முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 18, 2012

என் எழுத்துப் பணி


என் எழுத்துப் பணி
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

எல்லோருக்கும் அவரவர் சொந்த ஊர் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எனது சொந்த ஊர்யாழ்ப்பாணத்தில் மறவன்புலவு.  1981இல் வீரகேசரி வார இதழில் பறவைகளைப் பற்றிய அறிவியல்சார் கட்டுரைத் தொடரை எழுதினேன். பின்னர் அவற்றைத் தொகுத்து, பறவைகளே என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டேன். இன்றைக்கு மின் புத்தகமாக எங்களுடைய காந்தளகம்-தமிழ்நூல் (http://tamilnool.com/e_book.php) வலைத்தளத்திலும் அந்த நூல் இடம் பெற்று உள்ளது. யாழ்ப்பாணத்தைப் பற்றிய என்னுடைய உணர்வுசார் நினைவுகள் சில அந்த நூலிலே இடம் பெற்று உள்ளன.  அந்த நூலில் இருந்து ஒரு கட்டுரையை இலங்கை அரசு 9ஆம் தமிழ்ப் பாடப்புத்தகத்தில் சேர்த்தது. பல ஆண்டுகளாக 9ஆம் வகுப்பு மாணவர்கள் அக்கட்டுரையைப் பாடமாகப்  படித்து வருகிறார்கள்.
நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்த காலம் தொட்டே, பாரதியார் கவிதைகளை ஈடுபாட்டுடன் படிப்பேன். பதினொன்றாம் வகுப்பில் என் வகுப்புத் தோழர் நடராசா சண்முகரத்தினம்  பாரதிதாசன் கவிதைகள் மீது ஈடுபாடு கொண்டு படித்துக் காட்டுவார். நாங்கள் இருவரும் சைக்கிள்களில் பள்ளிக்குச் செல்வோம். வீடு திரும்புகையில் எங்காவது ஒரு இடத்தில் வண்டிகளை நிறுத்திவிட்டு, உட்கார்ந்து கொண்டு பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகளைப் பற்றிப் பேசுவோம். எங்கள் இருவரது தந்தையரும் தமிழ் ஆசிரியர்கள். பள்ளிக்கு அருகே வண்ணார்பண்ணையில் என் வீடு. 6 கிமீக்கு அப்பால் சுதுமலையில் அவரது வீடு. வார இறுதி நாள்களில் நான் அவருக்குக் கடிதங்கள் எழுதுவேன். அவை எல்லாமே, நான்கு வரிக் கவிதைகளாகவே அமைந்தன. பதிலுக்கு அவர் கவிதை வரிகளில் எனக்குக் கடிதங்கள் எழுதுவார். அக்காலத்தில் எழுதத் தொடங்கினேன். இப்பொழுது நோர்வேயில் வேளாண்துறைப் பேராசிரியராக சண்முகரத்தினம் பணிபுரிகிறார்.
திரைப்படம் பார்க்க நான் தந்தையாரிடம் அனுமதி கேட்கவேண்டும். சண்முகரத்தினமோ நல்ல திரைப் படங்களைத் தேர்ந்து பார்ப்பார். பார்த்த திரைப்படங்களின் கதைகளை என்னிடம் விவரித்துச் சொல்வார். அவ்வாறு அவர் சொல்லி என் நெஞ்சில் பதிந்த படங்களுள் ஒன்று புதையல் திரைப்படம்.
பஞ்சாட்சரம் என்பவர் மற்றொரு நண்பர். ஒரு செய்தியைச் சொன்னால், அதை அப்படியே மரபுக் கவிதைகளில் வடித்துக் கொடுத்து விடுவார். கவித்துவத்தில் அவ்வளவு திறமையானவர். அவரைப் பார்த்து வியப்பேன். அவர் எழுதியவற்றை ஆர்வமாகப் படிப்பேன். அதுவும் என் எழுத்துக்கு உந்துதலாக அமைந்தது.
இலங்கையில், பள்ளியைக் கல்லூரி என்று அழைப்போம். என் தங்கை சாந்தாதேவி, இந்து மகளிர் கல்லுரியில் படித்தார். அவரது பள்ளி ஆண்டு மலருக்கு ஒரு கட்டுரை வேண்டும் என்று கேட்டார். பதினாறு வரிகளில் இரண்டு கவிதைகள் எழுதிக் கொடுத்தேன். விடியலைப் பற்றி எழுதினேன்.
கா கா என்று கரைந்தது காகம்
கூ கூ என்று கூவின குயில்கள்
கொக்கோ என்று கரத்தது கோழி
பொலபொலவென்று விடிந்தது பொழுது
என்று எதையோ எழுதிக்கொடுத்தேன்.
இரண்டு மாதங்கள் கழித்து, கல்லூரி மலரைக் கொண்டு வந்து தங்கை கொடுத்தார். அதில், சாந்தாதேவி பெயரில் என் கவிதை அச்சாகி இருந்தது. என் 16 வயதில் என் தங்கையின் பெயரில், 1957ஆம் ஆண்டில் என்னுடைய எழுத்து முதன்முதலாக மகளில் கல்லூரி மலரில் அச்சில் ஏறியது.
ஒருமுறை சுத்தானந்த பாரதியாரும், மற்றொருமுறை குன்றக்குடி அடிகளாரும் எங்கள் கல்லூரியில் வந்து உரையாற்றினர். அவ்வுரைகள் என்னைப் பாதித்தன. ஒரு கட்டுரையாக எழுதி, எங்கள் கல்லூரி மலருக்குக் கொடுத்தேன். ஆனால், அது அச்சாகவில்லை. அதற்குப்பிறகும் பல கட்டுரைகள் எழுதிக்கொடுத்தேன். எதுவுமே அச்சாகவில்லை.
