முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 18, 2012

சச்சிதானந்தனின் பயணங்களும் பசுமை நினைவுகளும் 2

சச்சிதானந்தனின் பயணங்களும் பசுமை நினைவுகளும் 2
அருணகிரி, (தனிச் செயலர், வைகோ)


பசிபிக் கடல் பரப்பில் அரசுகளுக்கு ஆலோசகராக...

கடல் அட்டைத் தொழிலை பசிபிக் கடலில் திட்டமிட்டு வளர்க்கத் தென் பசிபிக் அரசுகளின் கூட்டு ஆணையம் தீர்மானித்தது. திட்டமிட்டு வளர்த்தால் அப்பிராந்தியத்தின் பொருளாதார வளம் மேம்படும் எனக் கருதிய ஆணையம், ஐநா உலக உணவு வேளாண்மை நிறுவனத்தை அணுகி, அவ்வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டது.
சீனர்களும் ஜப்பானியர்களும் விரும்பும் உணவு கடலட்டை. பசிபிக் கடலின் ஆழமற்ற கரையோரக் கடலில் வளரும் கடலட்டைகளுக்குச் சீனரின் சந்தையில் நல்ல விலை கொடுப்பர்.  ஹொங்கொங், சிங்கப்பூர் ஆகிய இரு சந்தைகளும் கடலட்டைகளைப் பெருமளவு கொள்வனவு செய்து வந்தன.
இலங்கையின் வடமேற்கே, வடகடலிலும் தென்கடலிலும் கடலட்டை வளங்கள் நிறைந்திருந்தன. இலங்கையிலிருந்தும் சீனச் சந்தைக்குக் கடலட்டைகள் பெருமளவு போயின. அக்காலத்தில் அந்த வளத்தை ஒழுங்குசெய்து, பதனிடலைச் சீராக்கிக் கடலட்டைத் தரத்தை  உயர்த்தி இலங்கையின் ஏற்றுமதி வருவாயைப் பெருக்கும் வழிகளைப் பணியாகக் கொண்டிருந்தேன்.
இதே பணியைப் பசிபிக் பிராந்தியத்திலும் மேற்கொள்ளமுடியுமா என  ஐநா உலக உணவு வேளாண்மை நிறுவனம் என்னைக் கேட்டது. இலங்கை அரசு வழியாக அழைப்பு வந்தது.
1971ஆம் ஆண்டு. எனக்கு 29 வயது. என் மாமன் மகளைத்தான் 1968இல் திருமணம் செய்து கொண்டேன். ஜப்பானில் இருந்து வந்தபின் என் மனைவி ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். எங்களின் முதற் குழந்தை. கயல்விழி எனப் பெயரிட்டுப் பேணி வளர்த்தோம்.
மூத்த மகள் விளையாடிக்கொண்டிருக்கிறார். மாமனார் நோய்வாய்ப்பட்டிருந்து காலமானார். மீண்டும் மனைவி கருவுற்றிருந்தார். சிங்கள நாட்டில் ஜேவிபி புரட்சியும் இந்திய உதவியுடன் முறியடிப்பும் நடந்த காலம்.
அரச ஊழியர் வெளிநாடு போவதெனில் பிரதமர் அலுவலக ஒப்புதல் தேவை. சீறீமாவோ பிரதமர். நேரே அவரின் அலுவலகம் சென்று ஒப்புதல் பெற்றேன். 1967இல் கடல் தொழில் ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாகப் பணயில் சேர்ந்தேன்.
ஐந்தாவது ஆண்டில் ஐநா உலக உணவு வேளாண்மை நிறுவனம் என்னை அழைக்கிறது. எனக்குப் பின்னர் பணியில் சேர்ந்தவர் வேதியியலாய்வாளர் பீரிஸ். எனக்கு முன்பாகப் பணியில் சேர்ந்த எழுவர், பதினைந்து இருபது ஆண்டுகளாக, அங்கு விஞ்ஞானிகளாக இருந்தனர். நால்வர் தமிழர், ஒருவர் பறங்கியர், ஏனையோர் சிங்களவர். அவர்களை இதுவரை ஐநா உலக உணவு வேளாண்மை நிறுவனம் இத்தகைய பணிக்கு அழைக்கவில்லை. எனவே அவர்களிற் பலரின் பாராட்டைப் பெற்றேன். எனினும் அவர்களிற் சிலர் பொருமினர்.
பசிபிக் கடலில் சிதறிக் கிடக்கின்ற பல தீவுகளில் தென் கிழக்குப் பகுதியில் உள்ள தீவுகளில்தான் என் பணி. மகிழ்ச்சியோடு பணியை ஒப்புக் கொண்டேன். தன் தந்தையாரை இழந்துநின்ற மனைவிக்கு நானும் இல்லையென்பதால் தனிமையில் திடீரென விட்டது போன்ற மனநிலை.
தாய்லாந்தில்...
கொழும்பிலிருந்து சிங்கப்பூர் வழியாகத் தாய்லாந்துத் தலைநகர் பாங்காக்கு சென்றேன். அங்கே மூன்று நாள்கள், எனது பணி குறித்த வழிகாட்டுதல்களைத் தந்தனர். பசிபிக் பிராந்திய நாடுகளில் ஐநா அலுவலகம் இல்லாததால், என் கை நிறைய அமெரிக்க டாலர் நோட்டுகளைச் செலவுக்குக் கொடுத்தார்கள். கட்டுக்கட்டாகப் பணம். எனது பயணத் திட்டத்தை நான் செல்ல இருந்த அனைத்து இடங்களுக்கும், டெலக்ஸ் வழியாக அனுப்பினார்கள். ஐநா பணியாளர் என்ற அடையாள அட்டையையும் தந்தனர்.
சிங்கப்பூரில்...
பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் சென்றேன். அங்கே ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஆனால், என் உறவுவழி அண்ணன் வீட்டில்தான் ஒரு வார காலம் தங்கினேன். சிங்கப்பூர்ச் சந்தைகளுக்குச் சென்றேன், அரசு அலுவலகங்கள் சென்றேன், விவரங்கள் சேகரித்தேன். நான் சென்ற எல்லா இடங்களிலும், சிங்கப்பூர் அரசு சார்பில் ஒருவர், என்னோடு வந்தார்.
ஹொங்கொங்கில்....
அங்கிருந்து ஹொங்கொங்கு சென்றேன். பசிபிக் கடலட்டைகளுக்குக்குக் ஹொங்கொங்கு பெரிய சந்தை. ஹொங்கொங்கு மீன் வளத்துறை அலுவலர் எனக்கு அனைத்து உதவிகளையும் வழங்கினார். சீனர்களின் சுறுசுறுப்புக் கண்டு வியந்தேன், எளிமையாகவும் இயல்பாகவும் உள்ளார்கள். ஹொங்கொங்கு நகரத்தை உலகின் பொருளாதாரச் சந்தகளுள் ஒன்றாக வைத்திருந்தனர். ஆங்கிலேய ஆட்சிதான் எனினும் சீனரே அனைத்து அலுவலகங்களிலும் இருந்தனர். காய்கறி உணவுக்கு மட்டும் என உணவகங்கைளைப் பல தெருக்களில் ஹொங்கொங்கு நகரில் சீனர்கள் வைத்திருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தேன்.
பிலிப்பைன்சில்...
