முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 18, 2012

தினக்குரல் வெள்ளி விழா


விழுதுகள் விட்டு வேர் பரப்புவதாக
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
நாளிதழ் வாசகர் சந்தையே ஈடாட்டமாக அமைந்த சூழ்நிலையில் புதிய நாளிதழ் ஒன்றைத் தொடங்கலாம், வெளியிடலாம் என்ற கருத்துத் தினக்குரலாருக்கு எழுந்தது.
சுதந்திரன், தினபதி, ஈழநாடு இதழ்கள் வெளிவரமுடியாமல் கரைந்த காலத்தில், தாள் பற்றாக்குறை மற்றும் இடுக்கண்கள் நடுவே யாழ்ப்பாணக் குடாநாட்டு நாளிதழ்கள் காற்றில்லாச் சில்லில் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் துணிச்சலுடன் தினக்குரல் களமிறங்கியது.
அடர்த்திச் சந்தையான தமிழர் தாயக நிலத்தில் கடும் போர் நிகழ்ந்த காலமாதலால், தமிழர் தாயக நிலங்களுக்கு வெளியே உள்ள சொரியல் சந்தையைத் தினக்குரல் முதல்நிலைத் தளமாக்கியது.
ஏற்கனவே புழக்கத்தில் இருந்த மக்கள் மயமான நாளிதழ்களின் சாயலைப் புறந்தள்ளி, வேறுபட்ட கருத்தோட்டத்தையும் செய்தி வழங்கலையும் பதிப்பாசிரியக் கொள்கையையும் கொண்டிருந்ததால் தினக்குரலுக்கு இந்தச் சொரியல் சந்தைக்குள் நுழையும் நீக்கல் கிடைத்தது.
அடர்த்திச் சந்தையான தமிழர் தாயகத்துள் நுழைவதில் கடும் சிக்கல்கள். படைக் கருவி எடுத்தோரெல்லாம் மிரட்டுவது ஒருபுறம், நெடுஞ்சாலைகள் மூடிய நிலை மறுபுறம், ஆளாளுக்குத் தணிக்கை விதிகளைத் துப்பாக்கி முனையில் தந்தது மற்றொருபுறம், நிதிவளங்களின் பற்றாக்குறை இன்னொரு புறம், இந்தச் சில்லெடுப்புகளை மீறித் தமிழர் தாயகச் சந்தைக்குப் புறத்தே வாசகர் பரப்பைத் தினக்குரல் விரிவாக்கியது.
தமிழ் அடையாளங்களை வெளிப்படுத்துவதே குற்றமாகக் கொள்ளக்கூடிய புறச்சூழல். இலங்கை முழுவதுக்குமான தேசிய அடையாளங்களையே வெளிப்படுத்தவேண்டுமென்ற அளவுக்குமீறிய அழுத்தங்கள்.
தமிழ்த் தட்டச்சு, பக்கமாக்கல், மெய்ப்புப் பார்த்தல் போன்ற அச்சுமுன் பணிகளுக்கு ஆட் பற்றாக்குறை.
தமிழ் இதழ்களின் வரலாற்றில் முன்னெப்பொழுதுமில்லா நெருக்கடிகளின் நடுவே தினக்குரல் இடைவிடாமல் வெளிவந்துகொண்டிருந்தமை வரலாற்றுப் பதிவுக்குரிய நிகழ்வே.
1841இல் உதயதாரகையின் வரவுடன், அச்சிட்ட தமிழ் இதழ் வரலாறு இலங்கையில் தொடங்குகிறது. 1932இல் தினகரன் வெளிவரத் தொடங்கிய காலம் வரை 102 இதழ்கள் வெளிவந்ததற்கான பட்டியலைத் தினகரன் ஆசிரியராக இருந்த கலாநிதி இ. சிவகுருநாதன், தனது இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி (1993 பதிப்பு) என்ற மிக அருமையான நூலில் குறிப்பிட்டுள்ளார்.
1930க்குப் பிந்தைய வரலாற்றை எழுதுவோர் தினக்குரலின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி விரிவாக எழுதுவர்.