என் தந்தை முதலில் தமிழ்க் காங்கிரஸ் ஆதரவாளர், பின்னர் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர். 1956 தேர்தலுக்குப் பிறகுதான் தமிழரசுக் கட்சி பிரபலமானது. அந்தத் தேர்தலில்தான் அந்தக் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது. தந்தையுடன் அரசியல் செய்திகளைப் பரிமாறிக் கொள்வேன்.
என்னுடைய ஆங்கில ஆசிரியர் மு. கார்த்திகேயன், சிறந்த புலமை பெற்றவர். எங்கள் உறவினரும்கூட. எளிமையும், இனிமையும், எந்நேரமும் கலகலப்புமாக இருப்பார். கேலியும் கிண்டலும் அவர் பேச்சில் நிறைந்திருக்கும். அவர் பொது உடைமை இயக்கக் கூட்டங்களில் பேசுவதைக் கேட்பேன். அரசியல் ஆர்வமும் ஏற்பட்டது.
மாணவனாக இருந்தபோதே, 1956 இல் பொது உடைமைக் கட்சியின் தொண்டனாக வேலை செய்தேன். சீன, ரஷிய வெளியீடுகள், கிறித்தவ வெளியீடுகள் இலவசமாக நிறையக் கிடைத்தன. அவற்றைப் படிப்பேன். இயேசுவின் மலைச்சொற்பொழிவு என்னை ஈர்த்தது போல வேறு எதுவும் என்னை ஈர்க்கவில்லை. அதைப் படித்தபோது அழுது இருக்கிறேன். எப்படி ஒருவரால் இத்தகைய கருத்தைக் கூற முடிந்தது என்று எண்ணி வியப்பேன்.
அக்காலத்தில் கவிஞர் காசி ஆனந்தன் சுதந்திரன் வார இதழில் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருந்தார். அவரது  கவிதைகள் எனக்குப் பிடிக்கும். அத்துடன், கிழக்கு மாகாணத்தில் இருந்து தாமரைத்தீவான் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் சுதந்திரனில் படிப்பேன். நானும் சுதந்திரனுக்குக் கட்டுரைகள் எழுதி அனுப்புவேன். அவை வெளிவரவில்லை.  வாசிப்பைக் கட்டாயமாக்கிக் கொண்டேன். இராஜாஜியின் வியாசர் விருந்து வரிகள் பல, ஏறத்தாழ எனக்கு மனப்பாடம்.
யாழ்ப்பாணம் மாநகராட்சித் தேர்தலில், 10 ஆவது வட்டாரத்தில் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கார்த்திகேயன் வேட்பாளராக நின்றார். அவரை எதிர்த்து நின்ற தமிழ்க் காங்கிரஸ் சார்பாளர் ரி. எஸ். துரைராசா பிரபலமானவர். அவரும் உறவினர்தான். கார்த்திகேயனுக்காக வீடுவீடாக ஏறி இறங்கி வாக்குக் கேட்டோம். துரைராசா அவர்கள் வீட்டுக்கும் சென்று, அவர்களிடமேகார்த்திகேயன் அவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டேன். கார்த்திகேயன் வெற்றி பெறவில்லை. நானும் என் நண்பர்களும் அவரைத் தோளில் தூக்கிக்கொண்டு அவரின் வீடு வரை சென்றோம்.
பொது உடைமைக் கட்சியினர்தீப்பொறி என ஓர் இதழை வெளியிட்டார்கள். அதை, நானும் சண்முகரத்தினமும், மாணவத் தோழர்களும் தெருவோரம் நின்றும் கடைகளுக்குக் கொண்டுபோயும், தெரிந்த வீடுகளிலும் விற்போம். பள்ளிப் படிப்பைத் தவிர வேறு பிராக்குகளில் நான் ஈடுபடுவதை என் தந்தையார் ஒப்பவில்லை. எனவே மாற்று வழி தேடினார்.
1959 ஆம் ஆண்டு சென்னைக்கு அனுப்பினார், பச்சையப்பன் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்தேன். எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், என் தந்தை மிகச் சிரமப்பட்டு என்னைப் படிக்க வைத்தார். எனவே, நான் கல்வியைத் தவிர வேறு எதிலும் நாட்டம் கொள்ளவில்லை.
சென்னையில், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்த்ம் அவர்களே என் பாதுகாவலர். அவர் வீட்டுக்கு அடிக்கடி போவேன். அவரது மகன் மெய்கண்டானும் நானும் நல்ல நண்பர்கள்.

1960இல் நாங்கள் இருவருமாக நவராத்திரி விடுமுறையைக் கழிக்க காஞ்சிபுரத்துக்குப் போனோம். அங்கே காளப்ப முதலியார் ஓர் அச்சகம் வைத்து இருந்தார். அங்கே ஒரு வாரம் தங்கினோம். காஞ்சிபுரத்துக்குப் போகும்போது. அ.சா.ஞா. இல்லத்தில் இருந்து லூயி பிஷர் எழுதிய, காந்தி பற்றிய புத்தகத்தை எடுத்துச் சென்றேன், அரக்கோணம் வழியாகத் தொடர்வண்டி அனைத்து நிலையங்கலிலும் தங்கி, மெதுவாக ஊர்ந்து சென்று காஞ்சிபுரத்தை அடைவதற்குள் 120 பக்கங்கள்கொண்ட அந்த ஆங்கிலப் புத்தகம்  முழுமையும் வாசித்து முடித்து விட்டேன். அந்தப் புத்தகத்தில் உள்ளவை என்னை மிகவும்பாதித்தன. இன்றைக்கும், என்னுடைய புத்தகத் தட்டில் அந்த நூலில் ஒரு படியை வைத்து இருக்கின்றேன்.
