக்களும் அவரைப் போலவே புலமை, ஆற்றல், செம்மாந்த நோக்கு, பண்பட்ட நெஞ்சம், பாராட்டும் பண்பு, கனிவான கண்ணோாட்டம் கொண்டவர்கள். என் உரையைக் கேட்பதற்காகவே வந்ததாக ஒருநாள் அவரின் துணைவியார் மருத்துவர் தாரா நடராசன் என்னிடம் கூறியபொழுது நான் வெற்றுப் பாராட்டாகக் கொள்ளவில்லை. கொல்லன்தெருவில் வாழ்பவர், ஊசியின் தரத்தை அறியதவாரா?  
முனைவர் அவ்வை நடராசனாருக்கு இந்தியத் திருநாடே தாமரைத்திரு (பத்மசிறீ) விருது வழங்கிப் பாராட்டியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் விருது பெறும் காட்சியைப் பார்த்ததும் நானே அங்கிருப்பதுபோன்று மகிழ்ந்தேன். பல்லாண்டு உடல் நலத்தோடு வாழ்ந்து மேன்மேலும் தொண்டாற்றித் தமரெல்லாம் செழிக்குமாறு முனைவர் அவ்வை நடராசனார் வாழ்வாராக.

தமிழ் மணத்தையும் சைவ நெறியையும் பரப்புபவர்


காந்தளகம் பதிப்பகத்தின் நிறுவனர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் மின்தமிழ், மின்னஞ்சல் குழுமத்தில் மிக ஆழமான கருத்துக்களை மிகவும் ஆழகாகப் பதிவு செய்து வருகின்றவர்.

இணையம் இன்று உலகில் உள்ள தமிழர்களை இணைக்கிறது. தமிழ்நூல் இணையதளம் www.tamilnool.com மற்றும் தமிழின் அரிய முயற்சியான www.thevaaram.org இணைய தளத்தில் பன்னிரு திருமுறைகளையும் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, கன்னடம், சிங்களம், சீனம் போன்ற பல மொழிகளில் ஒலிபெயர்த்துப் பதிவேற்றப்படுவதில் அவர் உந்து சக்தியாகவும் தூண்டுதலாகவும் மிகவும் ஆற்றலுடன் செயல்படுகிறவர்.
12ம் நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்த ஐன்னன் என்ற ஒரு கன்னடக் கவி கூறிய வரிகளை நினைவு கூர்கிறேன்.                  
புதிய மாலை கட்டுகிறான் ஒரு
பூக்காரன்,அதைச் சூடிக் கொள்பவர்
இல்லையெனில் வாடிப்போகாதோ!
என்றார் அவர்.
இலக்கியம் படைத்தால் மட்டும் போதாது. அதை இரசிக்கக் கூடியவர்களின் அவசியத்தையும் கவி ஐன்னன் எடுத்துக் கூறுகிறார்.
ஐயா சச்சிதானந்தன் அவர்கள், நமது தமிழின் சைவ இலக்கியப் பொக்கிசத்தை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம், உலக மொழிகளில் சைவத்திருமுறையின் நறுமணத்தை இணையதளத்தின் வாயிலாகத் தமிழ் மணத்தையும் சைவ நெறியையும் பரப்ப உறுதுணையாக உள்ளார். இதனால் நான் பெருமிதம் அடைகிறேன்.
ஐயா மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் முதல்முதலாக, மொழிபெயர்ப்புக் காரணமாகத் தொலைப்பேசியின் மூலமாக எனக்கு அறிமுகமானவர்.
அவர் சிறந்த எழுத்தாளராகச் சிறந்த பதவியில் இருந்து வந்த போதிலும் மிகவும் எளிமையானவரும் ஆவார்.
அவருடைய வார்த்தையில் அன்பும், பண்பும், ஞானமும், நிறைந்திருக்கும்.
மற்றவர்களை மிக வேகமாகக் கவரக்கூடிய பேச்சாற்றலும் மனிதநேயமும் கொண்ட மாமனிதராகவும், எழுத்தாளர்களுக்கு முன்னேறும் ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் உண்டாக்கும் வண்ணம் பேசும் திறன் கொண்டவரும் ஆவார்.
ஆன்மீகத்தின் மீது மிக்க ஆர்வம் கொண்ட அவர், நம்மையும் ஊக்கப்படுத்தி மிக எளிமையாக ஆன்மீக இலக்கியத் தொண்டில் ஈடுபடச்செய்யும் மிக உன்னதமான சக்தியைக் கொண்டவர்.
அவருடைய ஆன்மீக இலக்கியத் தூண்டுதலால்தான் என்னால் ஒன்பதாம் திருமுறையைக் கன்னடத்தில் மொழிபெயர்க்க முடிந்தது.





