கவிநாயகர் வி. கந்தவனம்
எழுப தகவையை எட்டும் இளவலே
உழுவ லன்பனே ஒப்பிற் பண்பனே
அழகன் அம்பலத் தாடு வான்கழல்
தொழுது வாழ்த்துவேன் துலங்கி வாழ்கவே!
அறிஞர் வாழ்பதி யாழ்ப்பா ணம்புகழ்
மறவர் திறத்தினை வையத் தவரெலாம்
அறியும் வகையிலே ஆன்ற பணிகளைக்
குறைவி லாதுசெய் குரிசில் வாழ்கவே!
ஐநா மன்றுமுன் அறிவை மதிக்கவே
பெய்யும் மழையெனப் பெருந்தொண் டாற்றினை
உய்ய ஈழத்துத் தமிழர்க் குதவினை
ஐய ஆண்டுபல் லாண்டு வாழ்கவே!
காந்த ளகத்தினால் கணினி முறையிலே
ஆய்ந்து பிழைகளை அகற்றி அழகுறத்
தீந்த மிழ்மொழி; சிறக்கப் பதிப்புகள்
ஈந்து வருமரும் ஏந்தல் வாழ்கவே!
அம்ப லத்திலே ஆடு மரனைமின்
னம்ப லத்திலே ஆட அழைத்தனை
பம்ப ரச்சுழல் வேகப் பாங்கினில்
வம்ப லர்பணி செய்வை வாழ்கவே!
அற்பு தத்திரு முறைமின் னம்பலம்
பற்பல மொழி யிற்ப தித்தவை
உற்பவ இசைப் பண்ணில் ஒலிக்கவும் ;
பொற்பு றச்செயும் புனித வாழ்கவே!
தங்கம் போலவும் தமிழைப் போலவும்
கங்கை போலவும் கயிலை மேவுவான்;
அங்கண் அருளினால் அனைத்துச் செல்வமும்
தங்கச் சச்சிதா னந்தர் வாழ்வரே!
No comments:
Post a Comment