அந்தப் பாதிப்பில், புவிக்குள்ளே முதன்மையுற்றாய் என்று ஒரு கட்டுரை எழுதினேன், அதை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு இதழுக்கு, வான் அஞ்சல் வழியாகச் சென்னையில் இருந்து அனுப்பினேன். அந்தத் தலைப்புப் பாரதியாரின் கவிதை வரி. அப்போது, கே. பி. ஹரன் அவர்கள் ஈழநாடு இதழின் ஆசிரியராக இருந்தார்கள். அக்டோபர் 2 காந்தி நினைவு நாள் அன்று, அந்தக் கட்டுரையை வெளியிட்டார். 
என் கட்டுரை வெளியாகிய இதழை, கே. பி. ஹரன், என் தந்தையாரிடம் கொண்டுபோய்க் கொடுத்தார். அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதுதான் இரண்டாவதாக அச்சில் வந்த என்னுடைய எழுத்து. என் ஒன்பதாம் வகுப்புக் காலத்திலிருந்து, பாரதியார் கவிதைகள், திருக்குறள், திருவருட்பயன், வியாசர் விருந்து போன்ற நூல்களைப் படித்து வந்த காலத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கவிதை மாதிரியாக எதையோ எதையோ எழுதி வைத்து இருந்தேன். ஆனால், வெளியில்  காட்டவே பயம். அந்த வரிகளில், பத்தி இருக்கும், வீரம் இருக்கும், காதல் இருக்கும், பல் சுவைகளும் இருக்கும்.
1960இல் ஈழநாடு இதழில் என் கட்டுரை வெளியானதால் உற்சாகமடைந்தேன். என் எழுத்தின்மேல் எனக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டிற்று. தொடர்ந்து எழுத வைத்தது. ஈழநாட்டுக்குத் தொடர்ந்து எழுதினேன். ஒரே ஆண்டில் ஐந்தாறு கட்டுரைகள் வெளியாகின. நான் எழுதி அனுப்பியதை, எந்தத் திருத்தமும் இல்லாமல் அப்படியே வெளியிட்டார்கள். 
1958இல் பண்டாரநாயக்கா செல்வநாயகம் உடன்பாடு ஏற்பட்டது. தமிழருக்குப் பிரதேச சபைகளை அமைக்கவும் அதிகராங்களை வழங்கவும் அந்த உடன்பாடு வந்த்து. சில மாதங்களின் பின்னர் அதை ஒருதலைப்பட்சமாகப் பண்டாரநாயக்கா முறித்தார். அதன் பின்னர் புத்த பிக்கு சோமராம தேரர் அவரைக் கொலை செய்தார்.
1960 முதலாகச் சிறீமாவோ பிரதமர் ஆனார். அவர் தமிழர்களோடு பேசுவதற்கே உடன்படவில்லை. சிங்கள மொழியை வலிந்து அரசு அலுவலகங்களில் புகுத்தினார். தமிழர் பகுதி அலுவகங்களில் சிங்களத்தைத் திணிப்பதை எதிர்த்துத் தமிழர் கட்சிகள் இணைந்து போராட்டங்களை நடத்தின. 1961ஆம் ஆண்டு, இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் சத்தியாகிரகம் என்ற அரசுச் செயலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

அக்காலத்தில் பச்சையப்பன் கல்லூரியில் மாணவராக இருந்த கவிஞர் காசி ஆனந்தன் சென்னையில் இலங்கைத் தூதரகம் முன்பு உண்ணாநோன்பு இருந்தார். இராஜாஜி அதை முடித்து வைத்தார்.  அக்காலத்தில் மாணவர்களாகிய நாம் சென்னையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டோம். அறிஞர் அண்ணா தலைமையில் சென்னைக் கடற்கரையில் மாபெரும் கூட்டம் நடைபெற்றது.
இந்தச் செய்திகளைக் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இதழ்களுக்கு எழுதி அனுப்புவேன். அக்காலத்தில் வான் கடிதங்கள் ஓரிரு நாள்களில் போய்ச்சேரும்.
சென்னையில் மாணவனாக இருந்த காலத்தில் கோயம்புத்தூரில் வெளியான கலைக்கதிர் மாத இதழுக்கு அறிவியல் செய்திகளைக் கட்டுரையாக்கி அனுப்புவேன், வெளியிடுவார்கள்.
சென்னையில் படிப்பு (1959-1963) முடிந்த பின்னர் ஊருக்குத் திரும்பினேன். யாழ்ப்பாணத்தில் பொதுப் பணிகளில் ஈடுபட்டேன், அவை தொடர்பாகப் பரப்புரைக் கட்டுரைகள் எழுதினேன். அவையும் இதழ்களில் அச்சாயின.
1963 அக்டோபரில் வழக்குரைஞர் திருச்செல்வம் சென்னைக்கு வந்தார். அவருடன் நானும் வந்தேன். இலங்கை அரசு மீது சிங்கள மொழிச் சட்டத்தை எதிர்த்துக் கோடீஸ்வரன் வழக்குத் தொடர்ந்தார். திருச்செல்வம் வாதிட்ட வழக்கில் அரசியலமைப்புச் சட்ட ஆலோசனை பெறச் சென்னை வந்திருந்தார். வழக்குரைஞர் நம்பியார், நீதிபதி கைலாசம் போன்றோரிடம் ஆலோசனை கேட்க வந்திருந்தார். நெடுஞ்செழியன்  உள்ளிட்ட திராவிடக் கட்சிகளின் தலைவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் எனப் பலரிடம் திருச்செல்வம் அவர்களை அழைத்துச் சென்றேன். ஆனால், ஈழத்தமிழர்களுக்கு அரசியல் ஆதரவு கேட்டுப் பேசினோம். நாங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை.
கோடீஸ்வரனைச் சிங்களம் படிக்குமாறு வலியுறுத்தக் கூடாது என்ற கீழ் நீதிமன்றத் தீர்ப்பு, இலண்டனில் உள்ள பிரிவிக் கவுன்சில் வரை முறையீடாகியது.