செம்மொழி மாநாட்டின் சிறப்பு வெளியீடாகவும் அந்நூல் வெளிவந்தது.
12ம் நூற்றாண்டின் வசன இலக்கியத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த கன்னடப் புலவர் பசவண்ணா அவர்களின் வரிகள் நினைவில் வருகின்றன. ஒரு நல்ல மனிதர் என்றால் வாக்கும், நடையும் ஒன்றே ஆக இருக்க வேண்டும் என்றார் அவர்.
இதைக் கடைப்பிடித்துக் கொண்டிருப்பவர் சச்சிதானந்தன் ஐயா அவர்கள். நான் என்ற (அகம்) இல்லாமல் அனைத்திலும் சிவனைக் காண்பவர். சிவனை அன்றி ஒரு அணுக்கூட அசையாது என்றும், அனைத்தும் சிவமயம் என்பதிலும் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டவரும் ஆவார்.
உலகளாவிய எண்ணற்ற உலக மொழிகளில் திருமுறையின் மூலம் சிவனைப்பற்றி அனைத்து மனித இனங்கள் மொழி இனம் பாகுபாடு அன்றிக் கணிணி மூலமாகவும் நூல்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளும் வாய்ப்பினை நல்கியுள்ளார்.
திருமுறைகளைக் கன்னடத்துக்கு மொழிபெயர்க்கும் இவ்வரிய வாய்ப்பினை எனக்கு நல்கிய சச்சிதானந்தன்  ஐயா, மற்றும் மயிலாடுதுறை  தருமபுரம் ஆதீனத்திற்கும் சென்னை காந்தளகத்திற்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.
மலர்விழி, க.
Prof. Malarvizhi, K., Presidency College, Kempapura, Hebbal, Bangalore-24
26-03-2011

Tuesday, May 3, 2011

அரனருள் திருமுறை இசை ஆராதனை விழா துவக்க உரை

அரனருள் அறக்கட்டளையின் ஆண்டு விழாவில்
திருமுறை இசை ஆராதனை விழா 
துவக்க உரை: கயிலைமணி மறவன்புலவு க. சச்சிதானந்தன்

நிகழ்ச்சியின் சில பகுதிகள் காணொலியாக..