என் அடுத்த பணி பிலிப்பைன்சு நாட்டில். அங்கு சென்று ஆஸ்திரேலிய அமெரிக்க நாடுகளுக்கான நுழைவனுமதிகளைப் பெற்றேன். மூன்று நாள்களில் அனைத்து அனுமதிகளையும் தந்தனர். மணிலாவில் உள்ள ஐநா அலுவலகத்தினர் உதவினர். அந்நாள் வரையான செலவுக் கணக்குகளைக் கேட்டறிந்து அத்தொகையைத் தந்தனர். மணிலாவில் இடைத்தங்கலே அன்றி, கடலட்டை தொடர்பான பணிகள் இல்லை.
நிலநடுக்கோட்டைக் கடந்தேன்
அடுத்ததாக, பாபுவா நியூகினியில் பணி. அந்த நாட்டுக்குப் பிலிப்பைன்சில் இருந்து நேரடி விமானம் கிடையாது. மணிலாவில் இருந்து தெற்கு நோக்கி, ஆஸ்திரேலியாவின் கிழக்கு நகரான பிரிஸ்பேன் சென்றேன்.
நான் சென்ற விமானம், 00 கிடைக்கோடான நிலநடுக்கோட்டைக் கடந்தபோது, நிலநடுக்கோட்டைக் கடந்து சாதனை புரிந்ததாக, பயணிகள் அனைவருக்கும் ஒவ்வொரு சான்றிதழ் கொடுத்தார்கள்.
மணிலாவில் இருந்து பிரிஸ்பேன் சென்ற விமானம் பாப்புவா நியுகினிக்கு மேலாகச் சென்றது. தரையிறங்கவில்லை. ஐநா ஆதரவுடன் பாப்புவா நியூகினியில் ஆஸ்திரேலியாவின் ஆட்சி. பிரிஸ்பேனில் இருந்து போர்ட் மொர்ஸ்பிக்கான விமானத்தில் ஏறினேன். பாப்புவா நியுகினியின் தலைநகரில் இறங்கினேன். கொழும்பில் இருந்து சென்னைக்கு வருவதற்கு, தில்லிக்குப் போய் இறங்கி, அங்கிருந்து விமானத்தில் ஏறி, சென்னை வருவது போல அமைந்தது இந்தப் பயணம்.
பாப்புவா நியுகினியில்....
போரட் மொர்ஸ்பி சின்னஞ் சிறிய நகரம். ஒரே ஒரு கடைத் தெரு. ஒரு திரை அரங்கு, மதுபானக் கடைகள் அதிகம். மீன்வளத்துறை அலுவலர்கள் அனைவரும் ஆஸ்திரேலியர். வண்டி ஓட்டுநர் போன்ற பணிகளுக்கு உள்ளூர் வாசிகள். பரந்த நிலப்பரப்பில் அலுவலகங்கள் சிதறிக் கிடந்தன. கார் இல்லாமல் எங்கும் செல்லமுடியாது. எனக்காக ஆஸ்திரேலியரான அலுவலர் ஒருவர், வண்டி ஒன்றுடன் எப்பொழுதும் சேர்ந்து கொள்வார்.
அந்த நாட்டின் கடலோர மீன்பிடித் தளங்களை வரைபடம் கொண்டு விளக்கினர். அந்த ஊர்களுக்குச் செல்லும் பயணத் திட்டத்தைத் தயாரித்தோம். விமானங்களில் பயணித்தோம். அரசின் விருந்தினர் இல்லங்களில் தங்கினோம். மீனவச் சிற்றூர்களுக்குச் சென்று மீனவர்களைச் சந்தித்தோம். கடலில் அவர்களுடன் பயணித்தோம். கடலட்டை மாதிரிகள் சேகரித்தோம். அம்மீனவர்களின் கடலட்டைப் பதனிடல் முறைகளைத் தெரிந்துகொண்டோம். 
என் சைவ உணவுப் பழக்கம் என் பயணங்களில் சிக்கலாக இருப்பதில்லை. முட்டையும் சாப்பிடமாட்டேன். ரொட்டி, பழக்கழி, வெண்ணெய் கிடைக்காத ஊர் இல்லவே இல்லை. அரச விருந்தினர் இல்லங்களில் சமையலர் எப்பொழுதும் இருப்பார். ஆங்கில மொழிக்குப் பதிலாகப் பிட்சின் மொழி அங்கு பேசுவர். ஆங்கிலச் சொற்கள் நிறைந்த ஆனால் அதே இலக்கணமில்லாததே பிட்சின். என் தேவைகளைச் சமையலரிடம் கூறுவேன். வெந்த சோறு, அவித்த உருளைக் கிழங்கு, அரை அவியல் காய்கறி, நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகு, வெண்ணெய், தக்காழிப்பிசை கேட்பேன். மேசையில் அழகாக அடுக்கிவைப்பார்.
ஒரே ஒரு சமையல்காரர் என் மீது அன்புடன் சோறு சுவையாகத் தருகிறேன் என்றார். கடுகு சேர்த்துச் சமைத்தது போன்று கறுப்புப் புள்ளிகளுடன் சோறு இருந்தது. கடுகா என்றேன், இல்லை, வண்டு என்றார். சிறு வண்டு சேர்த்தால் சோறு மிகச் சுவையாக இருக்கும் என்றார். தம்மூர் வழமை என்றார். என் உணவுப் பழக்கத்தை விளக்கினேன். மீண்டும் அரிசி களைந்து, வண்டில்லாச் சோறு வெந்து தந்தார். சில இடங்களில் நானே சமையல் அறைக்குச் சென்று சமைத்துக் கொள்வேன்.
என் வாய்க்குள் என்ன செல்லவேண்டும் என்பதைத் தீர்மானிப்பவன் நானே என என் ஆஸ்திரேலிய அன்பர் சமையலரிடம் கூறுவார். அத்ற்கேற்றவாறு சமைத்துக் கொடுப்பவரே சிறந்த சமையலர் என்பார்.
வடக்கே அத்தபே சென்றோம். வேவாகம், மடாங்கு, இராபோல், கராரா, தூபி, என வடக்குக் கடற்கரையோரமாக, விமானம், ஜீப், எனப் பயணித்தோம். அங்கங்கே அரசு அலுவலகங்கள் எம் பயண வசதிகளைப் பார்த்துக்கொண்டன.
மே 5 ஆம் தேதி, போர்ட் மொர்ஸ்பி திரும்பும் வழியில் மடாங்கு விமான நிலையத்தில் விமானம் மாறக் காத்திருந்தேன். விமான நிலைய ஒலிபெருக்கியில் என் பெயரைச் சொல்லி அழைத்தனர். நானும் என் அன்பருமாக விமான நிலைய அதிகாரியைச் சந்தித்தேன். எனக்குப் பெண் குழந்தை பிறந்து இருப்பதாகச் செய்தி கூறினர்.
கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்துக்கு என் உறவினர் இச்செய்தியைக் கூற அவர்கள் என் பயணத்திட்டத்தை அறிந்து போர்ட் மொர்ஸ்பிக்குத் தெரிவிக்க, அங்கிருந்து விமான நிலையத்துக்குச் செய்தியை அனுப்ப, அந்த மகிழ்ச்சிச் செய்தியைக் கேட்ட உடன் வந்த ஆஸ்திரேலிய அன்பர், ‘எனக்குச் சாம்பெய்ன் வாங்கிக் கொடுஎன்று கேட்டார். மது அருந்தேன் எனவே, கொகோ கோலா வாங்கிக் கொடுத்தேன். போரட் மொர்ஸ்பி வந்ததும் மீன்வளத்துறை அலுவலர் யாவருக்கும் பழச்சாறு வாங்கிக் கொடுத்தேன். 