எரிப்பார்கள், ஏசுவார்கள், உண்மையை எழுதுங்கள், உண்மையாகவே எழுதுங்கள் என்பது யோகர் சுவாமியின் வாக்கு.
இந்த வாக்கை எடுத்தாண்ட மூத்த பதிப்பாசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை. வெளியேறாமல் இருந்தவர்களுட் பலர் வெளியேறும் வாய்ப்பு வரும் வரை இதழ்களுக்காக உழைத்தார்கள்.
தினக்குரலின் ஆசிரியர் குழாம் மிக நிதானத்துடன் செய்தியையும் கருத்துரையையும் வெளியிட்டு வருகின்றனர். சலசலப்பையும் பரபரப்பையும் கருத்துப் புனைவையும் புறந்தள்ளிய பொறுப்புணர்வு தினக்குரல் பதிப்பாளருக்கும் ஆசிரியர் குழாமுக்கும் இருந்ததால், பயனுள்ளதாய் வளர்ச்சிக்குரியதாய் கருத்தூட்டங்களின் விளைச்சல் நிலமாய்த் தினக்குரல் தமிழ்ச் சமூகத்தை வளப்படுத்தி வருகிறது. 
ஆசிரியர் குழாமுக்கு உரிய தகைமைகளை எழுத்தாளர் - பதிப்பாளர் வரதர், பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு (2003 பதிப்பு) நூலின் அணிந்துரையில் பின்வருமாறு கூறுவார்.
பலரையும் அனுசரித்துப் போதல், ஒவ்வொருவரையும் சரியாக இனம் கண்டுகொள்ளல், சமயோசித புத்தி, நேர்மை, அஞ்சாமை, ஒரு கதாசிரியனைப்போல் வர்ணிக்கும் திறன், எடுத்த எடுப்பிலேயே செய்திகளுக்குக் கவர்ச்சிகரமாகத் தலைப்புகள் போடும் திறன், இப்படியான திறமைகள் பத்திராசிரியர்களுக்கு இருக்கவேண்டும் என்பார் வரதர்.
யோகர் சுவாமியோ வரதரோ சொன்னவைகளை முழுமையாகக் கடைப்பிடித்தவர்கள் என்ன ஆனார்கள்? எங்கே போனார்கள்? எத்தனைபேர் இன்னமும் இலங்கைக்குள் வாழ்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டால், தினக்குரல் ஆசிரியர் குழாத்தின் அருமை புரியும்.
யோகர் சுவாமிகள் மற்றும் வரதர் கூறிய இலக்குகளுக்கு ஊனம் இன்றி, வாசகரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ஊடகங்களுக்குரிய கடும் அழுத்தங்கள் நடுவே, பதினைந்து ஆண்டுகள் வாசகர் பரப்பில் வனப்புமிக்க இதழாகத் தினக்குரல் வெளிவந்து தமிழ்ச் சமூகத்தின் பன்முகத் தேவைகளுக்கும் வளர்ச்சிக்கும் அடியுரமாகப் பணியாற்றி வருகிறது.
சொரியல் சந்தையுள் தொடக்கத் தளம் அமைத்த காலம் மாறி, அடர்த்திச் சந்தைக்கான தனிப் பதிப்பையும் வெளியிட்டு, உலகெங்கும் பரந்த தமிழருக்காகவும் எணினி வழி வாசகருக்காகவும் மின் இதழையும் தந்து, தினக்குரல் ஆற்றிவரும் பங்கு அளப்பரியது.
தொய்வின்றித் தளர்வின்றி, ஈடாட்டமின்றி உறுதி குன்றாது குலையாது பதினைந்து ஆண்டுகள் ஆற்றிய பணியின் வேகம் மேன்மேலும் வளர்ந்து ஆல் போல் தினக்குரல் விழுதுகள் விடுவதாக, அருகுபோல் தினக்குரல் வேர் பரப்புவதாக.    




No comments:

Post a Comment