முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Thursday, February 3, 2011

ஈழம் ஈந்த கலைஞன்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்


 2008 ஐப்பசியில் சிட்னியில் குறுந் திரைப்பட விழா. அரங்கில் நான் இருந்தேன். அருமை நண்பர் நடராசா கருணாகரன் அன்புடன் அழைத்திருந்தார். சம காலத்தின் மறுபதிப்பாக ஒரு குறும் படம்.

பிரான்சுக்குப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழரான ஒரு முதியவர். பிரான்சிலேயே பிறந்து வளர்ந்த அவரது பெயர்த்தி. தலைமுறை இடைவெளி, புலம்பெயர் சூழலின் வாழ்வுமுறை, மொழி இடைவெளி, வாழ்வியல் நோக்கம், அயலவர் தாக்கம், முதுமை யாவற்றையும் கால்மணி நேரத்தில் உணர்த்தும் குறும்படம். தொழினுட்பத்தின் வளர்ச்சியை உள்வாங்கித் தமிழ்ச் சூழலை வெளிக்காட்டும் குறும்படம். முதியவராக ஏ. ரகுநாதன்.

நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து என்றார் மணிவாசகர். ஏ. ரகுநாதன் முதியவராக அக்குறும் படத்தில் நடிக்கவில்லை. இறைவன் முன் அடியவராக நடிக்கமுடியாததுபோல, படப்பிடிப்புக்கருவிமுன் முதியவராகவே மாறியிருந்தார் ஏ. ரகுநாதன்.

அந்தக் கால்மணி நேரமும் பிரான்சில் அவருடன் இருந்தேன். சிட்னியில் இருந்தேனா? பிரான்சில் இருந்தேனா? புலம்பெயர் சூழலில் இருந்தேனா?
நறுந்தேன் சுவையாய் அக்குறும்படச் செய்தியின் தாக்கம் என்னிடமிருந்து நீங்க நாள்கள் பலவாயின. மீண்டும் மீண்டும் நினைவில், கனவில், வாழும் என் நிகழ்வுகளில் ரகுநாதன். கலையரசு சொர்ணலிங்கத்திடம் பயின்றவர், நாடகமே உலகமானவர், நடிப்பே வாழ்வானவர், அறங்களை எடுத்துரைக்க நடிப்புக் கலையை நன்கு பயன்படுத்தியவர்.

கடமையின் எல்லை, நிர்மலா, தெய்வம் தந்த வீடு ஆகிய மூன்று திரைப்படங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன். தமிழகத்தில் அவற்றைத் தயாரித்திருந்தால் ஏ. ரகுநாதனுக்குச் சுவைஞர் மன்றங்கள் எத்தனை அமைந்திருக்கும்? பாலு. மகேந்திரா, வி. சி. குகநாதன், சிலோன் விஜயேந்திரன் போன்று தமிழ்த் திரை உலகில் ஈழத்து முத்திரை பதித்திருப்பார்! விடாது கலையுலகில் தொடர்கிறார், தொடாத துறைகள் இல்லையென நடிக்கிறார், கொடாத சுவைகளைத் தெரிந்து தருகிறார், படாத பாடு கலைக்காகப் படுகிறார்.

பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்ற வாழ்வு அவருடையதல்ல. பிறந்தோம், மொழி பயின்றோம், காதல் கொண்டு நடித்தோம், அரங்குகளில் திரைகளில் தடம் பதித்தோம், அளப்பரிய நிகழ்வுகளில் கலைக்கோயில்கள் எழுப்பினோம், வாழ்வு வரலாறாகியது என்றவாறு அமைத்து வாழ்ந்தவர், அமைத்து வாழத் தொடர்பவர், அருமைக் கலைஞர், ஈழம் ஈந்த இன்கலைமாமணி ஏ. ரகுநாதன்.

பொன் விழா, மணி விழா எனத் தொடர்ந்தவர், பவளவிழாக் காண்கிறார். உர நெஞ்சுடன், உறுதி உடலுடன் ரகுநாதன் நூறாண்டு நூறாண்டு வாழ்க, அவர் புகழ் கலை உலகு நீளும் வரை நீள்க என நெஞ்சார வாழ்த்துகிறேன்.

சிட்னி, (1.7.2010)

==========================
http://ularuvaayan.blogspot.com/2010/07/blog-post.html

No comments:

Post a Comment