முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 18, 2012

கணபதிச் சிற்பியார்


உலகக் கட்டடக் கலை வரலாற்றில் கணபதிச் சிற்பியார்
மறவன்புலவு . சச்சிதானந்தன்
இலங்கையில் மன்னார் மாவட்டம், மாந்தை வட்டத்தில் அமைந்தது தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சரம் கோயில்.
1964 தை, மாசி மாதங்கள். சேர். கந்தையா வைத்தியநாதன் அவர்கள் திருப்பணிச் சபைத் தலைவர். கொழும்பிலிருந்து திரு. . கந்தையா அவர்கள் உதவிக்கு வருவார். திருக்கேதீச்சரத்திலேயே தங்கிச் சேர். கந்தையா வைத்தியநாதனின் உதவியாளராகப் புலவர் திருநாவுக்கரசு அவர்கள் பணி புரிந்தார். திருவாசக மடத்தில் சரவணமுத்து அடிகளார் தொண்டு செய்து வந்தார். அக்காலங்களில் திரு. . கந்தையா அண்ணருடன் கொழும்பிலிருந்து திருக்கேதீச்சரம் சென்று மீள்வேன்.
திருவாசக மடத்துக்குக் கிழக்கே உள்ள திறந்த வெளியில் சிறு சிறு கொட்டில்கள். அங்கே தமிழ்நாட்டிலிருந்து வந்த சிற்பிகள் கருங்கல் திருப்பணியில் ஈடுபட்டு வந்தனர். பிள்ளையார்பட்டி திரு. வைத்தியநாத ஸ்தபதியார், அவர் மகன் திரு. கணபதி ஸ்தபதியார் இருவரும் அங்கு வந்து போவதும் பணிகளை மேற்பார்வை செய்வதும் வழமை.
அக்காலங்களில் பிள்ளையார்பட்டியிலிருந்தோ சென்னையிலிருந்தோ தொடர்வண்டியில் இராமேச்சரம் வந்து கப்பலில் தலைமன்னார் வந்து திருக்கேதீச்சரத்தில் இச் சிற்பிகளும் அவர்களின் உதவியாளரும் பணி செய்வர்.
அக்காலத்தில் திரு. கணபதி ஸ்தபதியாரைப் பார்த்துப் பேசி, கற்றுளிப் பணிகள் தொடர்பாக கேட்பேன். அவரும் விளக்கமான பதில்கள் சொல்வார்.
காலப்போக்கில் திரு. கணபதி ஸ்தபதியார் அவர்களின் நினைவுகள் நின்றன, தொடர்புகள் விட்டன.
200 ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழர் வாழும் நாடு சீசெல்சு. தொடக்கக் குடியேறிகளுள் ஐவர் தமிழர். ஆனாலும் அங்கு கோயில் எதையும் அவர்கள் கட்டவில்லை. 1984இல் நான் அங்கு சென்றபின்னர் தொடங்கிய இந்துக் கோவில் சங்கத்தினரை நான் ஊக்குவித்து, நிலம் வாங்கிக் கோவில் எழுப்ப முயன்றபொழுது மனத்தில் வந்தவர் கணபதி ஸ்தபதியார்.
1985இல் விடுமுறையில் சென்னை வந்த பொழுது திருக்கதேீச்சர ஆலயத் திருப்பணிச் சபைத் தலைவர் . நமசிவாயம் அவர்கள் சென்னையில் இருந்தார்கள். சீசெல்சில் கோவில் கட்டும் முயற்சியைச் சொன்னதும் மாமல்லபுரத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். முதல்வராக இருந்த திரு. கணபதி ஸ்தபதியாரைப் பார்த்து விவரம் சொன்னோம். அனைத்து ஒத்துழைப்பும் தருவாகச் சொன்னார்கள்.
