கோவை மகேசன்
மறவன்புலவு. க. சச்சிதானந்தன்
1992 ஜுலை 4 சனிக்கிழமை
காலை 7.48 மணிக்குச்
சென்னை மந்தவெளி, பி.எஸ் எஸ் மருத்துவமனையில் கோவை மகேசன் இறைவனடி சேர்ந்தார். அவரின்
உயிர் பிரியும்பொழுது அவரின் மனைவி மட்டுமே மருத்துவமனையில் இருந்தார்.
அன்று மாலை 4 மணிக்கு ஊரூர் (அடையாறு) மயானத்தில் அவர் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
மரணச்
செய்தி அறிந்ததும் முதலில் மருத்துவமனைக்கு வந்து ஆறுதல் கூறியவர் முனைவர் சாலினி
இளந்திரையன் அம்மையார் ஆவர். பின்னர் திருகோணமலைக் குகதாசன், நான் எனது
மனைவி ஆகியோர் சென்றோம். தொடர்ந்து திரு. நெடுமாறன் அவர்களும் அவரது கட்சித்
தொண்டர்களும் வந்தனர். பொறியியலாளர் திரு. கணேசலிங்கம் அவர்கள் அடுத்து
வந்தார்கள். 11 மணிக்கு அவரது பூதவுடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
முனைவர்
அரு. கோபாலன், திரு. இரா.
பத்மநாதன், முன்னாள்
பா. உ. திரு. இரா. சம்பந்தன், மூதூர் அன்பர், திரு. இரட்ணசிங்கம், பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன், டாக்டர்
விசாகரத்தினம், திரு.
ஈழவேந்தன் தம்பதியர், திரு. ரொனி, (மறைந்த வீரர் விக்டரின் அண்ணன்) மனைவி பிள்ளைகள், கல்லூரி
மாணவி செல்வி. சைலஜா ஆகியோர் வீட்டிலும் மயானத்திலும் அஞ்சலி செலுத்தினர். அறிஞர், கவிஞர்
பெருஞ்சித்திரனாரும், கவிஞர் இறைக்குமரனாரும் மயானத்திற்கு நேரடியாக
வந்திருந்தனர்.
திருமதி
கோவை மகேசன் சிதைக்கு தீ மூட்டினார். அவருக்கு துணையாகத் திருமதி சச்சிதானந்தன், திருமதி
ஈழவேந்தன் இருவரும் மயானத்திற்கு வந்திருந்தனர். கவிஞர் காசி ஆனந்தன் சென்னையில்
இருந்தும் அவருக்குத் தகவல் அனுப்ப முடியவில்லை. அண்மையில் அவர் புதிய வீட்டிற்கு
குடிபோயுள்ளார்.
வீட்டிலும்
மயானத்திலும் தேவாரம், திருவாசகம், திருமுறை என்பன படிக்கப்பட்டன. உரிய இறுதி அஞ்சலிகள்
செவ்வனே செய்யப்பட்டன.
மயானத்தில்
நடந்த இரங்கல் கூட்டத்தில் திரு. நெடுமாறன், திரு. பெருஞ்சித்திரனார், பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன், முனைவர்
அரு. கோபாலன், திரு. இரா.
பத்மநாதன், திரு.
ஈழவேந்தன். திரு. க.சச்சிதானந்தன், திரு. க. கணேசலிங்கன், திரு. ச. குகதாசன் ஆகியோர் உரையாற்றினர். திரு. கோவை
மகேசன் கொண்டிருந்த உறுதியான கொள்கை நிலைப்பாட்டைத் தொடர்ந்து பேணி தமிழீழ
விடுதலைக்காக போராடுவதே அவருக்குச் செய்யவேண்டிய நினைவுக்கடன் என்பதைப் பலர்
வலியுறுத்திப் பேசினர்.
மறுநாள்
ஞாயிற்றுக்கிழமை மயானத்தில் அவரது சாம்பல் மூன்று குடங்களில் எடுத்து வீட்டிற்குக்
கொண்டு வரப்பட்டது. தமிழீழ மண்ணிற்குத் தனது சாம்பல் கொண்டு செல்லப்பட வேண்டும்
எனக் கோவை மகேசன் விரும்பியிருந்தார். ஒரு பகுதி அங்கு எடுத்துச் செல்லப்படும்.
நோய்
கோவை
மகேசன் கடந்த சில ஆண்டுகளாகவே நோய் வாய்ப்பட்டிருந்தார். 1983இல் வெலிக்கடைச்
சிறையில் அவர் பட்ட துன்பங்கள் அவரது உள்ளத்தை உலுக்கிவிட்டிருந்தன. அவரது கண்
முன்னேயே டாக்டர் ராஜசுந்தரம் உட்பட பலர் இறந்தனர்.
