சச்சிதானந்தனின் பயணங்களும் பசுமை நினைவுகளும் 1
அருணகிரி, (தனிச்
செயலர், வைகோ)
ஈழத்தமிழ் அறிஞர் மறவன்புலவு சச்சிதானந்தன், சென்னை எழும்பூரில் வசித்து வருகிறார். சுமார் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்த, யாழ்ப்பாணத் தமிழரின் பயண அனுபவங்களைக் கேட்போம்.
நான் மாணவனாக இருந்தபோது, தமிழ் ஆசிரியராக இருந்த எனது தந்தையார், தேசப் படப் புத்தகம் ஒன்றை என் கையில் தந்தார். உலக நாடுகளையும், இயற்கை அமைப்பையும் அந்தப் புத்தகத்தில் பார்த்து வியப்பேன். வரலாறு,
புவியியல் பாடங்களை வகுப்புகளில் சொல்லிக் கொடுத்த மாணவப் பருவம். புவியியல்
எனக்குப் பிடித்த பாடமாக இருந்தது.
அந்த நாள்களில், இலங்கைச் செய்தி இதழ்களில், பேனா நட்புக் குறித்த முகவரிகள் வெளியாகிக் கொண்டு
இருந்தன. அப்பப்போ சிலருக்குக் கடிதம்
எழுதத் தொடங்கினேன். தென்மார்க்கு
நாட்டைச் சேர்ந்த தம்பதியர் எனக்குப் பதில் எழுதனார். அவரோடு சில ஆண்டுகள் கடிதத் தொடர்பிலிருந்தேன். தம்
நாட்டு வனப்பைக் காட்டும் படங்களை அனுப்புவார்.
அழகிய பூந்தோட்டம் அவர் வீட்டில் இருந்தது. பனிபடர்ந்த
மலைகள், நெடிய புல்வெளிகள், கொழுப்பான மாடுகள், பால் சார்ந்த உணவு வகைகள் என அவர்
அனுப்பிய புகைப்படங்களை என் நண்பர்களுக்கும் காட்டுவேன். அயல்நாடுகளைப் பார்க்க
வேண்டும் என்ற முதல் தூண்டுதலை அப்படங்களும் அந்த நண்பரின் கடிதங்களும் எனக்குத்
தந்தன. ஒருமுறை அந்தப் பேனா நண்பரின் கடிதத்தையும் படங்களையும் வகுப்பறையில் என் பள்ளித் தோழன் ஆனந்தராஜாவிடம் காண்பித்தேன். தென்மர்க்கு
நாட்டுக்குச் சென்று,
அந்த நண்பரைச் சந்திக்கவும் இடங்களைப் பார்க்கவும்
எனக்குள்ள ஆர்வத்தைக்கூறினேன்.
‘படிப்பே வராமல் பாடங்களைப் படிக்காமல் திணறுகிறாய், நீயாவது
அங்கு போவதாவது? எனக் கிண்டலாகப் பேசினான். அந்தப் படங்களில் ஒன்றில் ஆறும்
பாலமும் இருந்தன. ஒருநாள் போவேன், அந்தப் பாலத்தில் நின்று படம் எடுத்து உனக்கு
அனுப்புவேன் என ஆனந்தராஜாவிடம் கூறினேன்.
படித்து முடித்தபின்பு, உலக நாடுகளைப் பார்க்க வேண்டும் என உறுதி பூண்டேன். அந்த ஆவலை வளர்த்துக்
கொண்டே வந்தேன்.
சென்னையில் கல்வி
1959 ஆம் ஆண்டு, வைகாசியில் உயர்கல்விக்காகச் சென்னைக்கு என்னைத் தந்தையார் அனுப்பினார். யாழ்ப்பாணத்தில்
இருந்து கொழும்பு சென்றேன். கடவுச் சீட்டுப் பெற்றேன். இந்தியத் தூதரகத்தில்
நுழைவனுமதி பெற்றேன். சென்னைக்கு ரூ. 12 கொடுத்துப் பயணச்சீட்டுப் பெற்றுத் தொடர்
வண்டியில் காலை தலைமன்னார் வந்தேன். அங்கு கப்பலில் ஏறினேன். காலையில் ஒரு மணி
நேரக் கப்பல் பயணம். ஏறத்தாழ 500 பயணிகள்.