அதர்கு முன்பு, இலங்கைக் குடியுரிமை தொடர்பாகத் தொண்டைமான் தொடர்ந்த வழக்கும் இலண்டனில் உள்ள பிரிவிக் கவுன்சில் வரை முறையீடாகியது.
இந்த வழக்குகளில் பிரிவுக் கவுன்சில் வழங்கிய தீர்ப்புகள் இலங்கை அரசை நிலை குலையச் செய்தன. பிரித்தானியர் விட்டுச் சென்ற இலங்கையின் சோல்பரி அரசியலமைப்பின் 29ஆவது பிரிவு, சிறுபான்மையினருக்கு வழங்கிய பாதுகாப்பை மீறிச் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இலங்கை நாடாளுமன்றத்துக்கு இல்லை என்ற பிரிவிக் கவுன்சிலின் தீர்ப்புகளால் இலங்கை அரசு அரசியல் ஆட்டம் கண்டது. திருச்செல்வத்தின் வாதங்களும் இதற்கு அடிப்படை
கொழும்பில், 1963இல் இலங்கை அரசுப் பணியில் சேர்ந்தேன். அங்கே இருந்த காலங்களில், மாலை வேளைகளில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வாபுகழ்பெற்ற வழக்குரைஞர் திருச்செல்வம் ஆகியோர் அழைத்து, அவர்களிடம் செல்வேன். அவர்கள் எழுதிய, சொல்லிய ஆங்கிலச் செய்திகளை, தமிழில் எழுதிக் கொடுக்கின்ற சில பொறுப்புகளை எனக்குக் கொடுத்தனர். அவர்களுக்கு என் எழுத்து நடை பிடித்து இருந்தது. காரணம், ஒரு வரியில் முன்று அல்லது நான்கு சொற்களுக்கு மேல் இருக்காது. என் அறிவுக்கெட்டிய வரை, வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதேன். தமிழின் 247 வரி வடிவங்களுக்கு உள்ளாகவே என்னுடைய எழுத்து நடை அமைந்து இருக்கும். கிரந்த வரி வடிவங்களைப் பயன்படுத்துவது அரிது. ஆங்கிலச் சொற்கள் புழக்கத்தில் இருந்தாலும், அவற்றைவிட்டு அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்களையே பயன்படுத்துவேன். காலண்டர்என்று எழுதேன், ‘நாட்காட்டிஎன்றே எழுதுவேன். இத்தகைய சொல்லாட்சியும், வரி அமைப்பும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வாபுகழ்பெற்ற வழக்குரைஞர் திருச்செல்வம், போன்றோருக்கு மிகவும் பிடித்தன.
வீரகேசரியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினேன். சுதந்திரன், தினகரன் இதழ்களிலும் எழுதினேன். இவைதாம் அப்போது முதன்மைப் இதழ்கள். அதேகாலகட்டத்தில் கவிஞர் காசி ஆனந்தனும், கொழும்பில் இருந்தார். அவரும் நிறைய எழுதிக்கொண்டு இருந்தார். நானும் அவரும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில், தமிழ் வகுப்பில்இரு ஆண்டுகள்  (1960-1962) ஒன்றாகப் படித்தவர்கள். கொழும்பில் இலங்கை வானொலியில் நிகழ்ச்சிகளில் பேச அருள் தியாகராசா எனக்கு வாய்ப்புத் தந்தார்.
என் எழுத்து நடைக்கு வழிகாட்டி மு.வ. அவர் எழுதிய கல்வி என்ற நூல்எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. கிருபானந்த வாரியார் எழுதிய சிறுசிறு வெளியீடுகளையும் படிப்பேன்.


மணல்மேடு. அங்கே பண்ணையார் வீடு. பக்கத்தில் குளமும், வயல்வெளியும். பள்ளத்தில் குடிசை. அதில் ஒரு குடியானவன். வயலில் சம்பா விளைந்து இருக்கும். குடியானவன் அதை வெட்டுவான். மேட்டில் வாழும் பண்ணையாரிடம் கொடுப்பான். அதை, பண்ணையாரும் சாப்பிட மாட்டார், குடியானவனும் சாப்பிடமாட்டான். காரணம் பண்ணையாருக்குச் சர்க்கரை நோய். பண்ணையார் கொடுக்காததால் குடியானவனும் சாப்பிடவில்லை என்று எழுதுவார் வாரியார்.
என்ன எளிமையான வருணனை பாருங்கள்! ஒரு காட்சியை அப்படியே கண்முன் கொண்டு வந்து காட்டிவிடுவார். இப்படிக் காட்சிப்படுத்துவதே எழுத்துக் கலை. கிருபானந்த வாரியாரின் இத்தகைய எழுத்து நடை என் எழுத்தைச் செம்மைப்படுத்தின. தமிழன், சைவன் என்பதால், அவரது எழுத்துகளில் எனக்கு மிகுந்த ஈடுபாடு. என் தந்தையார் காட்டித் தந்த சைவ நெறியை நானும் தொடர்கிறேன்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஏவிபி ஆசைத்தம்பி ஆகியோரின் எழுத்துகளை, பச்சையப்பன்  விடுதி முடித் திருத்தகத்தில் செய்தித் தாள்களில் நாள்தோறும் படிப்பேன். கவிஞர் கண்ணதாசன்  எழுத்தில், மூன்று வரிகளுக்கு மேல் ஒரு பந்தி இருக்காது. அந்த அமைப்பு என்னை ஈர்த்தது.
