முனைவர் க.ப. அறவாணன்
முன்னாள் துணைவேந்தர்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
ஈழத் தமிழர்க்கும் எனக்கும் படிக்கும் காலந்தொட்டுப் பழக்கம். 1959இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பில் நான் நான்காண்டுகள் பயின்ற போது, ஈழத்திலிருந்து ஆனந்தராயர் (வேல்மாறன்) திருநாவுக்கரசு, கனகரத்தினம், கணபதிபிள்ளை எனும் நால்வரும் என்னுடன் தொடர்ந்து பயின்றனர்.
இவர்களுள் வேல்மாறனும் நானும் அண்ணாமலை நகர் தெற்கு இருப்பில் தமிழ்க்குடி என்ற குடிசை வீடு ஒன்றில் தங்கியிருந்தோம் .அதே வீட்டில் இன்னொரு பகுதியில் திருநாவுக்கரசு தங்கியிருந்தார்.
வேல்மாறன் ஒரு கிறித்துவராக இருப்பினும் காலையில் எங்களுக்கு எல்லாம் முன்பே வைகறையில் எழுந்து “நமச்சிவாய வாழ்க” எனத் திருவாசகத்தின் சிவபுராணத்தை இசையோடு படிப்பார்.
அக்காலத்து அங்கு இருந்த தமிழ் இசைக் கல்லூரியில் ஈழப் பெண்டிர் பலர் இசை பயின்றனர். தேவாரம் பயின்றனர். அவர்கள் அனைவர்தம் வழி ஈழத் தமிழ், ஈழப் பண்பாடு, ஈழ உணவு, விருந்தோம்பல் இன்ன பிறவற்றை அன்றே அறிந்து அனுபவித்திருக்கின்றேன்.
தொடர்ந்து 1970இல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி துணைப் பேராசிரியராக இணைந்தபோது என்னிடம் இரண்டு ஈழ மாணவர்கள் பி.ஏ. தமிழ் பயின்றனர். இருவரும் கத்தோலிக்கத் துறவியர். ஒருவர் பெயர் தவத்திரு செல்வரத்தினம். இன்னொருவர் பெயர் ஆன்டனி ஜான்.
தவத்திரு செல்வரத்தினம் பி. ஏ. தமிழ் முடித்து யாழ்ப்பாணம் திரும்பியபின் தவத்திரு ஞானப்பிரகாச அடிகளார் விழாவில் கலந்துகொள்வதற்காக என்னை அங்கு அழைத்திருந்தார். திருச்சியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இறங்கி அந்நிகழ்வில் பங்கு கொண்டேன். அதே நிகழ்ச்சியில் தவத்திரு தனிநாயக அடிகளாரும் பங்கு கொண்டார். பின்னர் அடிக்கடி ஈழத் தொடர்பு வாழ்க்கையில் அழைந்தது. நான் அவர்களுக்கு மிக நெருக்கமானேன்.
விளைவாக, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆனபோது ஈழத் தமிழர்க்காக கனடா டொரோன்டோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வழி பி.ஏ. தமிழ்ப் பாடம் நடத்தவும், உரிய தேர்வுகள் நடத்தவும் பட்டம் வழங்கவும் அங்குள்ள தமிழ்க் கலை மன்றத்தின் வழி ஏற்பாடு செய்தேன்.
இந்த ஈழப் பின்னணியில் துணைவேந்தர் பணி நிறைவேற்று, சென்னைக்கு 2001இல் வந்தபோது அறிமுகம் ஆனவர்தான் அன்பிற்குரிய காந்தளகம் சச்சிதானந்தன். அவரிடம் தமிழும் சைவ பக்தியும் தமிழர் பக்தியும் ஒருசேர கரைபுரண்டு ஓடுவதைப் பல இடங்களில் கண்டிருக்கிறேன். அவருடைய பேச்சுகள், எழுத்துகள் எனக்கு மிகப் பிடித்தமானவை.
அவர் வெளியிட்ட நூல்கள் மிக முதன்மை வாய்ந்தவை. அவர் வரைந்த உலகத் தமிழர் இருப்பிடம் முதலான வரைபடங்கள் அனைவர்க்கும் மிகப் பயன்படுகின்றவை. அருணகிரிநாதரின் திருப்புகழைத் தொகுத்து அழகாகக் கட்டடம் செய்து வெளியிட்டுள்ளது, இன்னும் என் நூலகத்தை அலங்கரித்துக் கொண்டுள்ளது.
வாய்ப்பு நேரும்போதெல்லாம் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். ஈழத்திற்கு ஒரு முறை என்னை அழைக்கவும் தமிழர் பகுதிகளுக்கெல்லாம் அழைத்துச் செல்லவும் அவர்களது நிலையை நேரில் கண்ணுறவும் ஓர் அரிய வாய்ப்பை நண்பர் சச்சிதானந்தம் ஒரு தமிழ் எம்.பி வழியாக உருவாக்கினார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சாலை வழிப் பயணமானேன். இடையிலே இருந்த இராணுவக் கெடுபிடியும் புலிகளின் சுரங்கச் சோதனைகளும் எனக்கு வியப்பை அளித்தன. ஈழத் தமிழகம் முழுவதையும் சுற்றிப் பார்த்தேன். ஈழத்தில் தமிழ் வழியிலே கல்வி கற்பிக்கும் கூடங்களும் தமிழ் வழி நடத்தப்பெறும் நீதிமன்றங்களும் எங்கும் எதிலும் தமிழ் கொலுவிருக்கும் அழகுகளும் என் நெஞ்சைக் கவர்ந்தன. ஈழத்தைப் பார்த்தபோது ஏறத்தாழ சிங்கப்பூர் போன்ற ஒரு நாடு கண்ணுக்கு முன்னே ஆயத்தமாகி நடத்தப்பட்டு வந்ததை நேரில் கண்டேன்.
முன்பே ஈழத் தமிழர் மேலும் நான் கொண்டிருந்த அன்பும் பாசமும் பல மடங்குகள் கூடின. காந்தளகம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கத்திடையே சச்சிதானந்தன், தன்மானத்தையும் தமிழ் மானத்தையும் ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காமல் போராடி வெற்றி பெறும் கதையைத் தமிழ்க் கோட்டத்தைக் நடத்தி வரும் என துணைவியார் பலமுறை பகிர்ந்துகொள்ளக் கேட்டிருக்கிறேன்.
குறிக்கோள் தமிழருக்குச் சரியான எடுத்துக்காட்டு, நண்பர் சச்சிதானந்தன் அவர்கள் ஆவார்கள். தன் அன்னையாரைக் கவனிப்பது, அலுவலகத்தைக் கவனிப்பது, பதிப்பகத்தைக் கவனிப்பது, பொது வாழ்க்கையைக் கவனிப்பது என எல்லாத் தளங்களிலும் அவர் முதல்வராகவும் இருப்பது, மிகுந்த மகிழ்ச்சிக்குரியது; வரவேற்பிற்குரியது; பாராட்டுகள்.
No comments:
Post a Comment