தனுஷ்கோடியில் வந்து இறங்கினேன். நான் முதன்முதலாகக் கால்
பதித்த அயல்நாடு,
இந்தியா. ஆனாலும் அயல் நாடுபோலத் தோன்றவில்லை. தலைமன்னாரும்
தனுஷ்கோடியும் ஒரே மணல் வெளியும் கடல்பரப்பும் கொண்ட சிற்றூர்கள்.
கடவுச் சீட்டு, நுழைவு அனுமதி, சுங்கச் சோதனை, கப்பல்
பயணம், தமிழக உணவு வகைகள் என அடுக்கடுக்கான புதிய நடைமுறைகள், புதிய அனுபவங்கள்.
சென்னையில் படித்துவந்த அண்ணன் முறையான ஒருவரும் என்னுடன் வந்ததால், என் தந்தையார்
அவர்கூட என்னை அனுப்பியதால், அவருக்கு அந்த நடைமுறைகளில் பழக்கம் இருந்ததால்,
பயணம் சுவையாக, புதுமையாக, இடரின்றி அமைந்தது.
அன்று மாலையே தனுஷ்கோடியிலிருந்து சென்னைக்குத் தொடர்
வண்டி. மறுநாள் காலை சென்னை வந்தேன். சில வாரங்களில் பச்சையப்பன் கல்லூரியில் புகுமுக
வகுப்பில் சேர்ந்தேன்.
பச்சையப்பன் கல்லுரியில் ஆறு ஆண்டுகள் உயர் கல்வி. நான்கு
ஆண்டுகளுக்கு என் தந்தையாரின் ஆதரவு, அடுத்த இரு ஆண்டுகளுக்கு இந்திய அரசின்
புலமைப் பரிசில்.
என்னோடு அங்கு பயின்றவர்கள் பலர் இன்னமும் என்னுடன்
தொடர்பாக உள்ளனர். இளநிலைப் பட்டவகுப்பில்
தமிழ் ஆங்கில பாடங்களுக்கான வகுப்புகளில் கவிஞர் காசி ஆனந்தன் ஈராண்டுகள் ஒன்றாகப்
படித்தார்.
பேராசிரியர்கள் மு.வ., அ.மு. பரமசிவானந்தம்,
சி. பாலசுப்பிரமணியம், அன்பு கணபதி, ஆகியோரின் தமிழ் வகுப்புகள், செவிக்குத் திகட்டாத தேன்.
கல்லூரி விடுதியில் தங்கி இருந்தேன். கவிஞர் காசி ஆனந்தன், இராம.நாராயணன் மற்றும் சில நண்பர்களுடன், தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள விடுதியில் தங்கி
இருந்தார்.
சென்னையில் கல்லூரிகளுக்கு இடையேயான பேச்சுப் போட்டிகள்
நடக்கும். எங்கள் கல்லூரியின் சார்பில், துரைமுருகன், தமிழ்க்குடிமகன் மற்றும் வேதியியல் பிரிவில் ஒரு மாணவர்
உள்ளிட்டோர் பங்கு ஏற்பர். அதே காலகட்டத்தில், மாநிலக் கல்லூரியின் சார்பில் வைகோ உள்ளிட்டோர் பங்கு ஏற்பர். அப்போது அவரோடு
எனக்குப் பழக்கம் இல்லை என்றாலும், அவரை நான் அறிவேன்.
இன்றைய புகழ்பூத்த இயக்குநர் திரு. வி. சி, குகநாதன் எனக்குப்
பின்னால் வந்த வகுப்புகளில் பயின்றவர், அன்றிலிருந்து என் நண்பர்.
தேவார, திருவாசகங்களைப் பள்ளி மாணவனாகப் படித்து வந்தேன்.
பள்ளிக் காலத்தில் அப்பாடல்கள் கூறும் கோவில்களைச் சிறப்பாகச் சிதம்பரம் நடராசர்
கோயிலைப் பார்க்க ஆர்வம் இருந்தது. பச்சையப்பன் விடுதித் தோழர் ஈசுவரன் அதே
ஆர்வமுடையவர். அவரும் நானும் நண்பர்களும் தென்னிந்தியக் கோவில்களுக்குச்
செல்வதையும் வழிபடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டோம்.