1986இல் சென்னைக்குப் பெயர்ந்த பின்னர், திரு. . நமசிவாயம் அவர்களுடன் மாமல்லபுரம் செல்வதும் திரு. கணபதி ஸ்தபதியாரைப் பார்ப்பதும் எனக்கு வழமையாகின. திரு. கணபதி ஸ்தபதியார் சீசெல்சுக்குச் சென்று வந்தார்கள். வரைபடம் தயாரித்துக் கொடுத்தார்கள். 1992இல் சீசெல்சுப் பிள்ளையார் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது.
மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் தன் அலுவலகத்தை வைத்திருந்தார். அங்கும் சென்று வருவேன்.
அவரது வடிவமைப்பில் உருவான கன்னியாகுமரித் திருவள்ளுவர் சிலைத் திறப்புவிழாவில் 2000 தை 1இல் சென்று கலந்துகொண்டேன்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சிற்பியின் மரபில்வந்தவர் திரு. கணபதி ஸ்தபதியார். திராவிடக் கட்டடக் கலை நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்.
இறைவனை வழிபட எண்ணுவோர் கோயில் அமைக்க விழைவர். அவ்வடியவர்களுக்குக் கோயில் அமைப்பின் வரன்முறைகளைச் காட்டுபவர், மனத்தை ஒடுக்கி, இறைவனை நோக்கிய வழிபாட்டுக்குத் தளமும் சூழமைவும் படிக்கற்களாக்கித் தருபவர் திரு. கணபதி ஸ்தபதியார்.
தமிழர் மரபுவழி வாழ்விடங்களுள்ளும் தென்னிந்தியாவிலுமாய் முடங்கிய திருக்கோயில் வடிவமைக்கும் இன்றைய ஸ்தபதிகளின் முன்னோர்களைத் தென்கிழக்காசியாவெங்கும் அழைத்துச் சென்றவர்கள் சோழப் பேரரசினர்.
ஆங்கியே ஆட்சியிலும் சிங்களப் பேரினவாதத்தின் கொடுமை தாங்காமலும் கடந்த 200 ஆண்டுகளாகப் பூமிப் பரப்பெங்கும் புலம்பெயர்ந்து வருவோர் இன்றைய ஸ்தபதிகளை உலகெங்கும் அழைத்துச் செல்கின்றனர்.
தமிழ்ச் சைவ வைணவப் பண்பாட்டுப் பேணலின் தேடல்களும் அடையாளத்தைத் தக்கவைக்கும் முயற்சிகளும் சூரியன் மறையா நிலப்பரப்பெங்கும் தமிழ்க் கட்டடக் கலைப் பேரரசு அமைக்கத் துணைநின்றன.
நாள் மாறும் நெடுங்கோட்டின் மேற்குள்ள பிசித் தீவில் தொடங்கி, சூரியனோடு பயணித்து, நாள் மாறும் நெடுங்கோட்டின் கிழக்குள்ள அவாய்த் தீவு வரையாகப் பல நாடுகளில் சிவன் கோயில்களைத் தமிழர் அமைத்துள்ளனர்.
திரு. கணபதி ஸ்தபதியாரின் கைவண்ணம் பிசித் தீவு தொடக்கம் அவாய்த் தீவு வரை பூமிப் பந்தின் பல நாடுகளில் தமிழரின் கலை வண்ணப் பேராட்சிக்கும் இறை வழிபாட்டுத் தளங்கள் அமையவும் காரணமாயின.
காலத்தின் கொடுமை கணபதி ஸ்தபதியாரின் மறைவு. கன்னியாகுமரியில் நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை, ஆழிப் பேரலையின் வீச்சையும் தாங்கிப் புகழுடன் நிறைவதைப் போல, காலத்தின் கொடு வீச்சுகளையும் மீறித் திரு. கணபதி ஸ்தபதியாரின் புகழ் உலகக் கட்டடக் கலை வரலாற்றில் நிலைக்கும்.

No comments:

Post a Comment