முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Saturday, December 31, 2011

வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

 மறவன்புலவு க.சச்சிதானந்தன்

முகநூல் (facebook), கூகுள் கூட்டல் (Google plus), தலைமுறை (Geni) போன்ற சமூக வலைத் தளங்கள் ஐரோப்பியப் பண்பாட்டை உலகமயமாக்குவதில் வெற்றி கண்டு வருகின்றன.

தமிழ் மரபுக்கமையப் பிறந்த நாள் கணக்கு, நிலவுப் பயணம் சார்ந்தது. வானில் தெரியும் 27 நாள்மீன்கள், நிலத்தில் இருந்து வானைப் பார்த்தால் எந்த நாள்மீனுக்கு நேர்க்கோட்டில் நிலவு தெரிகிறது என்ற துல்லியமான அறிவியல் கணக்கீடு, அந்த நாள்மீனே பிறந்த நாள் என்ற கணக்கீடு தந்ததே ஐப்பசிச் சதயம் என்னும் இராசராசனின் பிறந்த நாள். நம் முன்னோர்கள் அந்தக் கணக்கில் பிறந்த நாள் கணக்கிடுதலை விட்டுச் சென்றனர்.

என் பிறந்த நாள் கார்த்திகை மாதம் முழுநிலா நாள் கழிந்த மூன்றாவது நாள். கார்த்திகை மாதம் கார்த்திகை நாள்மீன் நேர்க்கோட்டில் வானத்தில் முழுநிலா தெரியும். மூன்றாவது நாள் மிருகசீரிடம் நாள்மீன் கூட்டத்து நேர்க்கோட்டில் தேய்பிறை நிலவு தெரியும். அந்த நாள் என் பிறந்த நாள். இந்தக் கணக்கீடு என் பாட்டனும் பாட்டியும் தந்தது, என் தந்தையும் தாயும் தந்த கணக்கு.

நான் பிறந்த சில ஆண்டுகள் வரை மாதந்தோறும் என் பாட்டனும் பாட்டியும் கோவிலுக்கு என்னை அழைத்துச் செல்வர், என் நலம் வேண்டி வழிபாடு நடைபெறும். சில ஆண்டுகளுக்குப் பின்னர் என் தந்தையும் தாயும் ஆண்டுக்கு ஒருமுறை என்னைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வர். வழிபாடு நடைபெறும்.

ஒரே பெயரன், ஒரே மகன், தலைமுறைத் தொடர்ச்சிக்கு வாய்க்கால். எனவே என் நலம் வேண்டும் வழிபாடு.

70 ஆண்டுகளாக இந்த நடைமுறையே நான் கண்ட நடைமுறை.

62 நாடுகளுக்குப் பயணித்தேன். பல்லின மக்களுடன் பழகினேன். பணிபுரிந்தேன். 23 அரசுகளுக்கு ஆலோசகராக இருந்தேன். ஆண்டுக்கு ஒருமுறை வழிபாடு தவிரப் பிறந்த நாள் நிகழ்ச்சி வேறறியேன்.
கடந்த சில ஆண்டுகளாக, கிரிகோரியன் நாட்காட்டி அமைவில் 5.12 நாள் வந்தாலே எனக்கு வாழ்த்துகள் பலரிடமிருந்து மின்னஞ்சலில், தொலைபேசியில் வரத் தொடங்கின. தலைமுறை Geni சமூக வலைத் தளத்தில் என் பிறந்த நாள் இவ்வாறிருந்ததால், வேறு நாட்காட்டி அங்கு இல்லாததால், இந்தத் திணிப்பு என்னை வியப்புக்குள்ளாக்கியது. உலகம் முழுவதும் என் பிறந்த நாள் இந்த ஆண்டுக் கணக்கீட்டில் வந்தது. ஆங்கிலப் பிறந்த நாள், தமிழ்ப் பிறந்த நாள் என்ற சொல்லாட்சியும் புகுந்தது. எப்படி இரு நாள்கள் எனக்குப் பிறந்த நாள்களாக முடியும்?

தலைமுறை Geni தளத்தைப் பார்ப்பதையே நிறுத்தினேன். முகநூல் தளத்தில் சேர்ந்தபின் இந்த முரண் என்னைக் கலக்கியதால் இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.