பாப்புவா நியுகினியில் இரண்டு வார காலம் தங்கி இருந்தேன். நான் அங்கே சென்ற காலங்களில் தமிழரையோ இந்தியரையோ சந்திக்கவில்லை. இப்போது, அந்த நாட்டில், ஆசிரியர்களாக, பொறியியலாளராக, கணக்காளராகப் பல்வேறு பணிகளில் தோராயமாக 1,000 தமிழர் உளர்.
பாப்புவா நியுகினிப் பணி முடித்துப் பிரிஸ்பேன் வழி மணிலா திரும்பினேன்.
அடுத்த பணி இடம் பலாவு என்ற சிறிய தீவு. மணிலாவில் இருந்து அங்கே செல்ல நேரடி விமானம் இல்லை. எனவே, குவாம் என்ற சிறிய தீவுக்குச் சென்றேன். அங்கே அமெரிக்கக் கடற்படை நிலைகொண்டுள்ளது.
குவாமில் இருந்து பலாவுக்கு விமானம். பலாவு சென்றதும் அமெரிக்க அரசு அலுவலர் என் தேவைகளைக் கவனித்தார். அவர் சிறந்த மீனவர், அனுபவம் மிக்க படகோட்டி. கடலில் சுழியோடுபவர். நான் சென்ற காலத்தில் ஐநா ஆதரவுடன் பலாவு அமெரிக்க ஆட்சியில் இருந்தது, இப்பொழுது விடுதலைபெற்ற நாடு. கொறோர் அதன் தலைநகர்.
முதல் நாள் கடலில் பயணித்தோம். விலைபோகும் கடலட்டை வகைகளை அடையாளம் காட்டி வந்தேன். உள்ளூர் மீனவர் சுழியோடிப் பிடித்து வந்தார். ஹொங்கொங்கில் அதிக விலை உள்ள அந்தக் கடலட்டை வகைகளை ஒவ்வொன்றாக அடையாளம் காட்டினேன். அடுத்த நாள் அவற்றைப் பதனிடும் செயல்முறை விளக்கம் கொடுத்தேன். அந்த மீனவர் என் நண்பரானார். அங்கு தங்கிய ஒரு வாரமும் என் கூடவே இருந்தார். அவருடன் அங்குள்ள அமெரிக்கரின் வணிக நிறுவனம் ஒன்றுக்குச் சென்றேன். ஹொங்கொங்குடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன், பதனிட்ட மாதிரிக் கடலட்டைகளை அந்தப் பலாவு அமெரிக்க வணிகர்வழி ஹொங்கொங்கு வணிகருக்கு அனுப்பினேன். நான் தங்கியிருந்த வாரத்திலேயே விலையும் வந்தது. அந்த மீனவ நண்பர் புதிய தொழில் ஒன்றைத் தொடங்க வழி சமைத்தேன்.
பலாவு மீன்வளத்துறை அலுவலரான அமெரிக்கர் எனக்கு விருந்து தந்தார். மது அருந்த முடியவில்லை, ரொட்டியும் வெண்ணெய்யும் சாப்பிட்டேன். ஆனால் அந்த விருந்துக்கு அவர் அழைத்திருந்த மீனவர்கள் விடிய விடிய உறிஞ்சுவதும் உண்பதும் உரையாடுவதுமாய் அவருடன் மகிழ்ந்திருந்தனர்.
பலாவு அழகிய தீவு. தென்னஞ் சோலைகள். அங்கங்கே எழிலைக் (ஒருவகை மரவள்ளி) கிழங்குச் செடிகள். பச்சையாய் விரிந்த இகைள் மேலே, மரவள்ளிபேன்ற கிழங்கு நிலத்தடியில். இந்த எழிலைக் கிழங்குகளும் தேங்காயும் கீரைச் செடிகளும் கடலுணவுமே அத்தீவகத்தாரின் வழமை உணவு. அந்தத் தீவின் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள், அமெரிக்கப் புதுமைகளில் நாட்டமில்லாதவர்களாக, எதிலும் ஆர்வமில்லாதவர்களாகத் தெரிந்தார்கள். எதற்கும் குறைவற்ற இயற்கைச் சூழல் இத்தகைய மனோபாவத்தை அவர்களுக்குக் கொடுத்தது போலும்!
மழை மேகங்கள் வராத நாள் இல்லையாம். பெருமழை பெய்வதில்லையாம். மிதமான வெயில், அப்பப்போ  மழை, இதமான சுவாத்தியம். சுற்றிவர ஆழமற்ற கடல். தெளிந்த நீர். பவளப் பாறைகளற்ற மணல் தரை. சில கிமீ.க்கு அப்பால் தீவைச் சுற்றி வட்டமாகப் பவளப் பாறை அரண். எனவே கரையோரக் கடலில் அலை வீச்சு மிகக் குறைவு. நீல வண்ணமாய் நீளும் அந்த இயற்கை அழகைப் பார்க்க, கடலுள் நெடுந்தொலைவு மணல்தரையில் தெளிந்த நீரில் நடந்து செல்ல, நீச்சலடிக்க அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகள் திரள்வர்.
பலாவுத் தீவில் பணிகளை முடித்தேன், மீனவர்களுக்கு ஏற்றதைச் செய்தேன். குவாமிலிருந்து தென்மேற்காகப் பலாவு வந்தேன்.
பலாவுவில் இருந்து வடகிழக்காக உள்ள யாப்புத் தீவுக்கு விமானத்தில் சென்றேன். சிறிய தீவுகளின் கூட்டம். மக்கள் தொகை குறைவு. யாவரும் மீனவர். குன்றுகளும் வெளிகளும் சூழ்ந்த தீவுகள். அவற்றுக்கிடையே தரவைக் கடல். தீவைச் சுற்றிப் பவளப் பாறை அரண். வெள்ளைவெளேரென்ற மணற்றரையில் ஆழமற்ற நீர். நீல வண்ணத்தில் தெளிந்த நெடும் நீர்ப்பரப்பு. அந்த நீருள் துள்ளி விளையாடும் மீனினங்கள். இயற்கை தந்த மீன் தொட்டி.
ஆண்களும் பெண்களும் இடுப்பில் மட்டுமே ஆடை அணியும் மேலாடையற்ற மேனியர். பெரும்பாலோர் மீனவர். கடலுணவும் எழில்கிழங்கும் தேங்காயும் வழமை உணவுகள். அமெரிக்கர் நடத்தும் கடைகளில் உணவை வாங்க மறுப்பர். தத்தம் வழமை உணவைக் கைவிடார். எமக்கும் தருவர்.
மைக்குரோனீசியாக் கூட்டரசின் நான்கு மாநிலங்களுள் ஒன்றாக விடுதலைபெற்று இன்று நிமிர்ந்து நிற்கும் அந்தத் தீவு, நான் சென்ற காலத்தில்  ஐநா ஆதரவில் அமெரிக்க ஆட்சியில் இருந்தது.