Sunday, May 1, 2011

நெஞ்சை நெகிழ்வித்த நிகழ்வுகள்


31.08.2010 செவ்வாய் காலை; யாழ்ப்பாணக் குடாநாடு; என் பேருந்துப் பயணத்தின் அடைநிலை. சாவகச்சேரியைத் தாண்டியதும் நுணாவில்; அடுத்தது கைதடி நுணாவில். அங்கே, அறவழிக் குழு அலுவலக வாயிலில் பேருந்து என்னை இறக்கியது. அடுத்த சில வாரங்களுக்கு நான் அங்கு தங்குகிறேன்.
அறவழிக் குழுவின் தோற்றமும் பணிகளும்:
1979 மாசியில் கைதடி மண்டபத்தில் தொடர்ந்து பத்து நாள்கள் நான் நடத்திய அறவழிப் பயிலரங்கு. பயின்றவர் அனைவரும் இணைந்தனர். அறவழிப் போராட்டக் குழுவாயினர். நான் அக்குழுவின் நிறுவனராயினேன். கடந்த 32 ஆண்டுகளாக அவர்களோடு நானும் இருக்கிறேன்.
இந்த 32 ஆண்டுக் காலம். நீண்ட பயணம். இடையூறுகளையும் தடைகளையும் தாண்டிய பயணம். அறவழிச் சிந்தனைகளுடன் அமைந்த பயணம். தொண்டுகளைத் தாங்கி, மக்கள் துயரங்களைப் போக்க முயன்ற பயணம்.
32 ஆண்டுக் காலமும் திருமிகு மு. க. சீவகதாசர் அறவழிக் குழுவின் செயலாளர். அவருக்கு இப்பொழுது 64 வயது. காந்தியச் சிந்தனை அன்றி வேறறியார். அனைவரையும் அரவணைப்பதையே தன் வாழ்வாக்குபவர். காலத்துக்குக் காலம் ஏற்படும் அழிவுகளால் அல்லலுறுவோர் அறவழிக் குழுவின் பயனாளிகள்.
1983 இனக் கலவரமாயிலென், 2003 ஆழிப் பேரலையாயிலென், துன்புற்றோர் துயர் போக்க அறவழிக் குழு அங்கிருக்கும். நான் தங்கியுள்ள அறவழி அலுவலகம் அந்த நீண்ட துயர் துடைக்கும் பயணத்தின் விளைவு.
ஆண்டுக்குத் தோராயமாக 2 கோடி ரூபாய்க்கு நிதித் திட்டம். யாவும் நன்கொடைகள், அதுவும் ஐரோப்பிய, வட அமெரிக்க, ஆத்திரேலிய நலம்பேண் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடைகள். இந்தியக் காந்தீய நிறுவனங்களுடன் அறவழிக் குழுவினர்க்குத் தொடர்பிருப்பினும் நிதி உதவி ஏதும் தமிழகத்திலிருந்தோ, இந்தியாவிலிருந்தோ பெறமுடியவில்லை.
முதலாவது நிகழ்வு:
தந்தையரை இழந்த 47 சிறுவர்களுடன் அறவழி அலுவலகத்தில் 02.09.2010 காலை கலந்துரையாடல். நான்காவது ஈழப் போரின் இறுதிக் கால அழிவுகளில் தந்தையரை இழந்த சிறுவர்களே யாவரும்.
கல்விக் கட்டணமாக ஒவ்வொருவருக்கும் ரூ.300, பயிற்சிப் புத்தகம் எழுதுகோல், பற்பசை, சவர்க்காரம் உள்ளிட்ட பொருள்கள், நன்கொடையாளரிடம் பெற்றவற்றைப் பயனாளிகளான சிறுவருக்கு வழங்கும் பணி என்னதாயது. தென்மராட்சி அன்பர்கள் பிரித்தானியாவிலிருந்து அனுப்பிய நன்கொடை. யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்கு நிலப் பகுதியே (தென்மர் + ஆட்சி =) தென்மராட்சி. சாவகத்திலிருந்து மணிமேகலை காலத்தில் புண்ணியராசனுடன் வந்தவர் இன்று வரை வாழ்ந்துவரும் சேரியே சாவகச்சேரி. தென்மராட்சியின் தலைநகர் சாவகச்சேரி. மேற்கே நாவற்குழி தொடக்கம் கிழக்கே இயக்கச்சி வரை தென்மராட்சி.
