முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Wednesday, August 3, 2011

உடன்பிறவா அண்ணனும் தம்பியும்

ஆ.கந்தையா
ஆஸ்திரேலியா

திரு சச்சிதானந்தன் என்னை 'அண்ணன்' என்று அழைப்பார். நான் அவரைத் 'தம்பி' என்று அழைப்பேன். திரு. சச்சிதானந்தன் அவர்களும் நானும் யாழ்ப்பாணத்தில் மறவன்புலம் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர்கள்.

மறவன்புலத்தைச் சச்சிதானந்தன் 'மறவன்புலவு' என்று எழுதுவார். நான் 'மறவன்புலம்' என்று எழுதுவேன். 'மறவர் + புலம் என்பது மறவன்புலம் ஆயிற்று. மறவர் என்றால் 'வீரம் உடையர்' என்று பொருள்படும். புலம் என்றால் 'வயல் என்று பொருள். மறவர் உழுதொழில் செய்து வாழ்ந்த ஊர் 'மறவன்புலம்.'

சச்சிதானந்தன் என் உறவினர்; நெருங்கிய உறவினர். எனது திருமணத்தின் போது எனது பெற்றாருக்குப் பதிலாகத் தத்தம் செய்து கொடுத்தவர்கள் சச்சிதானந்தனின் தந்தையாரும் தாயாரும் ஆவர். என் தந்தையாரும் தாயாரும் காலமாகிவிட்டனர். அதனால் எனது திருமணத்தின் போது தத்தம் செய்து கொடுக்க நெருங்கிய உறவினராக முன்வந்தவர்கள் சச்சிதானந்தனின் தந்தையாரும் தாயாரும் ஆவர்.

மறவன்புலத்திலுள்ள சகலகலாவல்லி வித்தியாசாலை என்ற தொடக்கப் பள்ளியிலேயே நானும் சச்சிதானந்தனும் கல்வி கற்கத் தொடங்கினோம். நான் தொட.க்கக் கல்வியை மறவன்புலத்தில் முடித்து ஆசிரிய பயிற்சியைப் பெற்ற பின்னர், சகலகலாவல்லி வித்தியாசாலையில் ஆசிரியராகவும் பணியாற்றினேன். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், சச்சிதானந்தன் அதே பள்ளியில் சேர்ந்து கல்வி கற்கத் தொடங்கினார். நான் ஆசிரியராகப் பணியாற்றினேன்சச்சிதானந்தன் மாணவனாக இருந்தார். அவருக்கு ஆசிரியராகப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னிடம் கல்வி கற்றதை சச்சிதானந்தன் எனக்கு அடிக்கடி  கூறிக்கொள்ளத் தவறுவதில்லை.

பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுவதற்கு 1955ஆம் ஆண்டு சென்னைக்குச் சென்றேன். டாக்டர் மு.வ. அவர்களிடம் தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரில் சேர்ந்து படிக்கத் தொடங்கினேன். டாக்டர் மு.வ. அவர்களின் அன்புக்குரிய மாணவனாக ஐந்து ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரில் படித்தேன்; இறுதித் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றிபெற்றேன்.

பச்சையப்பன் கல்லூரியில் படித்த காலத்தில் டாக்டர் மு.வ., பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், பேராசிரியர் அ. மு.பரமசிவானந்தம், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் மதிப்புக்குரியவனாக இருந்தேன். அதனால் பலருக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் படித்த ஐந்து ஆண்டுக் காலத்தில், என் துணைவியார் உட்பட ஐம்பதுக்கும் அதிகமான இலங்கை மாணவர்களுக்குப் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் படிப்பதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தேன். அவ்வாறு அனுமதி பெற்றுக் கொடுத்தவர்களுள் சச்சிதானந்தனும் ஒருவர்.

என் உறவினர் என்ற முறையில் சச்சிதானந்தனுக்கு டாக்டர் மு.வ., பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், பேராசிரியர் அ. மு.பரமசிவானந்தம் ஆகியோர் உட்படப் பல தமிழ் அறிஞர்களையும் தமிழ்நாட்டுத் தலைவர்களையும் அறிமுகம் செய்து வைத்தேன். சச்சிதானந்தன் அவர்களோடு, சிறப்பாகப் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவராக இருந்துள்ளார். இந்த அறிஞர்களின் ஆதரவையும் அன்பையும் பெற்றுக்கொள்வதற்கு நானே காரணமாக இருந்தேன் என்று சச்சிதானந்தன் அடிக்கடி கூறிக்கொள்வார்.

