முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Sunday, May 1, 2011

நெஞ்சை நெகிழ்வித்த நிகழ்வுகள்


31.08.2010 செவ்வாய் காலை; யாழ்ப்பாணக் குடாநாடு; என் பேருந்துப் பயணத்தின் அடைநிலை. சாவகச்சேரியைத் தாண்டியதும் நுணாவில்; அடுத்தது கைதடி நுணாவில். அங்கே, அறவழிக் குழு அலுவலக வாயிலில் பேருந்து என்னை இறக்கியது. அடுத்த சில வாரங்களுக்கு நான் அங்கு தங்குகிறேன்.
அறவழிக் குழுவின் தோற்றமும் பணிகளும்:
1979 மாசியில் கைதடி மண்டபத்தில் தொடர்ந்து பத்து நாள்கள் நான் நடத்திய அறவழிப் பயிலரங்கு. பயின்றவர் அனைவரும் இணைந்தனர். அறவழிப் போராட்டக் குழுவாயினர். நான் அக்குழுவின் நிறுவனராயினேன். கடந்த 32 ஆண்டுகளாக அவர்களோடு நானும் இருக்கிறேன்.
இந்த 32 ஆண்டுக் காலம். நீண்ட பயணம். இடையூறுகளையும் தடைகளையும் தாண்டிய பயணம். அறவழிச் சிந்தனைகளுடன் அமைந்த பயணம். தொண்டுகளைத் தாங்கி, மக்கள் துயரங்களைப் போக்க முயன்ற பயணம்.
32 ஆண்டுக் காலமும் திருமிகு மு. க. சீவகதாசர் அறவழிக் குழுவின் செயலாளர். அவருக்கு இப்பொழுது 64 வயது. காந்தியச் சிந்தனை அன்றி வேறறியார். அனைவரையும் அரவணைப்பதையே தன் வாழ்வாக்குபவர். காலத்துக்குக் காலம் ஏற்படும் அழிவுகளால் அல்லலுறுவோர் அறவழிக் குழுவின் பயனாளிகள்.
1983 இனக் கலவரமாயிலென், 2003 ஆழிப் பேரலையாயிலென், துன்புற்றோர் துயர் போக்க அறவழிக் குழு அங்கிருக்கும். நான் தங்கியுள்ள அறவழி அலுவலகம் அந்த நீண்ட துயர் துடைக்கும் பயணத்தின் விளைவு.
ஆண்டுக்குத் தோராயமாக 2 கோடி ரூபாய்க்கு நிதித் திட்டம். யாவும் நன்கொடைகள், அதுவும் ஐரோப்பிய, வட அமெரிக்க, ஆத்திரேலிய நலம்பேண் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடைகள். இந்தியக் காந்தீய நிறுவனங்களுடன் அறவழிக் குழுவினர்க்குத் தொடர்பிருப்பினும் நிதி உதவி ஏதும் தமிழகத்திலிருந்தோ, இந்தியாவிலிருந்தோ பெறமுடியவில்லை.
முதலாவது நிகழ்வு:
தந்தையரை இழந்த 47 சிறுவர்களுடன் அறவழி அலுவலகத்தில் 02.09.2010 காலை கலந்துரையாடல். நான்காவது ஈழப் போரின் இறுதிக் கால அழிவுகளில் தந்தையரை இழந்த சிறுவர்களே யாவரும்.
கல்விக் கட்டணமாக ஒவ்வொருவருக்கும் ரூ.300, பயிற்சிப் புத்தகம் எழுதுகோல், பற்பசை, சவர்க்காரம் உள்ளிட்ட பொருள்கள், நன்கொடையாளரிடம் பெற்றவற்றைப் பயனாளிகளான சிறுவருக்கு வழங்கும் பணி என்னதாயது. தென்மராட்சி அன்பர்கள் பிரித்தானியாவிலிருந்து அனுப்பிய நன்கொடை. யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்கு நிலப் பகுதியே (தென்மர் + ஆட்சி =) தென்மராட்சி. சாவகத்திலிருந்து மணிமேகலை காலத்தில் புண்ணியராசனுடன் வந்தவர் இன்று வரை வாழ்ந்துவரும் சேரியே சாவகச்சேரி. தென்மராட்சியின் தலைநகர் சாவகச்சேரி. மேற்கே நாவற்குழி தொடக்கம் கிழக்கே இயக்கச்சி வரை தென்மராட்சி.