சென்னையில் கவிஞர் அண்ணாகண்ணன், திருமதி சசிரேகா பாலசுப்பிரமணியன் இருவரும் என்மீது கொண்ட மதிப்புக் காரணமாக, என் 70ஆவது பிறந்த நாள் தொடர்பாக sachi70.blogspot.com வலைப்பூத் தளத்தை உருவாக்கிச் செய்திகளைப் பதிந்து வருகின்றனர். அங்கும் இந்தச் சிக்கல் வந்தாலும் அவர்கள் இருவருக்கும் என் வழமை தெரிந்ததால் 5.12 தொடர்பான கணக்கீட்டைத் தவிர்த்து வந்தனர்.

என் மக்களுக்கு இந்த வழமை தெரிந்ததால், என் மருகர் கேசவன், மகள் சிவகாமி, பெயரன் அரன் ஆகியோருடன் இந்த ஆண்டு சிட்னியில் வழமைக்கமையப் பிறந்த நாளில் கோயில் சென்று வழிபட்டேன்.
என் பிறந்த நாளை ஒட்டி வாழ்த்துகள், செய்திகள், குறிப்புகள், பரிசுகள் தந்தோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சொல்கிறேன்.

என் மீது அளப்பரிய அன்பும், தலைமுறைத் தொடர்ச்சிக்கான உயிரின் நோக்கமும் கொண்ட பாட்டன் பாட்டிக்கும் தந்தை தாய்க்கும் வழிபாட்டுக் கண்ணோட்டம் வேறு. அந்த வழிபாட்டின் பேறு அவர்களுக்கு உரியதாயிற்று.

தம்மை ஈந்தேன் என்பதால், தலைமுறைத் தொடர்பை உறுதிசெய்தேன் என்பதால் என் துணைவியும் மக்களும் கொண்ட வழிபாட்டுக் கண்ணோட்டம் வேறு.

என்மீது அன்பும் பாசமும் மதிப்பும் கொண்டு வாழ்த்தியோரின் கண்ணோட்டம் வேறு.

என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, மிக்க நன்றி.

என்றுமே கறைபட முடியாத வெள்ளை உள்ளம் கொண்டவர்

மருத்துவர் சண். காளிதாசர்

உடை மட்டுமா வெள்ளை? உள்ளத்தின் வெள்ளையை என்னென்பேன்!

வேறு ஒரு சமயம் வீட்டின் உட்புறமிருந்து கதவில் பொருத்தப்பட்டிருந்த சிறிய கண்ணாடிக் குமிழினூடாகப் பார்த்த பொழுது, வெளியில் அதனூடாக முதல் நாள் நான் நின்ற இடம் முழுவதும் பளிச்செனத் தெரிந்தது. 

மெல்லக் கதவு திறந்தது. வெண்ணிற ஆடையில் சிரித்த முகத்துடன், வாங்க தம்பி, என அன்பொழுக உள்ளே அழைத்துச் சென்று ஓர் அறையைச் சுட்டிக் காட்டி, அந்த அறையில் உடைகளை மாற்றிக்கொண்டு, குளியலறையையும் காட்டி, அதில் கைகால் முகத்தைக் கழுவுங்கள், நான் சாப்பாட்டைத் தயார் செய்கின்றேன் என்றார், சச்சி அண்ணா எனும் அந்தப் பெரியார். 

உலகளாவிய அளவில் தெரிந்த சமூக நலத் தொண்டரும் சிறந்த கல்விமானும் ஐ. நா.வில் பல இலட்சங்கள் ஊதியம் பெறுபவரும் எல்லா விதத்திலும் என்னைவிட உயர்ந்தவருமாகிய அந்தப் பெரியவரின் உபசரிப்பை ஏற்றுக்கொள்ளவும் இயலாமல் தவிர்க்கவும் சக்தி இல்லாதவனாய் நின்றேன். 

எந்தக் கடன் தீர்த்தாலும் இக்கடனை  என்றுமே என்னால் தீர்க்க முடியாது. அப்பெரியாருடைய துணைவியாரும் பிள்ளைகளும் தமிழ்நாட்டின் பிறிதொரு நகரத்தில், பிள்ளைகளின் கல்வி நிமித்தம் தங்கியிருந்தனர். சச்சி அண்ணா அவர்களும் அவரது உறவினரான குறுந்தாடியுடன் ஒருவருமே அவ்வீட்டில் இருந்தனர்.