சில சொற்களில் வாக்கியங்கள், சில வாக்கியங்கள் பந்திகளாக என அமைந்த என் எழுத்து நடை, கொழும்பில் தந்தை செல்வா, வழக்குரைஞர் திருச்செல்வம் ஆகியோர் தரும் மாநாட்டுத் தீர்மானங்களையும் சட்டவாக்கங்களையும் தமிழாக்கும் காலத்தில் மாறிவிடும். பல பக்கங்கள் கொண்ட ஒரு தீர்மானத்தையோ, ஒருசட்டவாக்கத்தையோ ஒரே வரியில் எழுதிக் கொடுத்து இருக்கின்றேன். நிறுத்தற் குறிகளும், வேற்றுமை உருபுகளும், உம்மைத் தொகைகளும் அத்துச் சாரியைகளும் அவ்வாறு ஒரே வரியில் பல பக்கங்களை எழுதுவதற்கு எனக்குத் துணை நின்றன. ஒரு வரித் தீர்மானம் என்றல், அது நான்கு பக்கங்கள் என்றாலும் ஒரே வரியில்தான் இருக்க வேண்டும். கட்டுரைகளில் வரிகளைளை உடைத்துக் கொடுக்கலாம். ஆனால், தீர்மானங்களை ஒரே வரியில்தான் எழுத வேண்டும். அந்தவரி இடையில் முறிந்து விட்டால், தொடர்ச்சி கெட்டுப்போகும். அதற்குப்பிறகு. அதை இணைத்துப் பார்க்கலாம், பார்க்காமலும் விட்டுவிடக்கூடும். இப்படி ஒரே வரியில் தீர்மானங்களை எழுதுவதற்கு நமக்கு வழிகாட்டி மேனாட்டவர்களே.
என் எழுத்தாற்றல் எனக்குத் துணைக்கு வந்தாதலும் இந்தியப் பல்கலைக் கழகப் பட்டதாரி என்பதால் அரச கரும மொழித் திணைக்களத்தில் விலங்கியல் பதிப்பாசிரியப் பணிக்கு என்னை அமர்த்த மறுத்தனர். முதல் வகுப்பில் வெற்றிபெற்ற பட்டதாரி நான். இரண்டாம் வகுப்பில் வெற்றிபெற்றவர் இலங்கைப் பட்டதாரியான மற்றவர். கலைக்கதிர் உள்ளிட்ட இதழ்களில் அறிவியற் கட்டுரை எழுதியவன் நான். அவர் எதிலுமே எழுதாதவர். ஆனாலும் இந்தியப் பட்டதாரி என்பதால் மற்றவருக்கே அரசுப் பதவி வழங்கல். எனினும் என்னை அழைத்து பொரடைல் மற்றும் பொற்ஸ் எழுதிய முதுகெலும்பில்லாதவை என்ற 1000 பக்க நூலை மொழிபெயர்க்கத் தந்தனர், மொழிபெயர்த்துக் கொடுத்தேன்.
1964இல் இந்திய அரசின் புலமைப் பரிசில் பெற்றுச் சென்னைப் பச்சயைப்பன் கல்லூரியில் முதுநிலை அறிவியல் மாணவனானேன். அக்காலத்தில் வை. கோபாலசாமி மாநிலக் கல்லூரி மாணவர். சாத்தையா என்ற தமிழக்குடிமகன், துரைமுருகன் ஆகியோர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள். கல்லூரிகளுக்கிடையேயான பேச்சுப் போட்டிகளில் இவர்கள் பங்கேற்பார்கள்.
1965இல் தமிழ் நாட்டின் இலங்கை மாணவர் சங்கத் தலைவனானேன். 1965 பெப்ருவரி 4. இலங்கைச் சதந்திர தினம். சென்னையில் உள்ள இலங்கைத் தூதர், சுதந்திர தின நிகழ்ச்சியில் நானும் பேசுவேன் என என்னைக் கேட்காமலே சேர்த்துக்கொண்டார். அவரிடம் சென்றேன். என் எதிர்ப்பைத் தெரிவித்தேன். கலந்து கொள்ள மாட்டேன் எனக் கூறி வந்துவிட்டேன். அவர் அழைப்பிதழைத் திருப்பி அச்சிட்டார். என் பெயர் இல்லை. ஆனாலும் துணைத்தலைவராக இருந்த பெண் ஒருவரின் பெயரை அவர் ஒப்புதலுடன் சேர்த்தார். கொழும்பைச் சேர்ந்த அப்பெண் தமிழ் தெரியாத இசுலாமியர்.
1965இல் இந்தி எதிர்ப்புப் போரட்டம். தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை மாணவர், நான் உள்பட, விடுதிகளுக்கு வெளியே அனுப்பட்டனர். எங்கு செல்வோம்? ஒவ்வொரு கல்லூரியாக விசாரித்து அந்தந்த மாணவர்களின் தங்குமிட வசதி செய்வதில் அப்பொழுது காவல்துறை ஆணையராக இருந்த இராசகோபால் என்பவருடன் பேசி ஆவனசெய்தேன். முதல் இருநாள்களும் சென்னைக் காவல்துறை ஆனையர் அலுவலகத்தில் என்னையும் அடைத்துவைத்திருந்தனர்.
