முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Saturday, December 31, 2011

வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

 மறவன்புலவு க.சச்சிதானந்தன்

முகநூல் (facebook), கூகுள் கூட்டல் (Google plus), தலைமுறை (Geni) போன்ற சமூக வலைத் தளங்கள் ஐரோப்பியப் பண்பாட்டை உலகமயமாக்குவதில் வெற்றி கண்டு வருகின்றன.

தமிழ் மரபுக்கமையப் பிறந்த நாள் கணக்கு, நிலவுப் பயணம் சார்ந்தது. வானில் தெரியும் 27 நாள்மீன்கள், நிலத்தில் இருந்து வானைப் பார்த்தால் எந்த நாள்மீனுக்கு நேர்க்கோட்டில் நிலவு தெரிகிறது என்ற துல்லியமான அறிவியல் கணக்கீடு, அந்த நாள்மீனே பிறந்த நாள் என்ற கணக்கீடு தந்ததே ஐப்பசிச் சதயம் என்னும் இராசராசனின் பிறந்த நாள். நம் முன்னோர்கள் அந்தக் கணக்கில் பிறந்த நாள் கணக்கிடுதலை விட்டுச் சென்றனர்.

என் பிறந்த நாள் கார்த்திகை மாதம் முழுநிலா நாள் கழிந்த மூன்றாவது நாள். கார்த்திகை மாதம் கார்த்திகை நாள்மீன் நேர்க்கோட்டில் வானத்தில் முழுநிலா தெரியும். மூன்றாவது நாள் மிருகசீரிடம் நாள்மீன் கூட்டத்து நேர்க்கோட்டில் தேய்பிறை நிலவு தெரியும். அந்த நாள் என் பிறந்த நாள். இந்தக் கணக்கீடு என் பாட்டனும் பாட்டியும் தந்தது, என் தந்தையும் தாயும் தந்த கணக்கு.

நான் பிறந்த சில ஆண்டுகள் வரை மாதந்தோறும் என் பாட்டனும் பாட்டியும் கோவிலுக்கு என்னை அழைத்துச் செல்வர், என் நலம் வேண்டி வழிபாடு நடைபெறும். சில ஆண்டுகளுக்குப் பின்னர் என் தந்தையும் தாயும் ஆண்டுக்கு ஒருமுறை என்னைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வர். வழிபாடு நடைபெறும்.

ஒரே பெயரன், ஒரே மகன், தலைமுறைத் தொடர்ச்சிக்கு வாய்க்கால். எனவே என் நலம் வேண்டும் வழிபாடு.

70 ஆண்டுகளாக இந்த நடைமுறையே நான் கண்ட நடைமுறை.

62 நாடுகளுக்குப் பயணித்தேன். பல்லின மக்களுடன் பழகினேன். பணிபுரிந்தேன். 23 அரசுகளுக்கு ஆலோசகராக இருந்தேன். ஆண்டுக்கு ஒருமுறை வழிபாடு தவிரப் பிறந்த நாள் நிகழ்ச்சி வேறறியேன்.
கடந்த சில ஆண்டுகளாக, கிரிகோரியன் நாட்காட்டி அமைவில் 5.12 நாள் வந்தாலே எனக்கு வாழ்த்துகள் பலரிடமிருந்து மின்னஞ்சலில், தொலைபேசியில் வரத் தொடங்கின. தலைமுறை Geni சமூக வலைத் தளத்தில் என் பிறந்த நாள் இவ்வாறிருந்ததால், வேறு நாட்காட்டி அங்கு இல்லாததால், இந்தத் திணிப்பு என்னை வியப்புக்குள்ளாக்கியது. உலகம் முழுவதும் என் பிறந்த நாள் இந்த ஆண்டுக் கணக்கீட்டில் வந்தது. ஆங்கிலப் பிறந்த நாள், தமிழ்ப் பிறந்த நாள் என்ற சொல்லாட்சியும் புகுந்தது. எப்படி இரு நாள்கள் எனக்குப் பிறந்த நாள்களாக முடியும்?

தலைமுறை Geni தளத்தைப் பார்ப்பதையே நிறுத்தினேன். முகநூல் தளத்தில் சேர்ந்தபின் இந்த முரண் என்னைக் கலக்கியதால் இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.

சென்னையில் கவிஞர் அண்ணாகண்ணன், திருமதி சசிரேகா பாலசுப்பிரமணியன் இருவரும் என்மீது கொண்ட மதிப்புக் காரணமாக, என் 70ஆவது பிறந்த நாள் தொடர்பாக sachi70.blogspot.com வலைப்பூத் தளத்தை உருவாக்கிச் செய்திகளைப் பதிந்து வருகின்றனர். அங்கும் இந்தச் சிக்கல் வந்தாலும் அவர்கள் இருவருக்கும் என் வழமை தெரிந்ததால் 5.12 தொடர்பான கணக்கீட்டைத் தவிர்த்து வந்தனர்.

என் மக்களுக்கு இந்த வழமை தெரிந்ததால், என் மருகர் கேசவன், மகள் சிவகாமி, பெயரன் அரன் ஆகியோருடன் இந்த ஆண்டு சிட்னியில் வழமைக்கமையப் பிறந்த நாளில் கோயில் சென்று வழிபட்டேன்.
என் பிறந்த நாளை ஒட்டி வாழ்த்துகள், செய்திகள், குறிப்புகள், பரிசுகள் தந்தோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சொல்கிறேன்.

என் மீது அளப்பரிய அன்பும், தலைமுறைத் தொடர்ச்சிக்கான உயிரின் நோக்கமும் கொண்ட பாட்டன் பாட்டிக்கும் தந்தை தாய்க்கும் வழிபாட்டுக் கண்ணோட்டம் வேறு. அந்த வழிபாட்டின் பேறு அவர்களுக்கு உரியதாயிற்று.

தம்மை ஈந்தேன் என்பதால், தலைமுறைத் தொடர்பை உறுதிசெய்தேன் என்பதால் என் துணைவியும் மக்களும் கொண்ட வழிபாட்டுக் கண்ணோட்டம் வேறு.

என்மீது அன்பும் பாசமும் மதிப்பும் கொண்டு வாழ்த்தியோரின் கண்ணோட்டம் வேறு.

என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, மிக்க நன்றி.

No comments:

Post a Comment