தம்பி ஆனந்தம் 70ம் ஆண்டு நிறைவடைகின்றார் என்றதும் எனது உள்ளத்தில் பசுமையான நினைவுகள். அவரைச் சிறுபிள்ளையாக முதன்முதல் கண்ட காட்சி கண்முன் தோன்றுகிறது.
1947ஆம் ஆண்டு என் தந்தையார் மழவராயர், மலாயாவில் வாழ்ந்தது போதும் எனக் கருதினார், தாய் நாடு திரும்ப அவாக் கொண்டார். எனவே நாங்கள் இலங்கைக்கு வந்தோம்.
இலங்கையில் மறவன்புலவு எங்கள் கிராமம். வானம் பார்த்த நெல் விளையும் பூமி. வயல்களோடு ஆங்காங்கே தென்னையும் பனையும் வளர்ந்து காணப்படும். வயல்களின் நடுவே மண்மேடுகள். அம்மேடுகளில் அங்கொன்று இங்கொன்றாகக் குடிமனைகள் காட்சியளிக்கும்.
அறுவடைக்குப் பிந்திய காலங்களைத் தவிர எங்கள் வீட்டிற்கு வாகனங்கள் வர வழி கிடையாது. வரப்பு வழியாக நடந்து சென்றால் சிறிது தூரத்தில் ஒரு வீதியை வந்தடையலாம்.
அந்தத் தெருவில் எங்கள் குலதெய்வமாகிய வள்ளக்குளத்துப் பிள்ளையார் கோவிலில் குடிகொண்டுள்ளார். கோவிலையடுத்து வள்ளக்குளம் என்ற அழகிய தாமரைத் தடாகம், கண்டவர் மனதைப் பரவசங் கொள்ளச் செய்யும்.
கோவிலுக்கு அருகே எனது அப்பாச்சியின் (தந்தையின் தாயார்) ஒன்றுவிட்ட சகோதரியும் அவரது ஒரே மகன் கணபதிப்பிள்ளையும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர்.
உறவுமுறையில் கணபதிப்பிள்ளை எனக்கு குஞ்சியப்பு (சித்தப்பா) ஆவார். முன்பு ஒரு முறை எனது மூத்த சகோதரி ஊருக்கு வந்தபொழுது மாம்பழங்கள் கொண்டுவந்ததால் கணபதிப்பிள்ளைக் குஞ்சியப்புவை மாம்பழக் குஞ்சியப்பு என்று மூத்த அக்கா அழைத்ததால் நாங்களும் அவரை அவ்வாரே அழைக்கலானோம்.
ஒரு மாலைப்பொழுதில் மாம்பழக் குஞ்சியப்புவும் குஞ்சியாச்சியும் அவர்களது மூன்று பிள்ளைகளும் தின்பண்டங்கள் கொண்டு ஊருக்கு வந்துள்ள எங்களைக் காண வரப்புவழியாக நடந்து வந்தனர்.
தேவி, சாந்தா என்ற இரு சகோதரிகட்கும் இடைப்பட்ட அருமையான பிள்ளை தம்பி ஆனந்தம்.
அப்பாவின் சாயலில் உடல் மெலிவு, ஒடுக்கமான முகம். நல்ல நிறம். அப்பாவின் அதே புன் சிரிப்பு. இவையெல்லாம் ஒன்றினைந்து அமைந்த ஒரு அழகுச் சிறுவன் தம்பி ஆனந்தம்.
இன்று அவர் வளர்ந்து, பேரப்பிள்ளைகளையும் கண்டு 70 ஆண்டுகள் நிறைவை எய்தியுள்ளார்.
தம்பியின் குணங்களை நோக்கும்பொழுது அவரது அன்பும், பணிவுமே என்னை முதற்கண் ஈர்த்தன. எவரோடும் அன்பாகப் பழகுவதும், மூத்தோரைக் கனம்பண்ணுவதும், அவர்களிடத்துப் பணிவாக நடந்து கொள்வதும் தம்பியின் இயற்கையான குணமாகும்.
அக்கா என்று அவர் என்னை அழைத்தால் மீண்டுமொரு முறை அழைக்கமாட்டாரா எனத் தொனிக்கும்.
உற்றார் உறவினர், நண்பர் ஆகியோரின் தொடர்புகளை மேற்கொள்வதில் தம்பி அதி சிறந்தவர். எவ்வளவு இடைஞ்சல்களுக்கு இடையிலும் நேரத்தை ஒதுக்கி அவர்களைக் கண்டு நலன் விசாரித்துச் செல்லும் தன்மையவர்.
தமிழ் என்றால் தம்பிக்கு உயிர் என்றே கூறுவேன், எங்கள் நாட்டில் தனிச் சிங்கள மசோதா நிறைவேற்றப்பட்டபொழுது அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துத் தமிழுக்கு சம உரிமை வேண்டி நின்றவர்களில் தம்பியும் ஒருவராவார்.
தம்பியின் பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்பொழுது பள்ளியில் கற்பிக்கப்பட்ட ஆங்கில மழலைப் பாடல்களைத் தமிழாக்கம் செய்து சொல்லிக்கொடுத்தார் என நான் அறிந்ததுண்டு. தமிழறிவைப் பிள்ளைகளுக்கு ஊட்டுவதில் மிகவும் சிரத்தை கொண்டவர்.
தமிழ்ப் பண்பாட்டைப் பேணுவதிலும் மிக்க அவாக் கொண்டவர் என்பதற்கு அவரது மகன்கூறிய ஒரு சம்பவம் சான்று.