திரைப்படங்களைப் பார்க்க எனக்கு ஆர்வம். வார இறுதி
நாள்களில், விடுதியில் இருந்து அறைத் தோழர் ஈசுவரன் உள்ளிட்ட நண்பர்கள் மாலையில்
புறப்பட்டு நடந்தே மரீனாக் கடற்கரைக்குச் செல்வோம். திரும்பி நடந்து வரும் வழியில்
மவுண்ட் ரோடில் எமக்குப் பிடித்த எம்மூர் உணவான இடியப்பம் சாப்பிடவோம்.
அக்காலத்தில் ஒரே ஒரு கடையில் மட்டும் இடியப்பம் கிடைக்கும். அதன்பின் திரையரங்கு
ஒன்றில் திரைப்படம் இரவுக் காட்சி பார்த்துவிட்டு நடந்தே விடுதி வந்து சேர்வோம்.
ஆண்டில் மூன்று முறை நீள்விடுப்பு. சென்னையிலிருந்து
யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை இருந்தது. ரூ. 40 ஒருவழிச் சீட்டு.
குறுவிடுமுறை எனில் விமானத்தில் சென்று மீள்வேன். கோடை விடுப்புப் பயணம் எனில்
தொடர்வண்டியில் தனுஷ்கோடி சென்று, கப்பலில் தலைமன்னார் சென்று, அங்கிருந்து
தொடர்வண்டியில் யாழ்ப்பாணம் செல்வேன். இரு இரவுகள் ஒரு பகல் எனப் பயணம். ரூ. 12
செலவு. விமானப் பயணத்துக்கு ரூ. 40 வரை செலவு.
1961 ஆம் ஆண்டில், ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இலங்கையில் தமிழர் தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இலங்கை மாணவர்களாகிய நாம் அதற்கு ஆதரவாகச் சென்னையில் செயல்பட்டோம். முதல் அமைச்சர் காமராசர் அவர்களைச் சந்தித்தோம். ‘இலங்கைப் பிரச்சினை மாநில அரசின் எல்லைக்கு வெளியில்
இருக்கிறது. மத்திய வெளியுறவுத்துறைதான் கவனிக்க வேண்டும்’ என்றார்.
அறிஞர் அண்ணாவைச் சந்தித்தோம். சென்னைக் கடற்கரையில் மாபெரும் கூட்டத்தைத் திமுக ஏற்பாடு செய்தது.
திரு. மதியழகன் அந்த ஏற்பாட்டைச் செய்தார்.
மாணவர்களாகிய நாம் நிதிசேர்த்துக் கொடுத்தோம்.
சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக வாயிலில் கவிஞர் காசி ஆனந்தன்
ஒருநாள் உண்ணாநோன்பிருந்தார். பின்னர்
அங்கிருந்து நடந்து வந்தார், கல்கி தோட்டத்தில் இருந்த இராசாசியைக் கண்டார்,
பழச்சாறு வாங்கிக் குடித்தார். அக்காலத்தில் இராசாசி சுவராச்சியாவில் எழுதிய கட்டுரை, இலங்கைத் தமிழருக்கு இன்றும்
என்றும் பொருந்தும் செய்திகள் கொண்டன. ஐநா மூலம் தீர்வுக்கு இந்தியா முயலவேண்டும்
என அப்பொழுதே இராசாசி எழுதினார்.
சென்னையில் ஆறு ஆண்டுகள் படித்துவிட்டு நாடு திரும்பினேன்.
1967ஆம் ஆண்டு தொடக்கம் 12 ஆண்டுகள், கொழும்பில் கடல்தொழில் ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாகப்
பணிபுரிந்தேன்.
1968இல் சென்னையில் அண்ணா நடத்திய இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி
மாநாட்டுக்கு வந்து, தமிழ்ழில் கலைச்சொற்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை படித்தேன்.
ஜப்பானில் பயிற்சி
1969ஆம் ஆண்டில், உயிரிஇராசயன ஆராய்ச்சி தொடர்பாக, ஆறுமாத காலப் பயிற்சிக்காக ஜப்பான் சென்றேன்.
அப்பொழுதெல்லாம் ஜப்பான் செல்ல நேரடி விமானங்கள் கிடையாது.