உள்ளூர்வாசியே மீன்வளத்துறை அலுவலர். என்னை வரவேற்றுத் தங்கவைத்துக் கடலுக்கு அழைத்துச்சென்று கடலட்டை வகைகளைத் தெரிந்து கொண்டார், பதனிடும் முறைகளைப் பழகிக்கொண்டார். சந்தையின் தேவைகளை விளக்கினேன். சீன உணவில் இன்றியமையாத கடலட்டையைப்பற்றி அவருக்குத் தெரியும். இரண்டாவது உலகப் போரில் ஜப்பானியர் படைத்தளமாக்கிய தீவு யாப்பு. எனவே ஜப்பானிய மொழி தெரிந்த முதியவர் பலரைக் கண்டேன். அக்காலத்தில் கடலட்டைத் தொழிலை ஜப்பானியர் வளர்த்ததாக முதியோர் கூறினர்.
யாப்புத் தீவுப் பணி முடிந்ததும் நேரே உறுக்குத் தீவு சென்றேன். யாப்புவில் இருந்து நேரே கிழக்காக விமானம் சென்றது. உறுக்குத் தீவில் இறங்கினேன். சின்னஞ் சிறிய தீவுகள். ஒரே பவளப் பாறை அரணுள் இருந்தன.
இன்று அந்தத் தீவுக் கூட்டத்தின் பெயர் சூக்கு. ஐநா ஆதரவுடன் அமெரிக்க ஆட்சியில் இருந்த அத் தீவுக் கூட்டம் விடுதலை பெற்றது. அருகருகாக உள்ள, யாப்பு, சூக்கு, பொன்பேய், கொசுறே ஆகிய நான்கு தீவுக் கூட்டங்களும் மைக்குரோனீசியாக் கூட்டரசின் நான்கு மாநிலங்களாக, விடுதலை பெற்று விளங்குகின்றன.
உறுக்குத் தீவில் ஒரு வாரம் தங்கினேன். அங்குள்ள மீனவர்கள் நண்பர்களாயினர். ஈரலிப்பு அதிகமாக இருக்கும் சுவாத்தியத்தினால் மீனைக் கருவாடாக்கக் காய வைப்பது எளிதல்ல. எனவே அவர்களுக்காக ஓர் உலர்த்தியை வடிவமைத்தேன்.
கொஞ்சம் நெருப்புத் தணல் கீழே. தணலைத் தழுவி மேலேறும் காற்றின் ஈரலிப்புக் குறைந்து, வரளும்.  வரண்ட காற்றைத் தழுவும் மீனின் மேற்பரப்பு ஈரம் தழுவும் காற்றுடன் கலக்கும்.
உலர்த்திக்குள் வெப்பம் மிகுந்தால் மீன் அவியும். அவியாதிருக்கப் போதிய காற்றோட்டம் தேவை, வெப்பக் குறைவுக்குச் சுவாலை இல்லா நெருப்புத் தேவை. காற்றோட்டம் தணலில் சுவாலையைத் தூண்டும். இந்தச் சூழலை உளத்திருத்தி, தேவைக்களவான காற்றோட்டம், தேவையான தணல் சூடு, அந்தச் சூடு மெதுவாக உறிஞ்சக்கூடிய மீனின் அளவு. தூசற்ற, மணல்புகாத் தட்டுகளில் மீனை அடுக்குதல், காயும் கால எல்லை இவைகளைக் கொண்ட உலர்த்தியை வடிவமைத்துக் கொடுத்தேன்.
சச்சியின் வடிவமப்பு என மீன்வளத்துறையின் அமெரிக்க அலுவலர் மீனவர்களிடம் கூறினார். இல்லை இந்த வடிவமைப்பு யாழ்ப்பாணம் உங்களுக்குத் தந்தது என்றேன். யாழ்ப்பாண உலர்த்தி எனப் பெயரிட்டு அழைத்தனர்.
சீனச் சந்தையில் விலை போகும் கடலட்டை வகைகள், பதனிட யாழ்ப்பாண உலர்த்தி, சந்தைத் தொடர்புகள், என உறுக்கு மீனவர்களுக்கு வழிகாட்டினேன்.
அம்மீனவர்களுள் ஒருவர் என்னைத் தன் படகில் அழைத்துச் சென்றார். கடலுள் சிறிது தூரம் சென்றதும் நங்கூரமிட்டார். தெளிந்த நீருக்குள் வட்ட வட்டக் கற்கள். முப்பது செமீ. தொடக்கம் ஒரு மீ. வரை விட்டங்களுமாய், நடுவில் ஓட்டைகளுமாயுள்ள பல கற்களை வரிசையாக அடுக்கிவைத்திருந்தனர். அதில் மூன்று கற்கள் தன்னுடையது என்றார்.
உறுக்கு மக்களின் வங்கி அங்குளதாகச் சொன்னார். கற்கள்தாம் காசுகளாம்! ஒருவரின் சொத்துமதிப்பை அங்குள்ள கற்களின் அளவைக் கொண்டு கணக்கிடுவராம். ஒரு வட்டக் கல்லை என் கணக்கில் சேர்ப்பதாகக் கூறினார். யாழ்ப்பாண உலர்த்தியை வடிவமைத்ததற்குரிய பரிசுத் தொகையாம். மற்ற மீனவர்களிடம் சொல்லிவிட்டு வந்ததாகக் கூறினார். அவரையும் அந்த வட்டக் கல்லையும் படமெடுத்துக்கொண்டேன். திருப்பி அவருக்கே நன்கொடை தருவதாகக் கூறினேன். அவர் ஏற்கவில்லை.
அன்று மாலை மீனவர்களும் அமெரிக்க அலுவலரும் எனக்கு விருந்தளித்தனர். உறிஞ்சவும் கொறிக்கவும் கும்மாளமாகக் குசும்பு பேசவும் விடிய விடிய அந்த விருந்து அவர்களுக்கு உதவியது. எதையும் சுவைக்காத என் பெயரில் அந்த விருந்து.
பணி முடித்தேன், புறப்பட்டேன். கிழக்கே விமானத்தில் கடலைத் தாண்டினேன். பொன்பேயில் இறங்கினேன். பொனப்பே என்ற பெயரும் அத்தீவுக் கூட்டத்துக்கு உண்டு. அந்தத் தீவுக் கூட்டத்தின் இன்றைய பெயர் சென்யாவின். ஐநா ஆதரவுடன் அமெரிக்க ஆட்சியில் இருந்த அத் தீவுக் கூட்டம் விடுதலை பெற்றது. அருகருகாக உள்ள, யாப்பு, சூக்கு, பொன்பேய், கொசுறே ஆகிய நான்கு தீவுக் கூட்டங்களும் மைக்குரோனீசியாக் கூட்டரசின் நான்கு மாநிலங்களாக, விடுதலை பெற்று விளங்குகின்றன.
பாப்புவா நியுகினியில் ஆஸ்திரேலிய அலுவலர் குறிப்பு எடுத்து வந்ததால், நேரடியாக மீனவர்களுக்கு என் கருத்துரை போய்ச்சேரவில்லை. அங்குள்ள மீனவர் பின் தங்கிய நிலையில் இருந்ததும் மற்றுமொரு காரணம். பலாவு, யாப்பு, உறுக்கு மீனவர்கள் விவரம் நேரடியாக்க் கேட்டறிவதை அமெரிக்க அலுவலர் ஊக்குவித்தார்.