அதற்குப்
பின் அவர் பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இரத்த அழுத்தம், முடக்குவாதம், நீரிழிவு
ஆகிய உபாதைகளால் அவதிப்பட்டார்.
1986இல்
நான் சென்னை வந்த உடன் அவரைச் சென்று சந்தித்தேன். நல்ல மருத்துவரிடம் அழைத்துச்
செல்லுமாறு கணவனும், மனைவியும் என்னிடம் கேட்டனர்.
சென்னை
மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த மருத்துவர் ஜே. ஆர். சங்கரன்
அவர்களிடம் அழைத்துச் சென்றேன். அறிமுகப்படுத்தினேன். கணவன் மனைவி இருவருமே அவர்
மருத்துவத்தில் நம்பிக்கை வைத்தனர். தொடர்ந்து மருத்துவம் செய்தார். இறுதிவரை
மருத்துவர் சங்கரன் கண்காணிப்பில் மகேசன் இருந்தார்.
எனினும்
அடையாரில் தமது வீட்டுக்கு அருகில் மருத்துவர் ஜெயச்சந்திரனிடமும் ஆலோசனைகள்
பெற்றார். டாக்டர் மு. வ.வின் மகன் மருத்துவர் நம்பியும் ஆலோசனைகளைக் கூறினார்.
கடந்த 2
மாதங்களாகக் காய்ச்சல் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. 104 பாகை பரனைட்டில்
வெப்பம் வருவதும் போவதுமாக இருந்தது. சலத்தில் நோய்க் கிருமிகள் இருந்தன. கிருமி
எதிர்ப்பு அன்டிபயட்டிக் மருந்துகள் ஊசி மூலமும் குளிகைகளாகவும் கொடுக்கப்பட்டன.
விலை உயர்ந்த மருந்துகள் பல கொடுக்கப்பட்டன. மாறி மாறி வந்த நோய்க் கிருமிகளின்
தாக்கம் அவரை விடவில்லை. மருந்துகள் ஏற்புடையதாகவில்லை.
கடந்த
ஒரு வாரத்துக்கு முன் சலம் போவது தடைப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருந்து
கொடுக்கப்பட்டது. மூன்று நாட்களுக்கு முன் குழாய் மூலம் சலம் வெளியேற்றப்பட
வேண்டிவந்தது.
வெள்ளிக்கிழமை
மாலை, திரு.
நெடுமாறன், நான், திரு.
ஈழவேந்தன், திரு.
கணேசலிங்கம் ஆகியோர் மருத்துவமனை சென்றிருந்தோம். முனைவர் சாலினி இளந்திரையனும்
வந்திருந்தார்கள். மயக்கம் வருவதும் போவதுமாக இருந்தது. எனினும் சில சொற்கள்
பேசினார்.
அன்றிரவு
மருத்துவர் நம்பி, மருத்துவர் சங்கரன் ஆகியோர்களிடம் பேசினோம். மருந்துகள்
வேலை செய்ய மறுக்கின்றன. கிருமிகள் நோயை வலுவாக்குகின்றன என்றனர். அதுவே அவரது
இறுதி நோயாயிற்று.
வாழ்க்கை
கோப்பாய்
இரத்தின சபாபதிக்குருக்களின் மகன் மகேஸ்வரசர்மா, 54 ஆண்டுகட்கு முன் பிறந்தவர்; மகேஸ்வரசர்மா என்ற பெயரை மகேசன் எனவும், கோப்பாயைக்
குறிக்க கோவை என்றும் சேர்த்துத் தனது பெயரைக் கோவை மகேசன் என எழுதினார்.
சிறு வயதில் இருந்தே, தமிழ் மக்கள் நலனில் ஆர்வங்கொண்டார். தனது
எழுத்தாற்றலையும், கவிதையாக்கும் திறனையும் தமிழர் நல்வாழ்வு நோக்கிப்
பயன்படுத்தினார்.
கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. கு. வன்னியசிங்கம்
அவர்களுடன் தொடர்பு கொண்டார். அரசியல் இயக்கங்களில் பங்கு கொண்டார்.
திரு. வன்னியசிங்கம் மூலமாகக் கொழும்பில் திரு. செல்வநாயகம்
நடத்தி வந்த சுதந்திரன் பத்திரிகை அலுவலகத்தில் எழுதுவினைஞராகச் சேர்ந்தார்.
தான் எழுதிய கவிதைகளைச் சுதந்திரன் பத்திரிகையில்
வெளியிட்டு வந்தார். கட்டுரைகள் எழுதி வந்தார்.
1960களில்
ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். சிறிது காலத்தின் பின் பொறுப்பாசிரியராகப் பதவி ஏற்றார்.