மறுநாள் காலை எவரும் எழும்பும் முன்பாக, நான் எழுந்து,  வெளியில் சென்று காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு திரும்புவது என்ற தீர்மானத்துடன் படுக்கைக்குச் சென்றேன். அதிகாலை 4.30 மணியளவில் எழும்பி, மெதுவாகக் கதவைத் திறந்தேன்.

என்னே ஏமாற்றம்! தம்பி, முகம் கழுவுங்கள், தேநீர் தயாரித்து விடுகின்றேன் என்ற அப்பெரியாரின் குரல் என்னைக் கூனிக் குறுகச் செய்தது.

தேநீர் பருகுகையில், தோசை வார்க்கின்றேன், சாப்பிடுங்கள் என்றார்.
எல்லாம் முடிந்து திருவானமியூரில் எசுசியை  என்ற நிறுவனத்தின் தமிழ்நாட்டு அலுவலகத்துக்கு என் இந்தியப் பயணத்தின் நோக்கத்தைத் தொடரப் புறப்பட்டேன்.

சச்சி ஐயாவிடம் அனுமதி பெறும் பொழுது, பகலில் பணிமுடித்து இரவில் தங்க வந்து விடும்படி மிகவும் அன்பாக வேண்டினார். மேன்மேலும் கடமைப்பட முடியாது என்பதால், திருவான்மியூரிலேயே தங்கிவிடும் எண்ணத்தை, என் மனதுக்குள் நினைத்துக்கொண்டு விடைபெற்றேன். 

என்றுமே கறைபட முடியாத வெள்ளை உள்ளம் கொண்டவர் இப்பெரியார், தன் எழுபதாவது பிறந்த நாளை எட்டினார் என்பதறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

சண். காளிதாசர்,
மருத்துவர் (ஹோமியோபதி), மறவன்புலவு, சாவகச்சேரி.

திசைகாட்டியாய்ச் செயற்படுபவர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தகைசார் பேராசிரியர் முனைவர் சி. க. சிற்றம்பலம் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை:

மறவன்புலவு சச்சிதானந்தன் எனப் பலராலும் அன்பாக அழைக்கப்படும் நண்பர் அவர்களது நாமம், தமிழ்கூறும் நல்லுலகுக்கு நன்கு தெரிந்தது.

தமிழோடும் சைவத்தோடும் தம்மை இணைத்துக்கொண்டு, சைவ வாழ்வு வாழும் இவர், நமது சமுதாயத்திற்கு உழைத்துக்கொண்டிருப்பவர் வரிசையில் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்.

தமிழ்த் தேசியத்தோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி அவற்றின் தீர்வுக்காகப் பல தசாப்தங்களாக உழைத்து வருகிறார்.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வாழும் இவர், எமது பிரச்சனைகள் சம்பந்தமாக அங்குள்ள தலைவர்களுக்கு அறிவூட்டுவதில் விடாமுயற்சியுடன் செயற்படுபவர்.

எதுவித பிரதி பலனையும் எதிர்பாராது, எமது இனத்தின் விடிவிற்காக உழைப்பவர்கள் இவரைப் போன்று ஒரு சிலரே எனலாம்.

இவரால் நடாத்தப்படும் காந்தளகம் பதிப்பகம், தரம் வாய்ந்த தமிழ் நூல்களைப் பிரசுரப்பதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது என்றால் மிகையாகாது.

குறிப்பாகத் தேவாரத் திருப்பதிகங்களைப் பிழையற்று அச்சேற்றுவதில் இவரது உழைப்பும் விடாமுயற்சியும் போற்றத்தக்கது. இதனால் சைவ உலகுக்கு இவர் ஆற்றும் தொண்டு என்றும் மறக்க முடியாதது.

தமிழகத்தில் வாழும் போது, தம்மைத் தேடி வருபவர்களை அரவணைத்து ஆறுதல் கூறுதல் கூறி, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் சளைக்காது செய்து வருபவர்.

இந்தியா செல்லும் ஈழத்தவர்கள் அங்கு பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் போது, இன்முகத்துடன் அவர்களது இன்னல்களைக் களைந்து, திசைகாட்டியாய்ச் செயற்படுபவர்.

இத்தகைய பண்பாளர் எழுதபதாண்டு அகவையில் கால் வைப்பதை இட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

அன்னார் பல்லாண்டுக் காலம் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

                                                     பேராசிரியர் சி. க. சிற்றம்பலம்
                                                     மூத்த துணைத் தலைவர்
                                                     இலங்கை தமிழரசுக் ட்சி
அராலி தெற்கு
அராலி

சைவ சமயத்தவர்களுக்கு வரப்பிரசாதம்

பிரேமி முரளி 
(மறவன்புலவு), இலண்டன். 