பச்சையப்பன் கல்லூரியில் படித்த காலத்தில் என் நெருங்கி நண்பராக இருந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியம் அவர்கள். பச்சையப்பன் கல்லூரியில் மாணவராகவும் ஆசிரியராகவும் இருந்தவர். சி.பா. அவர்கள். சச்சிதானந்தனை சி.பா. வீட்டிற்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தேன். அவருடன் சச்சிதானந்தன் நெருங்கிய நண்பரானார். அவரை இலங்கைக்கு அழைத்துப் பல அமைப்புகளிலும் பல்கலைக்கழகத்திலும் சொற்பொழிவுகள் நிகழ்த்த ஒழுங்கு செய்து கொடுத்தார்.

திரு. சச்சிதானந்தனின் திருமணம், திருமுறைகளின் நெறிமுறையில் ?ஆம் ஆண்டு  யாழ்ப்பாணத்தில் நடந்தது. இதுவே யாழ்ப்பாணத்தில் திருமுறைகளின் நெறிமுறையில் முதன்முதல் நடந்த திருமணம். அந்தத் திருமணத்திற்குப் பேராசியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களையும் அவரின் துணைவியாரையும் அழைத்துச் சிறப்புச் செய்தமை என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாகும்.

திரு. சச்சிதானந்தன் அண்மையில் எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: 

"நான் என்றும் உங்களுக்கு நன்றியுள்ளவன். 1959ஆம் ஆண்டு பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுவதற்குச் சென்னைக்கு வந்தேன். அது என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பச்சையப்பன் கல்லூரியில் எனக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது.

1960ஆம் ஆண்டு மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போது என்னை மருத்துவ மனையில் சேர்த்துப் பத்து நாள்கள் கண்ணும் கருத்துமாகப் பேணிக் காத்ததை என்னால் எப்படி மறக்க முடியும்?

பத்து நாள்களின் பின்னர் பச்சையப்பன் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து உடல் நலம் பெறும் வரை என்னைப் பேணிக் காத்தமை என் உள்ளத்தில் அழியாத இடத்தை பெற்றுள்ளதையும் இங்கு குறிப்பிடப் பெரிதும் விழைகின்றேன்.

இவையும் இன்னும் பலவும் 1947 ஆண்டு மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலையில் மாணவனாகத் தங்களிடம் கல்வி கற்றமையும் கல்மேல் எழுத்துப் போல் என் உள்ளத்தில் இடம்பெற்றுள்ளன.
        
என் தந்தையார் உள்ளத்தில் நீங்கள் தனி இடத்தைப் பெற்றிருந்தீர்கள். அவர் அடிக்கடி தங்களைப் பாராட்டிப் பேசுவார். எங்கள் வீட்டிற்கு வந்து தங்கிய போதெல்லாம் என் தாயார் தங்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கத் தவறியதில்லை.

1958ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த இனக் கலவரத்தின் போது நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கிய போது, என் தந்தையாரும் தாயாரும் தங்களுக்குச் செய்து கொடுத்த உதவிகளையும் இங்கு குறிப்பிடுவது ஏற்புடையதாகும்."    

திரு சச்சிதானந்தன் அவர்கள் எனக்குச் செய்த உதவிகள் மிகப் பல. நான் சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் அவரின் இல்லத்தில் தங்குவதற்கு வாய்ப்பளிக்கத் தவறுவதில்லை. எனக்கு விருப்மான உணவுகளையும் வழங்கி என்னை மகிழ்வித்துள்ளார். இவற்றை என்னால் மறக்கவே முடியாது.

நான் எழுதிய நூல்களை அச்சேற்றுவதற்கும் அச்சேற்றிய நூல்களைச் சென்னையில் வெளியிடுவதற்கும் திரு. சச்சிதானந்தன் எடுத்த முயற்சிகள் என் உள்ளத்தில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.

திரு. சச்சிதானந்தன் அவர்கள் 'காந்தளகம்' என்னும் அமைப்பை நிறுவித்  தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டும் அந்நூல்களை தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு அனுப்பியும் செய்து வரும் தமிழ்ப் பணிகள் பாராட்டப்பட வேண்டியன.

தருமபுர ஆதீனத்தின் வேண்டுகோளை ஏற்றுப் பன்னிரு திருமுறைகளைச் சிறந்த முறையில் அச்சேற்றியுள்ளமை, திரு. சச்சிதானந்தன் அவர்கள்  மேற்கொண்ட தமிழ்ப் பணிகளுள் தலைசிறந்த பணி எனக் குறிப்பிட வேண்டும். ஆனால் தருமபுர ஆதீனம், திரு. சச்சிதானந்தன் அவர்களின் பணியைப் பாராட்டிச் சிறப்புச் செய்யத் தவறிவிட்டது. 

No comments:

Post a Comment