தென்மராட்சி அன்பர்கள் வழங்கிய நன்கொடைகளைத் தந்தையரை இழந்த அச்சிறுவர்களிடம் கையளித்த ஒருமணி நேரமும் என் கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்துகொண்டிருந்தது. ஒவ்வொருவராக அழைத்தேன். பெயர், வயது, முகவரி, இழப்பின் விவரம், இன்றைய நிலை… யாவற்றையும் கேட்டறிந்தேன். அனைவரையும் ஒன்றாக இருத்தி, உற்சாமூட்டும் சொற்களை அவர்களுக்காக்கினேன்.
அழிவிலும் உண்டு ஆக்கம் என்ற வள்ளுவரின் வாக்கை எடுத்துக் கூறினேன். ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் உணர்வை ஊட்ட அபிராமிப் பட்டர் துணை நின்றார். மனதில் உறுதி வேண்டும், வாக்கினில் இனிமை வேண்டும் என்ற தொடரைப் பாரதி வாக்காக்கினேன். திருமூலரின் மூச்சுப் பயிற்சி வரிகளைக் கூறி, உயிர் வாழ்வுக்கு மூச்சின் துணையைக் காட்டி, செயல்முறை விளக்கமாக்கினேன். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்…. பணிவோம் அல்லோம் என்ற அப்பரின் வரிகளைத் துணைகொண்டேன்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த குழந்தைகள் என்னைச் சுற்றின, கைகளைப் பற்றின, கட்டிப் பிடித்தன, என்னுடனேயே ஒன்றின. உணர்வுப் பிழம்பாக்கின. அவர்களுள் பலர் மீண்டும் முகாமுக்குள் தாயாரிடம் போகவேண்டிய கட்டாயம். சிலர் குடிசைகள் அமைத்து வாழ்கின்ற தாயாரிடம் செல்லும் நிலை. நிச்சயமற்ற உடனடி எதிர்கால வாழ்வு அவர்களுக்கு!
அன்று மாலை கவிஞர் இராதேயனும் நானுமாக, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விளையாட்டுத் திடலில் வீரகேசரி இதழின் 80ஆவது ஆண்டு விழா நிகழ்வாக நடந்த தமிழிசை நிகழ்வுக்குச் சென்றோம். சீர்காழி சிவசிதம்பரத்தின் இசைக் கச்சேரி. நிகழ்ச்சி முடிந்ததும் அவரைச் சந்தித்தேன். காந்தளகம் ஐயா வாருங்கள் எனப் பாசத்துடன் அழைத்தார். பேசினோம்.
இரண்டாவது நிகழ்வு:
ஆத்திரேலியாவில் வாழும் தென்மராட்சி அன்பர்கள் வழங்கிய நன்கொடைகளைத் தந்தையரை இழந்த சிறுவர்களுக்கு வழங்கும் நிகழச்சி 03.09.2010 காலை அறவழி அலுவலகத்தில். 02.09.2010இல் வந்த சிறுவர் அல்லாத 57 சிறுவர்களே பயனாளிகள். சீர்காழி சிவசிதம்பரத்துடன் காலையில் தொலைபேசியில் பேசினேன், நிகழ்ச்சிக்கு அழைத்தேன். வருவதாக உடன்பட்டார். உரிய நேரத்துக்கு வந்தார். அந்த அன்பளிப்புகளைச் சிறுவர்களுக்கு வழங்கினார், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… எனத் தொடங்கும் பாடலைச் சிறுவர்களுக்காகத் தன் வெண்கலக் குரலில் பாடி மகிழ்வித்தார்.