ஐயா, நீங்கள்  இப்போ ஓடி ஓடிச் செய்யும் தொண்டுகளைப் பார்த்து 40 வயது என எண்ணினோம். ஆனால் எம் எழுத்தாளர் அவர்கள், தங்களுக்கு 70 வது வயது பிறந்த நாளுக்கு வாழ்த்து அனுப்பியதைப் பார்த்து நம்ப முடியவில்லை அங்கிள். 

வித்தியாசாகரின் வாழ்த்தைப் பார்த்தீர்களா? உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பைப் பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது. அவருடய எழுத்தைப் போல் மனமும் மிக உயர்ந்ததாக இருந்தது. 

உங்களுக்கு நேரம் கிடைத்தால் அவருடய ஆக்கங்களையும் படிக்கவும். நீங்கள் தாய்லாந்தில் தயாரித்த திருவெம்பாவைப்  பாடல் ஒலிபெயர்ப்பு நூல் பார்த்தேன். 

தேவாரங்களைத் தமிழ்ப் பிள்ளைகள் நேரம் உள்ளபோது இணையத் தளத்தில் கேட்பார்கள். 

என்றும் உங்கள் சேவை எமது சைவ சமயத்தவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 

அன்புடன்
பிரேமி முரளி, (மறவன்புலவு), இலண்டன்.

பல்லாண்டுகள் வாழ்ந்திடப் பாமாலைச் சரம்தொடுத்தேன்


சங்கரன் தங்கராசா

அன்பால் அரவணைக்கும் சச்சி
ஆனந்தப் பேரொளியாம்
வெள்ளைக் கமலத் திருமேனியும்
வெள்ளையுள்ளம் படைத்த வித்தகரான
கணபதி மைந்தனுக்கு
கார்த்திகைத் திங்கள் பிறந்த நாள்.
மினுங்கும் மேனியர்க்கு
மிருகசீரிடம் நட்சத்திரம்.
பண்பால் படிப்பினை செய்யும்
பசுமை நிறைந்த புனிதரைப்
பாமாலை சூட்டி நான்
பாதம்போற்றி வணங்குகின்றேன்!

வெண்நிலவு உள்ளமும்
வேதியர்க்கான ஒழுக்கமும்
கண் நிறைந்த கட்டழகும்
காலைக் கதிரவன் பேரொளி பரவி
பட்டி தொட்டியெங்கும்
பார் புகழ வாழ்ந்து வரும்
தமிழர்ம் தவப் புதல்வன்
தாயினும் சிறந்த தயாளன்
அறிஞர் அவைக்கு முதல்வன் இவரை
அறியாதார் யாருளர் அவனியில்
வள்ளக்குளத்து வள்ளல் பெருமகனை
வணங்கி மகிழும் எந்தல்யான்!

சோறிடும் பூமிக்குச் சொந்தக்காரன்
சொந்தமிகு உறவுகளின் பந்தக்காரன்
மறவன்புலவு தந்த மழலைதான்  எம்
மண்ணின் புகழ் மணக்கவைக்கும் மறவன்
உலகம் சுற்றிடும் உழைப்பாளி என்றும்
உலகம் சுற்றிடும் இவரை
வேழம் பலம் படைத்து
வேங்கையின் வேகம் கொண்டு
ஞாலம் வலம் வந்து 
ஞானம் எமக்களிக்கும் மூதறிஞர்
பெருகும் புகழுண்டே எனினும்
பெருமிதம் கொள்ளாதவர்
அருளும் ஆண்டவன் சச்சி
ஆனந்தம் வாழ்க வளமுடன்
வாழ்க வாழ்க வாழ்க!

தமிழர் நம் இடர்களைய என்றென்றும்
தளர்வில்லா நற்பணிகள் நல்கி
அயராதுழைக்கும் அண்ணல்
அருளாளர் இவரைப் போல் யாருளார்
இந்து அறப் பணிகள் கூடவே நம்
இறைமை காக்கும் உயர் பணியும்
சிங்களத்துச் சிறுமைகளைச்
சிறகடித்து செய்தியாக்கி
பங்கங்களைப் பறைசாற்றிடும்
படைப்பாளிப் பகலோன்.