தென்மராட்சி அன்பர்கள் வழங்கிய நன்கொடைகளைத் தந்தையரை இழந்த அச்சிறுவர்களிடம் கையளித்த ஒருமணி நேரமும் என் கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்துகொண்டிருந்தது. ஒவ்வொருவராக அழைத்தேன். பெயர், வயது, முகவரி, இழப்பின் விவரம், இன்றைய நிலையாவற்றையும் கேட்டறிந்தேன். அனைவரையும் ஒன்றாக இருத்தி, உற்சாமூட்டும் சொற்களை அவர்களுக்காக்கினேன்.
அழிவிலும் உண்டு ஆக்கம் என்ற வள்ளுவரின் வாக்கை எடுத்துக் கூறினேன். ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் உணர்வை ஊட்ட அபிராமிப் பட்டர் துணை நின்றார். மனதில் உறுதி வேண்டும், வாக்கினில் இனிமை வேண்டும் என்ற தொடரைப் பாரதி வாக்காக்கினேன். திருமூலரின் மூச்சுப் பயிற்சி வரிகளைக் கூறி, உயிர் வாழ்வுக்கு மூச்சின் துணையைக் காட்டி, செயல்முறை விளக்கமாக்கினேன். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்…. பணிவோம் அல்லோம் என்ற அப்பரின் வரிகளைத் துணைகொண்டேன்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த குழந்தைகள் என்னைச் சுற்றின, கைகளைப் பற்றின, கட்டிப் பிடித்தன, என்னுடனேயே ஒன்றின. உணர்வுப் பிழம்பாக்கின. அவர்களுள் பலர் மீண்டும் முகாமுக்குள் தாயாரிடம் போகவேண்டிய கட்டாயம். சிலர் குடிசைகள் அமைத்து வாழ்கின்ற தாயாரிடம் செல்லும் நிலை. நிச்சயமற்ற உடனடி எதிர்கால வாழ்வு அவர்களுக்கு!
அன்று மாலை கவிஞர் இராதேயனும் நானுமாக, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விளையாட்டுத் திடலில் வீரகேசரி இதழின் 80ஆவது ஆண்டு விழா நிகழ்வாக நடந்த தமிழிசை நிகழ்வுக்குச் சென்றோம். சீர்காழி சிவசிதம்பரத்தின் இசைக் கச்சேரி. நிகழ்ச்சி முடிந்ததும் அவரைச் சந்தித்தேன். காந்தளகம் ஐயா வாருங்கள் எனப் பாசத்துடன் அழைத்தார். பேசினோம்.
இரண்டாவது நிகழ்வு:
ஆத்திரேலியாவில் வாழும் தென்மராட்சி அன்பர்கள் வழங்கிய நன்கொடைகளைத் தந்தையரை இழந்த சிறுவர்களுக்கு வழங்கும் நிகழச்சி 03.09.2010 காலை அறவழி அலுவலகத்தில். 02.09.2010இல் வந்த சிறுவர் அல்லாத 57 சிறுவர்களே பயனாளிகள். சீர்காழி சிவசிதம்பரத்துடன் காலையில் தொலைபேசியில் பேசினேன், நிகழ்ச்சிக்கு அழைத்தேன். வருவதாக உடன்பட்டார். உரிய நேரத்துக்கு வந்தார். அந்த அன்பளிப்புகளைச் சிறுவர்களுக்கு வழங்கினார், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்எனத் தொடங்கும் பாடலைச் சிறுவர்களுக்காகத் தன் வெண்கலக் குரலில் பாடி மகிழ்வித்தார்.