சென்னையில் ஒரு கலை கலாச்சார நிகழ்ச்சி. விழா மண்டபத்தில் தந்தை நிற்கிறார். மகன் பிஞ்ஞகன் மேலை நாட்டு உடை அணிந்து வருகிறார். தந்தை, வீட்டிற்குச் சென்று வேட்டி அணிந்து வா என்று கண்டிக்கிறார்.
இவ்வாறு நமது பண்டைய பண்பாடுகளில் நின்றும் வழுவாது தனது பிள்ளைகளிடத்தும் மிகவும் கட்டுபாட்டுடன் நடந்து கொள்வார்.
அவரது தமிழ்பற்றின் உச்ச நிலையாக அமைந்தது காந்தளகம்.
இலங்கையர் ஒருவர் தமிழ் நாட்டில் ஒரு தமிழ்ப் பதிப்பகத்தை அமைத்து, நவீன முறைகளைக் கையாண்டு அதன்மூலம் அவர் தமிழுக்கு ஆற்றும் சேவையைக் கண்டு இலங்கைத் தமிழராகிய நாம் பெருமை கொள்ளாது இருக்க முடியாது.
தம்பி ஆனந்தம் குடும்பத்தினருடன் சென்னையில் வாழ்ந்து வந்தார்.
1989-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் தல யாத்திரை செய்ய விரும்புகிறேன் என்று கூறிய பொழுது மறு சிந்தனையின்றி அகமகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றார்.
தம்பியின் மனைவியை நான் மச்சி என்று அழைப்பதுண்டு. தம்பி, மச்சி பிள்ளைகள், முருகா, பிஞ்சகன், கயல்விழி, சிவகாமி யாவரும் என்னை அன்போடு உபசரித்தனர். பிள்ளைகளுக்கு என்னை முன்பின் தெரியாது. எனினும் அவர்கள் என்னுடன் பழகியமை அன்பு பாராட்டியமை. வேண்டிய உதவிகளைச் செய்தமை யாவற்றையும் என்னால் மறக்கமுடியாது.
அவர்கள் இல்லம் இலங்கையிலிருந்து வரும் நண்பர்களுக்கும் உறவினர்க்கும் ஒரு சரணாலயமாக அமைந்ததெனின் அது மிகையாகாது.
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க தம்பியின் குடும்பம் பண்பாட்டைக் கடைப்பிடித்து வருவோர்க்கு விருந்தோம்பி உபசாரம் செய்து வருகிறது.
எனது தல யாத்திரைக்கு ஒரு சீரானதும் செலவைக் கட்டுப்படுத்துவதுமான திட்டத்தைக் கச்சிதமாய் வகுத்து தந்தார். அவரிடம் காணப்பட்ட சமயோசித புத்தியும், திறமையுமல்லவா அவர் இலங்கை அரசாங்கத்திலும் FAO/UNஇலும் உயர் பதவி வகிக்க உதவின.
2005ம் ஆண்டு நான் சென்னைக்கு வந்தபொழுது குஞ்சியாச்சி மகனுடன் வாழ்ந்து வந்தார். தம்பியின் பிள்ளைகள் யாவரும் தத்தம் பருவத்திற்கேற்ப மணமுடித்துப் பெற்றார் மனைவிட்டுப் பறந்து சென்று பிற நாடுகளில் தம் கூடுகளை அமைத்துக் கொண்டனர். மச்சியும் ஒரு மகளுக்கு துணையாக அமெரிக்கா சென்றிருந்தார்.
குஞ்சியாச்சி நோயுற்றிருந்தார். தாய்க்குத் தனது கையால் உணவு சமைத்து வைத்து, தாயாரைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருந்த தாதியிடம் பொறுப்பை விட்டுக் காந்தளகம் செல்வார். மாலையில் வந்தவுடன் இன்முகத்துடன் தாயாரின் நலன் விசாரித்துவிட்டுத்தான் மற்றக் கருமங்களைத் தொடங்குவார்.
மகனைக் கண்டவடன் தாயின் முகம் ஆதவனைக் கண்ட தாமரை போல் மலரும். இராப்போசனத்தையும் தானாகவே செய்து பரிமாறுவார். அக்கா நான் அம்மாவை ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்துப் பார்க்கிறேன் என்று தம்பி கூறும்பொழுது தாயார் கண்ணைக் கூசிச் கூசிச் சிரித்து இன்புறுவார்.
தாயின் சிறந்த கோயிலில்லை என்பதற்கேற்ப தாயை தெய்வமாகவே மதித்து வந்தார். அவரின் மனங்கோணாது மி்க்க அன்போடு அவரது கடமைகளை அவர் இவ்வுலகைவிட்டு நீங்கும் வரை செய்வதோடு அவரது ஈமக்கிரிகைகளையும் செவ்வனே செய்து முடித்தார்.
பெற்றாருக்குச் செய்யும் தொண்டு மிகவும் மகத்தானது. கடமைக்காகப் பெற்றாரைப் பார்பப்பவர் பலர் ஆனால் தம்பி ஆனந்தம் தனது கடமையைக் கண்ணுங் கருத்துமாகக் கொண்டு அன்போடு ஆற்றிய உத்தம புத்திரன் ஆவார்.
தம்பி ஆனந்தம் நற்சுகத்துடன் நீடுழி காலம் நலமே வாழ எல்லாம் வல்ல வள்ளக்குளத்துப் பிள்ளையார் அருள் புரிவாராக.
ஆக்கம் : தங்கம் ஜெகதலப் பிரதாபன்.
11/l / BLOCK
GOVT FLATS
BAMBALAPITIVA
SRILANKA
No comments:
Post a Comment