கடல்மட்டத்திலிருந்து குன்றாக உயரும் தீவு பொன்பேய். கடற்கரையிலிருந்து சில கிமீ. தூரத்துக்கு வெண்மணல் தரைகொண்ட ஆழம்குறைந்த கடல். நீல நீர்ப் பரப்பாய்த் தெளிந்த நீருள் ஊடுருவும் சூரியனின் கதிர்கள் தரையின் உயிரினங்களின் சிறிய அசைவையும் காட்டிவிடும்.
ஆர்வமுள்ள மீனவர்கள், சீனத்தில் விலைபோகும் கடலட்டை வகைகள், என் பணிக்கு உதவ உள்ளூர் மீன்வளத்துறை அலுவலர், பதனிடல் செம்மைக்கு யாழ்ப்பாண உலர்த்தி, சந்தையைக் கண்டுபிடிக்கும் ஆர்வமுள்ள வணிகர் ஓரிருவர். பொன்பேயில் என் பணி விரைவாக நிறைவேறியமைக்கு இவை காரணங்கள். ஒரு வாரம் தங்கினேன்.
ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப் போரில் பொன்பேயில் முகாமிட்டிருந்தனர். தடயங்களைக் கண்டேன்.
சிறிய தீவுகள், எதிரே பரந்த கடற்பரப்பு. பவளப் பாறை அரணுக்கு வெளியே ஆழம்கூடிய கடல். திமிங்கிலங்கள், கொடுஞ் சுறாக்கள், டால்பின்கள், போன்ற பாரிய விலங்குகள் உலாவும் நெடுங் கடல் பசிபிக் பெருங்கடல்.
குவாமில் இருந்து 1,400 கிமீ. வரை பறக்கும் தொலைவில் பலாவு. பலாவிலிருந்து 600 கிமீ. வரை பறக்கும் தொலைவில் யாப்பு. யாப்புவில் இருந்து 1,700 கிமீ. வரை பறக்கும் தொலைவில் உறுக்கு. உறுக்குவில் இருந்து 800 கிமீ. வரை பறக்கும் தொலைவில் பொன்பேய். பொன்பேயில் இருந்து 1,800 கிமீ. வரை பறக்கும் தொலைவில் மார்ஷல் தீவுகள்.
இந்த நெடிய பயணத்தைச் சில வாரங்களில் நான் மேற்கொண்டு பணிகளைச் செய்துவர விமானப் பயணமும் காரணம். எந்திரக் கப்பல் வரமுன்பே, இந்தச் சின்னஞ் சிறு தீவுக் கூட்டங்களில் வாழ்பவர்கள் ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவுக்குச் சென்று வந்தனர். ஒரு தீவில் பேசிய மொழியையே அருகில் இருந்த மற்றத் தீவிலும் சிறிய மாற்றங்களுடன் பேசினர். கட்டு மரம், பாய் மரம் என்பன இத்தீவுக் கூட்டத்தவரின் நெடுங்கடல் பயணங்களுக்கு உதவின. காற்றின் திசை மாற்றங்கள், கடல் நீரோட்ட மாற்றங்கள், வானியல், நீண்ட பயணத்திற்கான உணவுச் சேமம், நீர்ச் சேமம், பாரிய கடல்விலங்குகளைச் சமாளித்தல் என்பன பற்றிய அனுபவ அறிவும் அதன் வழிவழிக் கொடுப்பனவும் இவர்களின் பரம்பரைச் சொத்துகள்.
இத்தகைய பட்டறிவின் சொத்தாளர்களாகிய மீனவர்களிடையே, யாரிடம் பேசுகிறேன் என்று தெரிந்துகொண்டே தன்னடக்கத்துடன் நின்று என் கருத்துரையை எடுத்துக் கூறுவேன். ஐரோப்பிய மகெல்லனுக்கும் ஜேம்ஸ் குக்குக்கும் முன்னரே, வடக்குத் தெற்காக மரியானாத் தீவுக் கூட்டங்களில் இருந்து நீயுசீலாந்து வரையும் கிழக்கு மேற்காகப் பலாவுவில் இருந்து பிக்காரின் வரையும் பயணித்துப் பசிபிக் பெருங்கடலின் ஒன்றுபட்ட மனிதக் குழாமாகச் செயற்பட்ட, அதற்கான அறிவையும் திறனையும் ஆற்றலையும் பெற்றிருந்த பண்பட்ட மக்களிடையே நான் பணிபுரிந்துகொண்டிருந்தேன்.
மேலாடையற்ற மேனியராக இந்த மக்கள் வாழ்ந்தனர். இதனால் இழி பண்பாட்டினர் எனத் தொடக்கத்தில் மேலை நாட்டவர் இவர்களைப் பழித்தனர், பின்னர் பிக்கினி உடையைப் பசிபிக் தீவான பிக்கினியில் இருந்தல்லவா மேலை நாடுகளுக்குக் கொண்டு சென்று, நனிநாகரிக உடையாக்கினர்.  
பொன்பேயில் மேலை நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மேலாடையின்றியே திரிந்தனர். இவர்களின் முன்னோர்கள் இத்தீவுக் கூட்டத்தாரை இதற்காக இழிபண்பாட்டினர் என்றனரே, அதற்காக அவர்களைத் தாக்கினரே, சிலரைக் கொன்றனரே என வியந்தவாறு என் பணிகளில் ஈடுபட்டேன்.
ஒரு வாரத்தின் முடிவில் விமானத்தில் மேலும் கிழக்கே பயணமானேன். குதிரையின் குளம்பு வடிவத்தில் ஒரு தீவு. நிலத்தில் வரிசையாகத் தென்னை மரங்கள். நிலத்தில் நடுவே நீல நிற நீர்ப் பரப்பு. அந்தத் தீவைச் சுற்றி மேலும் பல தீவுகள். அழகின் ஆர்ப்பரிப்பு என்பதா, வனப்பின் விரிப்பு என்பதா, எழிலின் எல்லை என்பதா?
மார்ஷல் தீவுகளில் இறங்கினேனா? சொர்க்கத்தின் வாயிலில் நின்றேனா? தலைநகரம் மஜுரோ விமான நிலையத்தில் சுற்றுலா வருவோரை நடனமாடி வரவேற்றனர்.    அங்கே வந்து விடுமுறையைக் கொண்டாட, அமெரிக்கர் தவம் இருப்பர்.
இத்தகைய அழகிய தீவுக் கூட்டத்தில் சுற்றுலாவுக்கு வந்தேனில்லை. பணிக்கென வந்தேன் என்பதை இன்று நினைத்தாலும் வியப்பாக இருக்கும்.
நான் சென்றிருந்த காலத்தில் ஐநா ஆதரவுடன் அமெரிக்க ஆட்சியில் இருந்த அத் தீவுக் கூட்டம் இன்று விடுதலை பெற்ற நாடாக மிளிர்கிறது. அங்குள்ள பல்வேறு தீவுகளுக்கும் மீனவர்களுடன் சென்றேன். தீவுகள் அனைத்தும் அமைந்த பவளப் பாறை மேடையை இரதாக மேடை என்பர். ஏற்றுமதிக்கான கடலட்டை வகைகளை அடையாளங் காண்பதும், பதனிடும் முறைகளைச் சொல்லிக் கொடுப்பதும் சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதும் என் பணி. என்னுடன் வந்த மீன் வளத்துறை அலுவலர் குறிப்பெடுத்துக் கொண்டார். கடலட்டைத் தொழிலில் கவனம் செலுத்துவதைவிடச் சுற்றுலாத் தொழிலில் ஈடுபடுவது இலாபகரமாக இருந்ததாக மீனவர் கருதினர்.