நான்காவது ஈழப் போரின் இறுதிக் காலத்தில் காயமுற்ற இளைஞர்களுக்கு வாழ்வாதாரப் பயிற்சிகளை அறவழிக் குழு வழங்குகிறது. கனடிய உலகப் பல்கலைக்கழக நிறுவனம் வழங்கும் நிதியுடன் அப்பயிற்சியைப் பெறும் இளைஞர்களைச் சீர்காழி சிவசிதம்பரம் சந்தித்தார், ஊனமுற்றவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்தச் சிறுவர்களுட் பலர் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தென்மராட்சிக்குள் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள். தென்மராட்சிக்குள் வந்தவர்களுக்கு விருந்தோம்பும் பண்புடன் வெளிநாட்டில் வாழ் தென்மராட்சி அன்பர்கள் இந்தப் பணியைத் தொடர்ந்து தொண்டாக்கி வருகின்றனர். இந்தச் சிறுவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையை ஊட்ட, அஞ்சேல் என ஆதரவுக் கரம் நீட்ட, உலககெங்கும் பரந்து வாழும் தென்மராட்சி அன்பர்கள் தொடர்ந்து தொண்டாக்குகின்றனர்.
மூன்றாவது நிகழ்வு:
கனடிய உலகப் பல்கலைக்கழக நிறுவனத்தின் உதவியுடன் பயிற்சிபெறும் இளைஞர்களின் விதவைகளான தாய்மார்களுக்கு உடுதுணி மற்றும் ஆடைகளைக் கணடாவிலிருக்கும் திரு. வ. ச. துரைராசா அனுப்பியிருந்தார்.
1979இல் என்னிடம் பயிற்சிபெற்ற அவர், அறவழிக் குழுவின் தலைவராக 1988 வரை உழைத்தவர். அவரது அறவழி நோக்குடன் பிறருக்கு எழுந்த முரணால் உயிரச்சம் காரணமாய்க் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். அவரது புலப்பெயர்வுக்கு நான் அப்பொழுது உதவினேன். அங்கு சென்றாலும் அவரது நினைவுகள், அறவழிக் குழுவுடன் ஒன்றியன.
அவர் அனுப்பிய உடுதுணிகளைக் கையளிக்கும் பணி 04.09.2010 அன்று காலை எனதாயது.
அத்தாய்மார்கள், கணவர்களை நான்காவது ஈழப் போர்க் காலத்தில் இழந்தவர்கள். சிலர் கூலி வேலை, சிலர் தையல் வேலை, சிலர் பொரித்த உணவு தயாரிக்கும் வேலை, சிலர் வீட்டு வேலை எனத் தம் உடல் உழைப்பை நம்பிய வாழ்வாதாரத்துடன் நிச்சயமற்ற எதிர்காலத்தை ஏக்கத்துடன் நோக்கி வாழ்பவர்.
அவர்களுட் சிலர் மறுமணமாகும் வயதினர். ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை பெருகிய போர்ப்பின் எழும் வழமையான வரலாற்றுச் சூழ்நிலை அத்தாய்மார்களின் மறுமண எதிர்காலத்துக்கு உற்சாகமானதாக அமையவில்லை.
தொண்டர்தம் பெருமை:
2010 செப்டம்பர் திங்களின் 2, 3, 4 ஆகிய இந்த மூன்று நாள்களும் அறவழி அலுவலகத்தில் நெஞ்சத்தை நெகிழ்விக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர் அறவழிக் குழுச் செயலாளர் திருமிகு மு. க. சீவகதாசர். அவருக்கு உறுதுணையாக, திருமதி லோகேசுவரி, செல்வி சாந்தி, திருமிகு ராசன் ஆகியோர் இருந்தனர்.
அறவழி அலுவலக வளாகத்தில் இரண்டு மாடிக் கட்டடத்தில் அலுவலகம், நூலகம், கணினிப் பயிலகம் உள்ளன. அருகிலுள்ள பரந்த தொழிற் பயிற்சிக் கூடத்தில் உலோக ஒட்டுப் பயிற்சி, மின்கம்பி இணைப்புப் பயிற்சி, கணினி திருத்தும் பயிற்சி, வானொலி தொலைக்காட்சி திருத்தும் பயிற்சி, உந்தீருருளி திருத்தும் பயிற்சி யாவும் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன. அறவழிக் கலையரங்கத்தில் கூட்டங்களும் கலைநிகழ்ச்சிகளும் பயனாளிகளுக்கான வழங்கல் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
September 6, 2010

No comments:

Post a Comment