நான்காவது ஈழப் போரின் இறுதிக் காலத்தில் காயமுற்ற இளைஞர்களுக்கு வாழ்வாதாரப் பயிற்சிகளை அறவழிக் குழு வழங்குகிறது. கனடிய உலகப் பல்கலைக்கழக நிறுவனம் வழங்கும் நிதியுடன் அப்பயிற்சியைப் பெறும் இளைஞர்களைச் சீர்காழி சிவசிதம்பரம் சந்தித்தார், ஊனமுற்றவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்தச் சிறுவர்களுட் பலர் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தென்மராட்சிக்குள் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள். தென்மராட்சிக்குள் வந்தவர்களுக்கு விருந்தோம்பும் பண்புடன் வெளிநாட்டில் வாழ் தென்மராட்சி அன்பர்கள் இந்தப் பணியைத் தொடர்ந்து தொண்டாக்கி வருகின்றனர். இந்தச் சிறுவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையை ஊட்ட, அஞ்சேல் என ஆதரவுக் கரம் நீட்ட, உலககெங்கும் பரந்து வாழும் தென்மராட்சி அன்பர்கள் தொடர்ந்து தொண்டாக்குகின்றனர்.
மூன்றாவது நிகழ்வு:
கனடிய உலகப் பல்கலைக்கழக நிறுவனத்தின் உதவியுடன் பயிற்சிபெறும் இளைஞர்களின் விதவைகளான தாய்மார்களுக்கு உடுதுணி மற்றும் ஆடைகளைக் கணடாவிலிருக்கும் திரு. வ. ச. துரைராசா அனுப்பியிருந்தார்.
1979இல் என்னிடம் பயிற்சிபெற்ற அவர், அறவழிக் குழுவின் தலைவராக 1988 வரை உழைத்தவர். அவரது அறவழி நோக்குடன் பிறருக்கு எழுந்த முரணால் உயிரச்சம் காரணமாய்க் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். அவரது புலப்பெயர்வுக்கு நான் அப்பொழுது உதவினேன். அங்கு சென்றாலும் அவரது நினைவுகள், அறவழிக் குழுவுடன் ஒன்றியன.
அவர் அனுப்பிய உடுதுணிகளைக் கையளிக்கும் பணி 04.09.2010 அன்று காலை எனதாயது.
அத்தாய்மார்கள், கணவர்களை நான்காவது ஈழப் போர்க் காலத்தில் இழந்தவர்கள். சிலர் கூலி வேலை, சிலர் தையல் வேலை, சிலர் பொரித்த உணவு தயாரிக்கும் வேலை, சிலர் வீட்டு வேலை எனத் தம் உடல் உழைப்பை நம்பிய வாழ்வாதாரத்துடன் நிச்சயமற்ற எதிர்காலத்தை ஏக்கத்துடன் நோக்கி வாழ்பவர்.
அவர்களுட் சிலர் மறுமணமாகும் வயதினர். ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை பெருகிய போர்ப்பின் எழும் வழமையான வரலாற்றுச் சூழ்நிலை அத்தாய்மார்களின் மறுமண எதிர்காலத்துக்கு உற்சாகமானதாக அமையவில்லை.
தொண்டர்தம் பெருமை:
2010 செப்டம்பர் திங்களின் 2, 3, 4 ஆகிய இந்த மூன்று நாள்களும் அறவழி அலுவலகத்தில் நெஞ்சத்தை நெகிழ்விக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர் அறவழிக் குழுச் செயலாளர் திருமிகு மு. க. சீவகதாசர். அவருக்கு உறுதுணையாக, திருமதி லோகேசுவரி, செல்வி சாந்தி, திருமிகு ராசன் ஆகியோர் இருந்தனர்.
அறவழி அலுவலக வளாகத்தில் இரண்டு மாடிக் கட்டடத்தில் அலுவலகம், நூலகம், கணினிப் பயிலகம் உள்ளன. அருகிலுள்ள பரந்த தொழிற் பயிற்சிக் கூடத்தில் உலோக ஒட்டுப் பயிற்சி, மின்கம்பி இணைப்புப் பயிற்சி, கணினி திருத்தும் பயிற்சி, வானொலி – தொலைக்காட்சி திருத்தும் பயிற்சி, உந்தீருருளி திருத்தும் பயிற்சி யாவும் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன. அறவழிக் கலையரங்கத்தில் கூட்டங்களும் கலைநிகழ்ச்சிகளும் பயனாளிகளுக்கான வழங்கல் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
September 6, 2010