என் வகுப்புத் தோழர் பசுபதி, சந்தானக்கிருட்டிணன் இருவருடனும் சேர்ந்து 1965ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி மலரின், ஆங்கிலத்தில் அறிவியற் கட்டுரை எழுதினேன். 1967இல் கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு அலுவலராகச் சேர்ந்த நாள் முதலாக, ஆண்டுக்கு இரண்டு ஆய்வுக் கட்டுரைகளையாவது எழுதுவேன். 1969இல் நாகக்குராவும் நானும் எழுதிய ஆய்வுக் கட்டுரை யப்பானிய மொழியிலும் சேர்த்து வெளியானது. 1971இல் ஐநா. ஆலோசகராகப் பசிபிக் தீவுகளில் பணியாற்றி வெளியான ஆங்கில ஆய்வுக் கட்டுரையைப் பிரஞ்சு மொழியிலும் வெளியிட்டனர்.  1974இல் சிங்கப்பூர் நன்யாங்கு பல்கலைக் கழகத்தில் யுனெஸ்கோ ஆதரவில் ஆய்வறிக்கை வெளியிட்டேன். 1975இல் இலங்கையில் கருவாடு வணிகம் பற்றிய ஆய்வறிக்கையை ஐநா. வெளியிட்டது. 1976இல் ஆஸ்திரேலிய அரசின் அழைப்பில் ஆஸ்திரேலிய மற்றும் வங்கதேச ஆய்வாளருடன் வங்கதேசத்தில் இணைந்து பணியாற்றி சூரிய ஒளியைக் கூடாரத்துள் ஈர்த்து மீனை உலர்விக்கும் தொழிநுட்பம் பற்றிய கட்டுரையே அத்துறையில் அடித்தளக் கட்டுரையாக இன்றுவரை உளது. 1978இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் என் மாணவி பத்மினியுடன் இணைந்து கடலட்டை பற்றிய ஆய்வுக்கட்டுரை இன்றும் பலருக்கு பயனாகிறது. 1979 தொடக்கம் 1985 வரை செங் கடல், மத்தியதரைக் கடல், மேற்கு இந்துப் பெருகடல் ஆகிய கடற்பகுதிகளைக் கரைகளாகக் கொண்ட 15 நாடுகளின் அரசுகளுக்கு ஐநா. ஆலோசகராக வழங்கிய ஆலோசனைகள் அரபு, சுவாகிலி, கிரியோல், பிரஞ்சு மொழிகளில் கட்டுரைகளாக வெளிவந்தன. அறிவியல் ஆய்வு தொடர்பான இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட முயல்கிறேன்.
1968இல் சென்னையில் இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு, 1981இல் மதுரையில் ஐந்தாவது தமிழாராய்ச்சி மாநாடு, இரண்டும் தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய என் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்குக் களங்களாயின. அனைத்துகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் துணைச் செயலாளராக, 1974இல் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தப் பங்களித்தேன். இலங்கை அரசின் தடைகளைத் தாண்டி அந்த மாநாட்டை நடத்திய வரலாற்றை எனது யாழ்ப்பாணமே என்ற நூலில் பதிவு செய்துள்ளேன்.
1948ஆம் ஆண்டு இலங்கை விடுதலை பெற்றது. 1972இல் இலங்கை குடியரசானது. 1948 தொடக்கம் இலங்கை அரசு மீது தமிழர் தொடுத்த வழக்குகளும் பிரிவிக் கவுன்சில் வரை சென்று அவ்வழக்குகளில் பெற்ற தீர்ப்புகளும் 1972இல் இலங்கையில் புதிய அரசியல் அமைப்பைச் சிங்களவர் உருவாக்க அடிப்படைக் காரணங்கள்.
1972இல் இலங்கைக்கான அரசியலமைப்பை உருவாக்குவதில் தமிழர் பங்குபற்றவில்லை. 1948இல் பிரித்தானியரிடமிருந்து தமிழரும் சிங்களவருமாக இணைந்து பெற்ற இறைமையை, தமிழர்களின் பங்களிப்பின்றிச் சிங்களவர் தமதாக்கினர். இப்பொழுது இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு விதிகள் எதையுமே தமிழர் பங்களித்து உருவாக்கவில்லை. 1972இலும் 1979இலும் முழுக்க முழுக்க அவை சிங்களவர்களாலேயே தயாரிக்கப்பட்டன.
1975 இல் தந்தை செல்வா அனைத்து உலக நீதி ஆணைக்குழுவுக்கு ஒரு விண்ணப்பம் கொடுத்தார். சுமார் 100 பக்கங்கள் கொண்ட அந்த விண்ணப்பத்தைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தேன். ஏறத்தாழ ஏழு நுல்களை அக்காலத்தில் தமிழரசுக் கட்சிக்காக மொழிபெயர்த்துக் கொடுத்தேன். அவற்றைச் சுதந்திரன் பதிப்பகம் நூல்களாக வெளியிட்டு விற்பனை செய்தது. அப்பொழு நான் இலங்கை அரசின் ஆட்சிப்பணிநிகர்  அலுவலராக இருந்தேன். எனவே மொழிபெயர்ப்பாளனாக அதில் என் பெயரைச் சேர்க்க முடியவில்லை.
1976இல் தந்தை செல்வா தலைமையில்  வட்டுக்கோட்டையில் தமிழர் கட்சிகள் இணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். தமிழருடைய பங்களிப்பு இல்லாமல் அமைந்த அரசியல் அமைப்புக்கும் தமிழருக்கும் தொடர்பு இல்லை; எனவே, தமிழரது இறைமையைத் தமிழரே தனித்துப் பயன்படுத்த, எங்களுக்காக நாங்களே, புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவோம் என்று தமிழர் கட்சிகள் அறிவித்தன.
அவ்வாறு தமிழருக்குத் தனியான அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காகத்தான், 1977ஆம்ஆண்டுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களிடம் ஆணை கேட்டது. அந்த ஆணையைத் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் தமிழ் மக்கள் வழங்கினர்.
மக்கள் வழங்கிய தீர்ப்பை நடைமுறைக்குக் கொண்டுவரச் சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் துண்டு அறிக்கைகளைப் பரப்பியதாகவும் அமிர்தலிங்கம், சிவசிம்பரம், நவரத்தினம் காபொ இரத்தினம் ஆகிய தலைவர்களைத் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைதாகிச் சிறைசென்றனர். நீதிமன்றத்தில் இவர்களுக்காக வாதாடியோருள் அரசியலமைப்புப் பொருத்தமின்மையை வாதிட்டவர் வழக்குரைஞர் திருச்செல்வம். வழக்குரை வாதங்கள் கொண்ட, ஆங்கிலத்தில் தட்டச்சான 10 பக்கங்களை என்னிடம் திருச்செல்வம் தந்தார்.