இடையில் வளையத்தைப் பொருத்திச் சுழலும் ஊலா ஊப்பு நடனம் மிகவும் புகழ்பெற்றது. குதிக்கால், முழந்தாள் இரண்டின் சரியான இயைவசைவுகளால் இந்த நடனத்தை எவரும் ஆட முடியும். எளிதில் நான் பயின்று ஆடினேன், வளையம் ஒன்றை வாங்கினேன்.
என் அடுத்த பணி பிஜித் தீவுகளில். மார்ஷல் தீவுகளில் இருந்து நேரே தெற்காக 3,500 கிமீ. வரை பறக்கும் தொலைவு. ஆனால் நேரடி விமான சேவை அரிது. எனவே சுற்று வட்டமாக 4,500 கிமீ. வரை பறந்து ஹவாய் செல்லவேண்டும். மீண்டும் 6,000 கிமீ. வரை பறந்து சமோவா வழியாகப் பிஜிக்குச் செல்லவேண்டும்.   
மார்ஷல் தீவுகளில் இருந்து ஹவாய்க்குப் பறந்தேன். 5ஆம் நாள் புறப்பட்டேன், 4ஆம் நாள் ஹவாய் தீவுகளின் தலைநகர் ஒனொலுலு போய்ச் சேர்ந்தேன். உலகத்தின் நாள் மாறும் 1800 நெடுங்கோடு, மார்ஷல் தீவுக்கும் ஹவாய்த் தீவுக்கும் இடையே இருந்தது. இதனால் ஒரு நாளை இழந்தேனா? நாள் மாறும் கோட்டினைக் கடக்கும் பொழுதும் ஒரு சான்றிதழை விமானத்தில் ஒவ்வொரு பயணிக்கும் கொடுத்தனர்.
அமெரிக்காவின் 50ஆவது மாநிலம் ஹவாய். 1959இல் தாமாக விரும்பி அமெரிக்காவுடன் ஹவாய் மக்கள் இணைந்தனர். தலைநகர் ஒனொலுலுவில் இறங்கினேன். புகழ்பெற்ற வைக்கிக்கிக் கடற்கரை அருகே தங்கினேன். ஹவாயில் எனக்குப் பணி ஏதும் இல்லை. பிஜிக்கான விமானத் தொடர்புக்காகக் காத்திருந்தேன். 
பசிபிக் தீவுக்கூட்ட மக்களின் வாழ்வை எடுத்துக்கூறும் காட்சியகம் ஒன்றிருந்தது. ஒவ்வொரு தீவுக் கூட்டத்திற்கும் ஒரு காட்சிக் கூடம். விரிந்த நிலப் பரப்பில் அமைந்திருந்த அந்தக் காட்சிக் கூடத்தில் அந்தந்தத் தீவு தொடர்பான அனைத்துச் செய்திகளையும் காட்சிக்கு வைத்திருப்பர். ஒவ்வொரு காட்சிக் கூடத்தையும் பாரப்பதெனில் முழுக் காட்சியையும் பார்க்கச் சில நாள்களாகும்.
அந்த அருங்காட்சியகத்துக்குச் சென்றேன். ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தேன். பிஜிக்கான கூடம் கண்டேன். பல வகைச் செய்திகள் அங்கிருந்தன. அவற்றுள் ஒன்றாக உரலில் மா இடித்தவாறு இரு இந்தியப் பெண்களைக் கண்டேன்.
பிஜித் தீவின் வாழ்வு முறைகளில் இந்தியப் பராம்பரீயமும் கலந்தது. இருவர் ஒரே உரலில் மாறி மாறி இடித்தவாறிருந்தனர். வியப்புடன் சுற்றுலாப் பயணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வெள்ளை வேட்டி, வெள்ளை மேற் சட்டை இவற்றுடன் நான் சென்றிருந்தேன். உரலில் இடித்துக் கொண்டிருந்த பெண்களுள் ஒருவர் என்னைக் கண்டதும் பிஜியில் இருந்து வருகிறீர்களா? எனக் கேட்டாள். இலங்கையில் இருந்து வருகிறேன் என்றேன்.
ஹவாயில் தான் மாணவி என்றும் பெற்றோருடன் பிஜியில் இருந்து வந்து தங்கிப் படிப்பதாகவும் கூறினார். தன் பணி முடிந்ததும் தமது இல்லத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். தெருவுக்கு வந்தோம். பயணிக்கும் திசை நோக்கிக் கைப்பெரு விரலைக் காட்டியவாறு நின்றார். வண்டிகள் போய்க்கொண்டிருந்தன. சில வண்டிகள் மெதுவாக எம்மை நோக்கி வரும்.  போகும் இடத்தை மாணவி சொல்லுவார். அந்த வழிபோகும் வண்டியில் இருவர் உட்காரலாமா எனக் கேட்பார். சரி என்றதால் ஏறினோம். அவர் வீட்டுக்கு அருகில் உள்ள சந்தில் இறங்கினோம்.
அவர் இல்லம் சென்றதும் பெற்றோருக்கும் தம்பி தங்கையருக்கும் அறிமுகப்படுத்தினார். மூதாதையரைப் பார்த்தது போன்ற மகிழ்ச்சியில் இல்லத்தவர் என்னை வரவேற்றனர். இட்லியும், தோசையும் தந்தனர்.  சிங்கப்பூரை விட்ட பின்பு இத்தகைய உணவை உட்கொண்டது ஹவாயில்தான். இடையில் இத்தகைய உணவுக்கு வாய்ப்பிருக்கவில்லை.
ஹவாய் தீவுகளைச் சுற்றிப் பார்க்கப் பேருந்தில் ஏறாதீர்கள். சாலையில் நின்று கொண்டு நோக்கும் திசையில் கைப்பெருவிரலை நீட்டினால் எந்தக் காரிலும் உங்களை ஏற்றிக் கொள்வார்கள், நீங்கள் போக வேண்டிய இடத்தைச் சொன்னால், அவர்களே கொண்டு போய் விட்டுவிடுவார்கள். ஏனென்றால், அப்படித்தான் இங்கு உள்ளவர்கள் சுற்றுலாவை வளர்க்க விரும்புகிறார்கள் என்ற பயனுள்ள தகவலைச் சொன்னார் இல்லத் தலைவர் நாயுடு.
அடுத்த மூன்று நாள்களும், அப்படியே கைப்பெருவிரலால் நோக்கிக் கேட்டேன். பல கார்களில் ஏறி, தீவுகள் முழுமையும் சுற்றிப் பார்த்தேன்.
யாழ்ப்பாணத்து யோகர் சுவாமியின் சீடரான சுப்பிரமணிய சிவாயா சுவாமிகள், ஹவாயின் கவ்வைத் தீவில் திருமடம் அமைத்தார். இக்காலத்தில் பெரிய சிவன் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளனர். அமெரிக்கர்களான சைவ சமயத்தவர் அத்திருமடத்தில் தேவார, திருவாசகங்களை ஓதி வருகின்றனர்.  
அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டேன். தென் மேற்காக 4,500 கிமீ. வரை பயணித்தேன். சமோவா தீவுகளை அடைந்தேன். அப்பியா தலைநகர்.
ராபின்சன் குருசோ கதை படித்தவர்கள் சாமோவாவை மறக்க மாட்டார்.