ஆங்காங்கே வழியில்,
ஒன்றிரண்டு நாள்கள் தங்கித்தான் செல்ல வேண்டும். எனவே, சிங்கப்பூர் சென்று, எனது ஒன்றுவிட்ட அண்ணனுடன் தங்கினேன்.
எனது பெட்டியில், நல்லெண்ணெய்ப் போத்தலை வீட்டில் வைத்து இருந்தார்கள். விமானப் பயணத்தின்போது பெட்டிக்குள்
அந்த பாட்டில் உடைந்து,
எண்ணெய் முழுவதும் என்னுடைய உடைகளில் படிந்து அழுக்காகி
விட்டது.
என் அண்ணன் அவற்றையெல்லாம் வெளியில் எடுத்து, சீனப் பணிப்பெண்ணிடம் கொடுத்துத் துவைத்து, தேய்த்துத் தந்தார்.
கடைக்கு அழைத்துச் சென்று, எனக்கு ஒரு பயணப்
பெட்டியும்,
ஜப்பானில் அணிந்து கொள்வதற்காக கோட் சூட்டும் வாங்கிக்
கொடுத்தார்.
சிங்கப்பூர் அப்போது அவ்வளவாக வளரவில்லை. நகர் முழுவதும்
மிகத் தூய்மையாக இருந்தது. லிட்டில் இந்தியா பகுதியில் தமிழர்களையும்
கோயில்களையும் அண்ணனும் மச்சாளும் தம் காரில் அழைத்துச் சென்று காட்டினர்.
அங்கிருந்து,
ஹாங்காங், தைவான் வழியாக, ஜப்பான் போய்ச் சேர்ந்தேன். ஒவ்வொரு இடத்திலும் பல மணி
நேரங்கள் தங்கியதால், அந்தந்த ஊர்களுக்குள் சென்று பார்க்கும் வாய்ப்புப்
பெற்றேன். சுறுசுறப்பாக இயங்கிய சீனர்கள் என் கவனத்தை ஈர்த்தனர். தைவானில் சீன
மொழி தெரிந்திருந்தால் மேலும் விவரங்கள் அறிந்திருக்கலாம். அங்கு ஆங்கிலம்
தெரிந்தோரை அரிதாகக் கண்டேன்.
ஜப்பானில் கடல்தொழில் ஆராய்ச்சி நிலையத்தில் உயிரிஇரசாயன
ஆராய்ச்சிப் பயிற்சி. என் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கனெக்கோ சான், துறைத் தலைவர்
திருமதி சுசுக்கி சான் இருவருடன் மட்டுமே ஆங்கிலத்தில் பேசலாம். சுற்றுலாப்
பயணிகளின் கடைத்தெருவான கின்சாவில் கடைக்கார்ரகளுக்கு ஆங்கிலப் பயிற்சி உண்டு.
யொக்கோகாமா நகரிலும் பலர் ஆங்கிலத்தில் உரையாடுவர்.
ஏனைய பெரும்பாலான ஜப்பானியர்களுக்கு ஆங்கிலம் சுத்தமாகத்
தெரியாது. எனவே,
மொழிப்பிரச்சினை எனக்கு ஒரு பெரும் சிக்கலாக இருந்தது.
அவர்களே ஓர் ஆசிரியரை ஏற்பாடு செய்தனர். எனக்கு ஜப்பானிய மொழியைப் பேசக் கற்றுக்
கொடுத்தனர். தெருவில், உணவகத்தில், வங்கியில், கடைகளில் தொடர்வண்டிப் பயணத்தில்,
விடுதியில், ஆய்வு கூடத்தில் ஜப்பானிய
மொழியையே பயன்படுத்தத் தொடங்கினேன்.
தோக்கியோவில் உள்ள நாயர் உணவகம் இந்திய உணவு வகைகளையே
தந்தது. அதே போல வேறு ஓரிரு இந்திய உணவகங்கள் இருந்தன. விலையோ, விலை. வாரத்துக்கு
ஒருமுறை ஜப்பானிய நண்பர் எவராவது ஒருவரை நாயர் உணவகத்துக்கு அழைத்துச் செல்வேன்.
அந்த நண்பர்களும் என்னைத் தத்தம் வீடுகளுக்கு அழைத்துச்
செல்வர். நல்ல நண்பர்களாகப் பதினைந்துபேர் வரை இருந்தனர். இவர்கள் எனக்கு ஜப்பானிய
மொழியைப் பேசப் பழக்கினர்.
எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தைச் சொல்லிக் கொடுப்பேன். புத்தகக்
கடைகளில் தொடக்க நிலை ஆங்கிலப் பயிற்சி நூல்களை வாங்கினேன். மதிய உணவு இடைவேளையில்
என் சக ஆய்வாளர்களுக்கும், தங்குமிடம் சென்றதும் மாலையில் அங்குள்ள மற்ற
மாணவர்களுக்கும் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தேன்.
சைவ உணவு மட்டுமே யப்பானில் பெறுவது அரிதல்ல. காய்கறி
உணவுமட்டுமே உண்பேன் என்பதை யசாயி தக்கே என்ற இரு சொற்களால் கூறப் பயின்றேன்.
உதொங்கு எங்கும் கிடைக்கும் காய்கறி உணவு. ரொட்டியும் பழக்கழியும் வெண்ணெயும்
எனக்குப் பழகிப்போயின. அவித்த சோயாப் பயறும் பசுந் தேனீரும் கிடைக்காத இடமில்லை,
உண்ணாத ஜப்பானியர் இல்லை. கய்ஜின் என்று வெளிநாட்டவரை ஜப்பானியர் அழைப்பர். தம்
நாட்டில் குறைவின்றி இருக்கவேண்டும் என அனைத்தையும் விருந்தினருக்குச் செய்து
கொடுப்பர். அங்கு நீண்ட காலம் வெளிநாட்டவர் தங்குவதை அவர்கள் விரும்புவதில்லை.
வடக்கே ஒக்கய்டோ, தெற்கே கியோத்தோ எனப் பல இடங்களுக்குச்
சுற்றுலா சென்றேன். அதிவேகத் தொடர்வண்டியில் ஒசாகா சென்றேன். கியோத்தோ அரண்மனை வளாகத்துள்
பிள்ளையார், குழலூதும் கண்ணன் சிலைகளைக் கண்டேன்.
நீல் ஆம்ஸ்றோங்கு சந்திரனில் கால் வைத்த நிகழ்வை ஜப்பானில்
நான் தங்கியிருந்த காலத்தில் நேரடி ஒளிபரப்பாகப் தொலைக் காட்சியில் பார்த்தேன்.
யப்பானிய வரலாற்று நூல்களை வாங்கிப் படித்தேன். தமிழகத்தில்
பத்தி இலக்கியம் நிறைந்த காலத்தில் ஜப்பானிய மொழியின் முதலாவது நெடுங்கதையான
கெஞ்சியின் கதையை அரண்மனைப் பணிப்பெண் மொனோ அத்தாரி எழுதினார். அதுவே ஜப்பானிய
மொழியில் வெளிவந்த முதலாவது நூல் என்றனர்.
இன்று அனைத்து ஆய்வேடுகளும் ஜப்பானியமொழியில் கிடைக்கின்றன.
புதிய ஆய்வேடு எந்த மொழியில் இருப்பினும் சில வாரங்களுள் ஜப்பானிய மொழிக்கு
மாற்றிவிடுவர். எனவே ஜப்பானிய வளர்ச்சிக்கு மொழி தடையாக இருக்கவில்லை.
என் ஆராய்ச்சி முடிவுகள் ஜப்பானிய மொழியில் வெளியாகின.
ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தேன். ஜப்பானிய மொழியிலும் சேர்த்து அவர்களின்
ஆய்வேட்டில் வெளியிட்டனர்.
ஜப்பானில் ஆறு மாதப் பயிற்சி முடிந்து நாடு திரும்புகையில், மலேசியா வழியாக வந்தேன். அங்கே நான்கு நாள்கள் உறவினர்களுடன்
தங்கினேன்.
கோலாலம்பூரிலிருந்து தொடர்வண்டியில் சுங்கைப்பட்டாணி
சென்றேன். தமிழனின் வரலாற்றுத் தடம் பதிந்த கடாரத்தைப் (இன்றைய கெடா மாநிலம்)
பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அங்கே சென்றேன். அப்போது, சிறிய ஊராகத்தான் இருந்தது.
கடாரத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிட்டேன்.
கோலாலம்பூர் மீண்டு, கொழும்புக்குத் திரும்பினேன்.
No comments:
Post a Comment