திருச்செல்வம் மலேசியாவில் பிறந்தவர், கொழும்பில் பணிபுரிந்தவர். தமிழை ஓரளவுக்கு வாசிக்க, எழுதத் தெரிந்தவர். ஆங்கிலத்தில் சிறந்த புலமையாளர். இராணியின் வழக்குரைஞர் என்ற பட்டம பெற்ற மூத்த வழக்குரைஞர். பத்துப்பக்கங்கள் கொண்ட வழக்குரை ஒவ்வொரு பந்தியையம் ஒவ்வொரு அத்தியாயமாக விரித்தேன். எளிமையான, இனிமையான தமிழில் சிறுசிறு பந்திகளாக ஆக்கி, நூலாக்கினேன்.
அவரது நூலகத்தில் அமர்ந்து விரித்துத் தமிழில் எழுதிய நூலே ஈழத் தமிழர் இறைமை. முதல் பதிப்பில் தமிழாக்கியதாக என் மனைவியின் பெயர் இருக்கும். ஏனெனில் நான் அப்பொழுது இலங்கை அரசின் ஆட்சிப்பணிநிகர் அலுவலர். 1977 சித்திரையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வெளியீட்டு நிகழ்வில் 2000 படிகளும் விற்றுத் தீர்ந்தன. அந்த நூல் போரளிகளுக்குப் பாடநூலாகியது. பல பதிப்புகளை இலங்கையிலும் இந்தியாவிலும் கண்டது.
1977 ஆம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் நடைபெற்றது. கொழும்பில் எனது வீட்டைச் சிங்களவர் தாக்கினார்கள். எனவே, குடும்பத்துடன் அகதி முகாமில் தங்கியிருந்தேன். அக்காலத்தில் ஒருநாள் நிலஅளவைத்துறைத் தலைவராக இருந்த ஜே. ஆர். சின்னத்தம்பியைத் தற்செயலாகச் தெருவில் சந்தித்தேன். அடுத்த 10 நாள்களில் கொழும்பில் உள்ள ஆவணக் காப்பகம், அருங்காட்சிய நூலகம் என நானும் அவரும் தேடலில் பயணித்தோம். விளைவு தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள் என்ற நூல். அந்த நூலும் பிற்காலத்தில் போராளிகளுக்குப் பாடநூலாகியது. பல பதிப்புகளை இலங்கையிலும் இந்தியாவிலும் கண்டது. சிங்கள நிலப்பகுதியைத் தமிழ் நிலப்பகுதியிலிருந்து பிரிக்கும் எல்லைக் கோடு, சச்சிதானந்தன் எல்லைக் கோடு, என்ற பெயரைப் பெற்றது அந்த நூலாலன்றோ. சென்னையில் தமிழ் ஈழ வரை படத்தை உருவாக்கினேன். யாழ்ப்பாணத்தில் 10,000 படிகளை முதலிலும் பின்னர் 10,000 படிகளையும் அந்த வரைபடத்தை வண்ணத்தில் அச்சிட்டுப் போராளிகள் உலகம் முழுவதும் எடுத்துச் சென்றனர்.
அந்த எல்லைக் கோட்டைத் தாண்டி, இன்றைக்குச் சிங்களவர்கள் தமிழ் மண்ணை ஆக்கிரமத்து இருந்தாலும், என்றைக்கும், எதிர்காலத்தில் அந்த வரைபடம் மிகப்பெரிய ஓர் ஆவணமாகத் தமிழ் மண்ணை மீட்டெடுக்க உதவும்.
1977இல் கொழும்பிலிருந்து புறப்பட்டுக் குடும்பத்தோடு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன். 11 ஆண்டுகள் அறிவியல் ஆய்வு அலுவராகப் பணிபுரிந்த நான், ஒரே நாளில் அரசுப் பணியை விட்டு விலகினேன். எனக்கு வர வேண்டிய ஓய்வு ஊதியத்தையும் துறந்தேன். என் மனைவி மக்கள்என் பெற்றோர், உற்றார் உறவினர்கள் யாவரும் என்னைத் திட்டித் தீர்த்தனர்.
அக்காலத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் சு.வித்தியானந்தன் என்னை அழைத்து, யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக்கினார். என் வகுப்பில் படித்த மாணவர்களுள் ஒருவரான சேரன், இன்றைக்குப் புகழ்பெற்ற கவிஞராகக் கனடாவில் இருக்கின்றார். ஈராண்டு காலம் விரிவுரையாளராகப் பணிபுரிந்தேன்.
அக்காலத்தில் ஈழத்தில் சமூகநீதி மறுப்புக்கு எதிரான போராட்டகளை நடத்தினேன். என் எழுத்தாற்றல் எனக்குத் துணைநின்றது. அறவழிப் போராட்டக் குழுவை நிறுவினேன். பயிற்சி வழங்கினேன்.
கவிஞர் காசி ஆனந்தன் 5 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் அவரது திருமணம் பின்போடப்பட்டு வந்தது. அவருடன் கலந்து பேசி, செவ்வச் சந்நிதி முருகன் கோயியில் திருமணம், மாலை அமிர்தலிங்கம் தலைமையில் வீரசிங்கம் மண்டபத்தில் வரவேற்பு என நிகழ்வுகளின் அழைப்பாளராய்த் திருமணத்தை நடத்திவைத்தேன். அத்திருமணம் தொடர்பாக, சுதந்திரன் இதழில் கோவை மகேசனும் நானும் எழுதிய செய்திகள், நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற உதவியது.
1977 தேர்தலில் ஜெயவர்த்தனா வெற்றி பெற்றபின்னர், தமிழ் இளைஞர்கள் மீது அடக்குமுறையை ஏவினார். ஏராளமான இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தனர். ஒரு இராணுவத் தளபதியை அனுப்பி, யாழ்ப்பாணத்தல் உள்ள இளைஞர்களைத் தேடினார். அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்து, இளைஞர்கள் பலரை இழுத்துக்கொண்டு போய்ச் சுட்டுக்கொன்றார்கள்.