அந்த நாட்டின் தென்மேற்கில் சிறிய நிலப்பகுப் பகுதி அமெரிக்கர்களின் நேரடி ஆட்சியில் உள்ளதால் அமெரிக்கச் சாமோவா என்பர். ஏனைய தீவுகள் 1962இல் விடுதலை பெற்றன. சமோவா தனி நாடு.
அதிகாலை சென்றடைந்தேன். மாலை பிஜிக்கு விமானம். சமோவாவைச் சுற்றிப் பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்யலாம்? குன்றுகள் வழி சுற்றிச் சென்ற சாலைகளில் உள்ளூர் மக்கள் இயல்பாக வாழ்ந்தமை தெரிந்தது.
மாலை விமானம் ஏறினேன். 1,500 கிமீ. வரை பறந்து பிஜித் தீவுகளுக்குச் சென்றேன். பிஜித் தீவுகள் 1800 நெடுங்கோட்டின் இருபக்கமும் இருக்கின்றன.  எனவே நாள் மாறும் நெடுங்கோட்டினை மீண்டும் கடந்து, ஹவாய்க்குப் போகும் வழியில் இழந்த ஒருநாளை பிஜியில் மீளப்பெற்றேன்.
தலைநகர் சுவா எனினும், விமான நிலையம் இலவுத்தோக்காவில் இருந்தது.  ‘நதி விமான நிலையம் என அழைப்பர். இலவுத்தோக்காவில் தங்கினேன். தமிழர் நெருங்கி வாழும் ஊர் இலவுத்தோக்கா.
நான் சிங்கப்பூரில் இருந்தபோது, இராமக்கிருட்டிண மடத்துக்குச் சென்றிருந்தேன். பிஜியில் தங்களது கிளை இருப்பதாகவும், அங்கே சுவாமி உருத்திரானந்தர் அவர்களைச் சந்திக்கும்படியும் சொல்லி இருந்தார்கள்.
பிஜியின் தென்னிந்திய சமுதாயத்தை வழி நடத்தும் பெரியார் சுவாமி உருத்திரானந்தர். திருக்குறளைப் பிஜி மொழிக்கு மொழிபெயர்ப்பித்தவரும் சுவாமி உருத்திரானந்தரே. மயிலாடுதுறையில் பிறந்தவர். கொல்கத்தா பேலூர் மடத்தில் பயின்றவர். நெடுங்காலம் பிஜியில் சேவை செய்தவர். அங்கேயே சமாதி கொண்டவர். தெற்கு மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர் கண்ணற்ற தீவினிலே கரும்புத் தோட்டத்திலே எனப் பாரதியார் விளித்த மக்கள் பிஜித் தீவினரே. பாரதியார் பாடிய அந்தப் பாடலைக் கீழே தருகிறேன்.
பல்லவி
கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே
சரணங்கள்
கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே! ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே - அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற் கிலையோ? - செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)
பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! - நினது
எண்ணம் இரங்காதோ? - அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)
நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ? - அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர் (கரும்புத்தோட்டத்திலே)
நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே - அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ? - ஹே
வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி! (கரும்புத்தோட்டத்திலே)
சாது குப்புசுவாமி என்பவர் தென்னிந்திய ஐக்கிய சன்மார்க்க சங்கத்தை 1926இல் தொடக்கி வைத்தார். 45 தமிழ்ப் பள்ளிகளை இச்சங்கம் அமைத்தது. பிஜியில் சங்கம் என்றால்லே தமிழர் அமைப்பு என அனைவருக்கும் தெரியும் அளவுக்குப் பரந்து பணிசெய்கிறது.
சுவாமி உருத்திரானந்தரைச் சந்தித்தமை என் முதல் நிகழ்ச்சி. நதி விமான நிலையத்துக்குப் பொழுது சாய்கையில் வந்தேன். அண்மையில் இலவுத்தோக்காவில் விடுதியில் தங்கியிருந்தேன். இரவு எட்டு மணியளவில் இராமக்கிருட்டிண மடத்துக்குத் தொலைப்பேசியில் அழைத்துச் சுவாமியைப் பார்க்க வருவதாகக் கூறியதும் உடனே வரச் சொன்னார். ஒரு கிமீ. பயணம்.
மிக எளிமையான குடிலில் சுவாமி உருத்திரானந்தர் தங்கியிருந்தார். அவருக்குப் பட்டேல் என்ற குசராத்தி அன்பர் வீட்டில் இருந்து உணவு வந்திருந்தது. பட்டேலின் வீடும் மடத்துக்கு அருகில் இருந்தது.
எனக்கும் சேர்த்து உணவு தந்திருந்தனர். முதலில் உணவு, பின்னர் உரையாடல் என்றார் சுவாமிகள். உணவின் பின்னர், பட்டேலும் தென்னிந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கத் துணைச் செயலர் நவநீதகிருட்டின நாயுடுவும் எம்முடன் சேர்ந்துகொண்டனர்.

அப்பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் என அறிந்தேன். பிற்காலத்தில் தமிழ்ப் பாடநூல்களை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தயாரித்து அப்பள்ளி மாணவர்களுக்கு அனுப்பியது.
எல்லாப் பள்ளிகளிலும் மாணவர்களிடையே நீங்கள் பேச வேண்டும்என்று கேட்டுக் கொண்டார்கள். சுவர்களுக்குமார் இருபது பள்ளிகளில்ரந்து பணிசெய்யும் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசினேன். விவேகானந்தா பள்ளியின் தலைமை ஆசிரியர், கோவை பேராசிரியர் மாரா. போ. குருசாமியின் அண்ணன் ஆவார்.
கடல் அட்டைகளைப் பதப்படுத்துவதற்காக வெள்ளைக்காரர்கள் தங்கள் நாட்டில் உள்ளது போல ஐஸ் பிளாண்ட் போடு, அதைப்போடு இதைப்போடு என்று ஆலோசனை சொல்லுவார்கள். ஆனால், நாம் எந்த நாட்டில் இருக்கின்றோமோ,அந்த நாட்டில் என்ன கிடைக்கின்றதோ அதைக் கொண்டுதான் கருவிகளை உருவாக்க வேண்டும்.  யாழ்ப்பாணத்தில் நாங்கள் பயன்படுத்துகின்ற ஜாப்னா டிரையரை, பிஜி தீவுகளில் அறிமுகப்படுத்தினேன். அது ஒரு சிறிய தடுப்பு போன்றதுதான். மூன்று புறமும் தகரங்கள், இரண்டு அடுக்குகள் என ஒரு மாதிரியை உருவாக்கிக் கொடுத்தேன். இன்றைக்கும் அதை பிஜியர்கள் பரவலாகப் பயன்படுத்துகின்றார்கள். கடல் அட்டைகளை ஆங்கிலத்தில் Beche de mer என்றும் அழைக்கிறார்கள்.
லாவோ தீவுகளில்...