சுதந்திரன் வார இதழ் மூலம் அவர் தமிழின உரிமைப் போரை
நடத்தி வந்தார். தமிழரசுக்
கட்சியின் கொள்கை வரம்புகளுக்குள் நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக எழுதினார்; எழுதுவித்தார்.
எங்கும் தமிழ், எதிலுந் தமிழ் என்ற பாரதிதாசனின் கருத்துக்கு உருவங்
கொடுக்க, எல்லாம்
தமிழியக்கம் நடத்தப்பட்ட பொழுது இவரும் அதில் இணைந்து பணிபுரிந்தார். சுதந்திரன்
பத்திரிகை மூலம் தமிழ்மொழிப் பரவலாக்கலை உறுதி செய்தார்.
பல இலக்கிய கர்த்தாக்களை ஊக்குவித்தார். மரபுவழி
இலக்கியப் படைப்புக்களை ஆதரித்தார்.
4ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில்
நடத்தப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்தவர்களை ஆதரித்தார்.
தமிழரசுக் கட்சி மேடைகள் தோறும் பேசினார். சிறந்த
மேடைப் பேச்சாளராகி இளைஞர் உள்ளங்களில் இடம் பிடித்தார்.
இவரது பேச்சால் கவரப்பட்ட பல இளைஞர்கள் தம்மை முழுநேரத்
தமிழ் இன உரிமை மீட்புப் பணிக்கு அர்ப்பணித்தனர்.
இன்றுள்ள அரசியல் குழுக்கள் அத்தனையிலும் உள்ள முதல்
நிலை, இரண்டாம்
நிலைத் தலைவர்கள் இவர் காலத்தில் உருவாக்கப்பட்டவர்களே.
1977இல் தந்தை செல்வா மறைந்ததும் தமிழர் விடுதலைக்
கூட்டணியினரின் அசமந்தப் போக்கும், கொள்கை விலகலும், பாராளுமன்ற நடவடிக்கைகளில் மட்டும் செயல்படுவதும்
இவருக்குப் பிடிக்கவில்லை என எழுதினார். கூட்டங்களில் பேசினார். பல பாராளுமன்ற உறுப்பினர்களைத் தனிப்பட்ட முறையில்
அடையாளங்கண்டு குறைகளைச் சுட்டிக்காட்டி எழுதினார்.
சுதந்திரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கியதும்
அதன் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு செயற்பட்டார்.
பிரபாகரனுக்கும், இவருக்கும் நெருக்கமான அன்பும் பாசப்பிணைப்பும்
ஏற்பட்டது. கவிஞர்
காசி ஆனந்தன், ஈழவேந்தன், டாக்டர்
தர்மலிங்கம் போன்றவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து விலக்கப்பட்ட பின்
தமிழீழ விடுதலை முன்னணி என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவரானார்.
இந்த அமைப்பு பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள்
அமைப்புடன் ஒன்றிவிட்டது. பிரபாகரனுக்கும், இவருக்கும் இருந்த அன்பும் பாசப்பிணைப்பும் கொள்கைக்
கருத்து ஒற்றுமையும் தொடக்கத்தில் இருந்து அவர் சாகும்வரை மாறாமல் இருந்தது. தனது
பாசத்துக்குரிய அண்ணனாக இவரைப் பிரபாகரன் கருதினார். இருவரும் ஒருவரை ஒருவர் ஆதரித்து செயற்பட்டனர்.
தமிழீழ விடுதலையை அடைந்துவிட வேண்டும் என்பதில் கோவை
மகேசன் உறுதியாக இருந்தார். இதனால் இதே உறுதி கொண்ட என் போன்ற பலருடன் அவர் நட்புத்
தொடர்ந்தது.
வன்முறை வழிகளை நான் எப்பொழுதுமே ஏற்றுக் கொண்டதில்லை. ஆயுதப்
போராட்டத்தின் நன்மை தீமைகளை எனது அறிவிற்கு எட்டியவரை அனைவருடனும் பேசி
வந்துள்ளேன்.
அவ்வாறே கோவை மகேசனுடனும் பேசி வந்துள்ளேன். எமக்குள்
கருத்து வேறுபாடு ஒன்றில் மட்டுமே இருந்தது. மற்ற எல்லா விடயங்களிலும் நாம் ஒத்த கருத்து
உடையவர்களாகவே இருந்தோம். ஆத்ம நண்பர்களாக இருந்தோம். ஒருவர்க்கு ஒருவர் உதவியாக இருந்தோம்.
மகத்தான தொண்டரைத் தமிழீழ மக்கள் இழந்து தவிக்கிறார்கள். கோவை மகேசன்
தமிழீழ வரலாறுடன் இரண்டறக் கலந்தவர்.
17-23
ஜுலை 1992
ஈழநாடு
பாரிஸ் வாரமலர்