அக்காலத்தில் நான் இரவில் வீட்டில் இருப்பது குறைவு. நீ நாட்டை விட்டுப் போய்விடு என என்னுடைய தந்தையார் கூறினார். அந்த வேளையில், ஐநா. நிறுவனத்தில் என் பணிகளை மெச்சிய அன்பர் என்னை அழைத்துச் செங்கடல் பகுதி நாடுகளுக்கு ஐநா. ஆலோசகராக்கினார். யாழ் பல்கலைக் கழக வேலையை விட்டு நீங்கி, ஐநா. ஆலோசகராகச் சென்றேன்.
நான் புறப்பட்டுச் சென்ற சில மாதங்களில் ஈழவேந்தன், ஐ.தி. சம்பந்தன் போன்ற ஆர்வலர் பலரைக் கைது செய்து, யாழ்ப்பாணம் கச்சேரியில் தடுத்துவைத்து அடித்துச் சித்திரவதை செய்தார்கள். சச்சி எங்கே என்று அவர்களிடம் கேட்டார்களாம்.  Where is the bugger Sachi? That bugger signed for 14 terrorists to obtain passports and leave Sri Lanka. Now that bugger is also not here. Where ever he is we will bring him. இவ்வாறு ஈழவேந்தனிடம் கேட்டார்களாம். விடுதலை ஆனபின்பு, என் தந்தையாரைச் சந்தித்த, ஈழவேந்தனும் சம்பந்தனும் சச்சி இங்கே திரும்பி வர வேண்டாம். வந்தால் உயிருக்கு ஆபத்து என்று எச்சரித்து விட்டுச் சென்றனர்.
என் தந்தையார் உடல் நலம் இல்லாதபோது, 1983ஆம் ஆண்டு இலங்கை சென்றேன். அப்போது சிங்களப் படையினர் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
திருநெல்வேலியில் பலாலி சாலையில், பிரபாகரன் வைத்த கண்ணி வெடியில் சிக்கி, 13 சிங்கள இராணுவ வீரர்கள் இறந்தனர். நிகழ்ந்த இடத்துக்கு இரு கிலோ மீட்டர் தொலைவில் வண்ணார்பண்ணையில் நான் அன்று உடல்நலமற்ற என் தந்தையாருடன் இருந்தேன். அதே வார இறுதியில், கறுப்பு வௌளிக்கிழமையில் கொழும்பில் என்னுடைய ஒன்றுவிட்ட அண்ணனையும் அவரது மகனையும் வெட்டிக்கொன்றார்கள்.
கலவரம் அடங்கியபின், பதினைந்து நாள்களுக்குப் பிறகு என் தந்தையாரை அழைத்துக்கொண்டு சென்னை வழியாக அரபு நாடுகளுக்குச் சென்றேன். அப்போது சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் அங்கே நடக்கின்ற கொடுமைகளைப் பற்றி நானும் என் தந்தையாரும் சொன்னோம்.
1980ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்தபொழுது, தற்செயலாக உமாமசேவரனைச் சந்திதேன். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நானும் அவரும் இணைந்து பல பணிகளில் ஈடுபட்ட தொடர்பு. மெலிந்து வாடி இருந்தார். இயக்கத்தில் பிளவால் தாம் வருவாயின்றித் துன்புறுவதாகக் கூறினார். நண்பர் ஒருவரிடம் வேலையில் சேர்த்துவிட்டேன். மறுநாளே என்னிடம் வந்தார். நேரக் கட்டுப்பாட்டுடன் பணிபுரிய முடியாதென்றும் மாதம் 400 ரூபாய் வருவாய் உள்ள நேரக் கட்டுப்பாடற்ற வேலையே வேண்டுமென்றார்
பதிப்புப் பணி செய்வீர்களா எனக் கேட்டேன். அவருக்காக 1980இல் காந்தளகம் பதிப்பகத்தைச் சென்னையில் தொடங்கினேன். அதன் முதல் ஊழியர் உமா மகேசுவரன்.  போரளி இயக்கத்தில் சிக்கல் இருந்த்தால் அப்போது அவருக்கு நான் திருநாவுக்கரசு என்று பெயர் கொடுத்தேன். அந்தக் காலகட்டத்தில் சென்னைக்கு வந்திருந்த அத்தனை போராளிகளும் என்னோடு நன்கு பழகியவர்கள். அனைவருக்கும் அக்காலத்தில் என்னாலான உதவிகளைச் செய்தேன்.
நான் எழுதிய, எனது யாழ்ப்பாணமே, சென்னைக் காந்தளகத்தின் முதலாவது வெளியீடு. 1980 தொடக்கம் 2011 வரை 400க்கும் கூடுதலான தலைப்புகளை, அதுவும் ஈழத்து எழுத்தாளர் எழுதியவற்றைப் பதிப்பித்தோம்.
என் எழுத்துகள் என் உணர்வுகளின் வெளிப்பாடாகவே தொடங்கின. தொடக்க காலத்தில் அவை என்னுடனேயே முடங்கின. தற்செயலாக வெளிவந்த 16 வரிக் கவிதை எனக்குத் தந்த உற்சாகம், என்னை இந்த உலகுக்குள் இட்டுச் சென்றது.
நான் எழுதிய ஆராயச்சிக் கட்டுகைள்யாவும் நேரடிப் பயன் நோக்கியன. அந்தப் பாதிப்பு இருந்ததால் பிற படைப்புகளும் பொழுதுபோக்குக்கன்றி நேரடிப் பயன் நோக்கியதாக, மறவன்புலவு . சச்சிதானந்தன் எழுதியதைப் படித்தேன், நேற்றை விட இன்று நான் மேலானவனானேன், வளர்ந்துள்ளேன், மனிதம் மேம்பட்டது என  எந்த ஒரு வாசகரும் கருதுகையில் நான் உற்சாகமடைகிறேன்.

No comments:

Post a Comment