சுவா அருகில், லாவோ தீவுக்கூட்டத்துக்குச் சென்றேன். நான் ஒரு தமிழன், இரண்டுஅமெரிக்கர்கள், நான்கு பிஜியர்களுடன், ஒன்றரை நாள் படகில் பயணம். அது இரண்டு படுக்கை அறைகள், சமையல் அறையுடன் கூடிய சற்றே பெரிய படகுதான். இரவெல்லாம் படகில் பயணித்து, காலை 8 மணிக்கு அங்கே போய்ச் சேர்ந்தோம். கடற்கரையில் பெருந்திரளான மக்கள் திரண்டு நின்று எங்களை வரவேற்றார்கள். காவா என்ற ஒரு பானத்தைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்கள். குடிக்க முடியவில்லை. காலையில் இருந்து தொடங்கி மாலை வரையிலும், ஒரே பாட்டும் கூத்துமாக இருந்தது. ஆண்களும், பெண்களும் எவ்விதப் பாகுபாடுகளும் இன்றிப் பழகிக் கொண்டு இருந்தார்கள். நண்பர்கள் இரவில் தீவிலேயே தங்கினார்கள். நான் நாங்கள் சென்ற படகிலேயே தங்கிக்கொண்டேன்.
கேலடோனியா
அங்கிருந்து நியூ கேலடோனியா தீவுகளுக்குச் சென்றோம். இது, இன்னமும் பிரெஞ்சு நாட்டின் பிடியில் உள்ளது. ஏனென்றால், இங்கே நல்ல தரமான மாங்கனீஸ் கிடைக்கின்றது. அந்தச் சுரங்கங்களிலும், 100 முதல் 150 தமிழர்கள் தொழிலாளிகளாகப் பணி ஆற்றிக்கொண்டு இருந்தார்கள். அவர்களுடன்பேசினேன். அவர்கள்,மொரீசியஸ், ரீ யூனியன் தீவுகளில் இருந்து, செய்தித்தாள் விளம்பரங்களைப் பார்த்து, இந்தத் தீவுகளுக்குப் பணி ஆற்ற வந்து இருக்கிறார்கள். எனக்கு விருந்து அளித்தார்கள். இரவில் ஓய்வு எடுத்துக்கொண்டு, காலையில் எழுந்து பார்த்தால், எங்கும் ஒரே துடசுப் படலமாக இருந்தது. நான் தங்கி இருந்த விடுதி, துறைமுகத்துக்கு அருகில் இருந்தது. மாங்கனீஸ் தாதுவை கப்பலில் ஏற்றிக்கொண்டு இருந்ததால், அந்தத் துடசுப்படலம் பரவி இருந்தது.
வனுவாட்டு
அங்கிருந்து, வனுவாட்டு தீவுகளுக்குச் சென்றேன். அப்போது, அது நியூ ஹெர்விடல்’ (New Herbides ) என்று அழைக்கப்பட்டது. இந்தத் தீவில் ஒரு புதுமை. இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் சேர்ந்து இதைத் தங்கள் பிடியில் வைத்து உள்ளன. இதை கொண்டிமோனியம் (Condimonium) என்று சொல்கிறார்கள்.  எனவே, இரண்டு நாட்டின் சட்டங்களும் இங்கே நடைமுறையில் உள்ளது. நான் போய் இறங்கியபோது குடிவரவு அதிகாரி, ‘நீங்கள் இங்கிலாந்து சட்டப்படி நடந்து கொள்கிறீர்களா? பிரெஞ்சு சட்டப்படி நடந்து கொள்கிறீர்களா?’ என்று கேட்டார். நான் இங்கிலாந்துஎன்று சொன்னேன். அப்படியானால், அந்த அறைக்குச் செல்லுங்கள்என்று சொன்னார்கள். அங்கே சென்று என் வருகையைப் பதிவு செய்து கொண்டேன்.  இங்கிலாந்து விருந்தினர் விடுதியில், பத்து நாள்கள் தங்கி எனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தேன்.
அங்கிருந்து சாலமன் தீவுகளுக்குச் சென்றேன். அப்போது, ஆங்கிலேயர் வசம் இருந்த இந்தத் தீவுகள், இப்போது விடுதலை பெற்று விட்டன. அங்கே, கடல் அட்டைகள் உற்பத்தி செய்கின்ற இருவருக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. அவர்களுக்கு இடையே ஏற்பட்டு உள்ள தகராறைத் தீர்த்து வைக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். யார் சொல்வது சரி? என்று அறிக்கை தருமாறு சொன்னார்கள். அதற்காக, நான் தங்கி இருந்த நாள்களில், இரண்டு தரப்பினரும், மாறி மாறி வந்து என்னைச் சந்தித்தார்கள். கடைசியாக, நான் ஊருக்குச் சென்று அறிக்கை கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.
பாலி தீவில்...
ஒட்டுமொத்தமாக என்னுடைய நான்கு மாத பயணம் முடிந்து நாடு திரும்புவதற்காக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வந்து சேர்ந்தேன். அங்கே, ஒய் எம் சி ஏ வில் தங்கினேன். எலிசபெத் போப் என்ற அம்மையார், என்னுடைய ஆய்வு அறிக்கைகளைத் தட்டச்சு செய்வதற்காக, ஒரு உதவியாளரை ஏற்பாடு செய்தார். ஒரு வார காலம் அங்கே தங்கி இருந்து, ஆய்வுஅறிக்கையை எழுதினேன். பயணத்தின் நோக்கம் நிறைவேறியது.
அடுத்து, இந்தோனேசியாவின் பாலி தீவுகளைப் பார்க்க விரும்பிச் சென்றேன். அங்கே, இந்துக் கோவில்கள், பெயர்கள், இராமாயாணம் என இந்தியர்கள், தமிழர்களின் தடங்கள் நிரம்ப உள்ளன.  ஆனால், கோவில்களில் சிலைகள் கிடையாது. இந்தோனேசிய முஸ்லிகள், சிலைகளை அகற்றி விட்டார்கள். இரண்டு பெரிய கோவில்கள் குறிப்பிடத்தக்கவை. 1. பெரும்பாணன் கோவில் (சிவன் கோவில்) 2. போர் புதுடர் புத்தர் கோவில்.
இந்த பாலித் தீவுக்கு, மணிமேகலை வந்து இருக்கிறாள். அவள் எந்தக் கப்பலில் புறப்பட்டு எத்தனை நாள்கள் பயணித்து எந்த வழியாக இங்கே வந்துசேர்ந்தாள் என்பது பற்றிய விரிவான பயணக்குறிப்பை, மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்று உள்ளது. ஒவ்வொரு தமிழரும் கட்டாயம் படிக்க வேண்டும், படித்துப் பாருங்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் கால் பதித்த மண்ணில் நானும் கால் பதித்த மகிழ்ச்சியோடு தாய்நாடு திரும்பினேன். இந்த நினைவுகளையெல்லாம் நான் இதுவரையிலும் எழுதியதும் இல்லை, யாரிடமும் அதிகமாகச் சொன்னதும் இல்லை. இன்றைக்கு நீங்கள் வந்து கேட்டீர்கள். உங்களிடம் சொல்வதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததுஎன்றார்.
National Geographic வெளியிட்டு உள்ள விரிவான உலக வரைபடப் புத்தகத்தில் (விலை சுமார் 5000 ருபாய்), தான் சென்ற குட்டிக்குட்டித் தீவுகளையெல்லாம், பெரிய லென்ஸ் வைத்துக் காண்பித்தார். பாலி தீவுகளில் உள்ள கோவில்கள், சிலைகள் என அனைத்தையும், கருப்பு வெள்ளைப் படங்களாக எடுத்து வைத்து உள்ளார். அது மட்டும் அன்றி, ஏராளமான படங்களையும், ஆவணங்களையும் சேகரித்து வைத்து உள்ளார்.


No comments:

Post a Comment