சர்வதேச உறவுகளுடன்
சங்கநாதம் இசைக்கும் சான்றோன்
பண்பட்ட உள்ளங்களைப்
பகுத்தறிந்து பாராட்டி
புண்பட்ட எம்மினத்தின்
புலம்பெயர் உறவுகளுடன்
கரம்பற்றி கதை கூறி
காத்தல் கடமை யென்று
கருணை மழைபொழியும்
காவலன் ஐயா
கணபதி மைந்தனைப்
போற்றிடுவோம்!

தேவாரத் திருமுறைகள்
தெய்வீக மணம் பரப்ப
தேமதுரத் தமிழிலும்
தெய்வீகத் தொண்டாக
திக்கெட்டும் திசையிலும் அறியவே
தித்திக்கப் பல் மொழிமாற்றி
திருமுறைகள் திருவிளங்கவைக்கும்
திருத்தொண்டுகளைப் பாராட்டுவோம்!

அருகுவேரூன்றி அதை
ஆலமரமாக்கிய அதிசயன்,
அறவழி நிறுவனம் அமைத்திட்ட
தார புருசன்! புகழ் மணக்குமென்றும்
அன்பைப் போதித்தவர்க்கே! சிறுமதியர்
ஆணவம் அம்பாகிப் பாய்ந்தது
பண்பைக் கொலை செய்த அந்தப்
பாதகர் வினைதான்
வல்லமை கொடுத்த வல்லுனரை அறவழி
வாழ்வகத்தை விட்டகற் வஞ்சனை செய்த
அகந்தையர் அறிவைக் கண்டு
ஆச்சரியமென்ன என்பேன்
தூரத்திலிருந்தாலும் துணைபுரிந்து
துரும்பைத் தூணாக்கித் துக்கிவிட்டவரை
துச்சாதனம் புரிந்த துட்டத்தனம்
துரியோதனன் அவைகண்டீர்!

தமிழின இன்னல்கள்  தரையில் மட்டுமல்ல
தமிழக மீனவர்க்கும் ஈழத் தமிழரினதும்
வங்கக் கடல் முதல் அரபிக் கடல் வரை
இந்துமா சமுத்திரத்தின் பாக்கு நீரிணையிலும்
பாதகம் செய்த படையினர் செயலதனை
விட்டு வைக்காது விலாவாரியாகப் புட்டுவைத்தே
உலக அரங்கில் உண்மை வெளிக்கொணர
ஓயா உழைப்பாளி ஒப்பில்லாப் படைப்பாளி
நாடுகள் பல சென்றே நம் நாட்டில்
நல்லிணக்கம் வேண்டுமென்றார்
ஐக்கிய நாட்டு மேன்மைப் பணிகளில்
பன்னாடுகளிலும் கடமையாற்றிப்
பல்தேசிய இன உறவுகளின்
பாராட்டினை பெற்றிட்ட
பகுத்தறிவுத் தந்தையைப் போற்றுதல்
பாக்கியமே எந்தனுக்கு!

கொள்கை வேந்தரின் வாழ்வில்
கொண்ட பணிகளில் தளர்வில்லை
குடும்ப நலங்களிலும் குறைவில்லை
கொடுத்து வாழும் வள்ளலார்க்கு
எடுத்து வாழும் பழக்கமில்லை.  இவர்
சந்ததிகள் வம் செழித்து வாழ்ந்துவரும்
சங்கதிகள் கண்டு மகிழ்தேன்.

சாதித் துவேசங்கள் அகலச்
சாதிக்கப் பிறந்த சாதனையாளன்
சகல வமும் கொண்டு
சந்தோசங்கள் பெருகிட
சர்வமும் புகழ் மணக்க  இன்னும்
பல்லாண்டுகள் வாழ்ந்திட வேண்டுமென்று
பாமாலைச் சரம்தொடுத்தேன்.
மகிழும் நெஞ்சத்துடன்யான்
மறவன்புலலோ வள்ளக்குளத்து
வேழமுக விநாயர் அடிபணிந்தே
வேண்டுதல் செய்தே வணங்கி
வாழ்த்தி வணங்குகின்றேன்.

வணக்கம்.

================================
சங்கரன் தங்கராசா
தென்மராட்சிப் பிரதேச சபைஉறுப்பினர்,
நவபுரம், கைதடி, சாவகச்சேரி, தொ.பே.0094-774737483