முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 6, 2011

தமிழ் மணத்தையும் சைவ நெறியையும் பரப்புபவர்


காந்தளகம் பதிப்பகத்தின் நிறுவனர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் மின்தமிழ், மின்னஞ்சல் குழுமத்தில் மிக ஆழமான கருத்துக்களை மிகவும் ஆழகாகப் பதிவு செய்து வருகின்றவர்.

இணையம் இன்று உலகில் உள்ள தமிழர்களை இணைக்கிறது. தமிழ்நூல் இணையதளம் www.tamilnool.com மற்றும் தமிழின் அரிய முயற்சியான www.thevaaram.org இணைய தளத்தில் பன்னிரு திருமுறைகளையும் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, கன்னடம், சிங்களம், சீனம் போன்ற பல மொழிகளில் ஒலிபெயர்த்துப் பதிவேற்றப்படுவதில் அவர் உந்து சக்தியாகவும் தூண்டுதலாகவும் மிகவும் ஆற்றலுடன் செயல்படுகிறவர்.
12ம் நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்த ஐன்னன் என்ற ஒரு கன்னடக் கவி கூறிய வரிகளை நினைவு கூர்கிறேன்.                  
புதிய மாலை கட்டுகிறான் ஒரு
பூக்காரன்,அதைச் சூடிக் கொள்பவர்
இல்லையெனில் வாடிப்போகாதோ!
என்றார் அவர்.
இலக்கியம் படைத்தால் மட்டும் போதாது. அதை இரசிக்கக் கூடியவர்களின் அவசியத்தையும் கவி ஐன்னன் எடுத்துக் கூறுகிறார்.
ஐயா சச்சிதானந்தன் அவர்கள், நமது தமிழின் சைவ இலக்கியப் பொக்கிசத்தை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம், உலக மொழிகளில் சைவத்திருமுறையின் நறுமணத்தை இணையதளத்தின் வாயிலாகத் தமிழ் மணத்தையும் சைவ நெறியையும் பரப்ப உறுதுணையாக உள்ளார். இதனால் நான் பெருமிதம் அடைகிறேன்.
ஐயா மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் முதல்முதலாக, மொழிபெயர்ப்புக் காரணமாகத் தொலைப்பேசியின் மூலமாக எனக்கு அறிமுகமானவர்.
அவர் சிறந்த எழுத்தாளராகச் சிறந்த பதவியில் இருந்து வந்த போதிலும் மிகவும் எளிமையானவரும் ஆவார்.
அவருடைய வார்த்தையில் அன்பும், பண்பும், ஞானமும், நிறைந்திருக்கும்.
மற்றவர்களை மிக வேகமாகக் கவரக்கூடிய பேச்சாற்றலும் மனிதநேயமும் கொண்ட மாமனிதராகவும், எழுத்தாளர்களுக்கு முன்னேறும் ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் உண்டாக்கும் வண்ணம் பேசும் திறன் கொண்டவரும் ஆவார்.
ஆன்மீகத்தின் மீது மிக்க ஆர்வம் கொண்ட அவர், நம்மையும் ஊக்கப்படுத்தி மிக எளிமையாக ஆன்மீக இலக்கியத் தொண்டில் ஈடுபடச்செய்யும் மிக உன்னதமான சக்தியைக் கொண்டவர்.
அவருடைய ஆன்மீக இலக்கியத் தூண்டுதலால்தான் என்னால் ஒன்பதாம் திருமுறையைக் கன்னடத்தில் மொழிபெயர்க்க முடிந்தது.





செம்மொழி மாநாட்டின் சிறப்பு வெளியீடாகவும் அந்நூல் வெளிவந்தது.
12ம் நூற்றாண்டின் வசன இலக்கியத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த கன்னடப் புலவர் பசவண்ணா அவர்களின் வரிகள் நினைவில் வருகின்றன. ஒரு நல்ல மனிதர் என்றால் வாக்கும், நடையும் ஒன்றே ஆக இருக்க வேண்டும் என்றார் அவர்.
இதைக் கடைப்பிடித்துக் கொண்டிருப்பவர் சச்சிதானந்தன் ஐயா அவர்கள். நான் என்ற (அகம்) இல்லாமல் அனைத்திலும் சிவனைக் காண்பவர். சிவனை அன்றி ஒரு அணுக்கூட அசையாது என்றும், அனைத்தும் சிவமயம் என்பதிலும் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டவரும் ஆவார்.
உலகளாவிய எண்ணற்ற உலக மொழிகளில் திருமுறையின் மூலம் சிவனைப்பற்றி அனைத்து மனித இனங்கள் மொழி இனம் பாகுபாடு அன்றிக் கணிணி மூலமாகவும் நூல்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளும் வாய்ப்பினை நல்கியுள்ளார்.
திருமுறைகளைக் கன்னடத்துக்கு மொழிபெயர்க்கும் இவ்வரிய வாய்ப்பினை எனக்கு நல்கிய சச்சிதானந்தன்  ஐயா, மற்றும் மயிலாடுதுறை  தருமபுரம் ஆதீனத்திற்கும் சென்னை காந்தளகத்திற்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.
மலர்விழி, க.
Prof. Malarvizhi, K., Presidency College, Kempapura, Hebbal, Bangalore-24
26-03-2011

No comments:

Post a Comment