முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 18, 2012

மழவிடையாரும் பழவடியாரும்


மழவிடையாரும் பழவடியாரும்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

குடும்பப் பெயர்கள். மேலை நாட்டில் உண்டு, தமிழ் நாட்டில் மிகக் குறைவு. 

கோத்திரம் என்ற சொல்லின் பின்னால் குடும்பப் பெயர்கள் மறைகின்றன. 

குலம் என்ற சொல்லும் உண்டு. குலை குலையாக உள்ளதால் பல குலங்கள், ஒரே குலையில் உள்ளதால் ஒரு குலம்.

ஒரு குலத்தவர் தமக்குள்ளே மணம் செய்து குலத்தைப் பெருக்குவர். மாமன் மகள், அக்கா மகள் என ஒன்றுக்குள் ஒன்றாகத் திருமணம் செய்வதால் சொத்து யாவும் அதே குலத்துள் தொடரும். மரபுகளும் தொடரும்.

சிவபெருமானுக்கு அடிமையாக உள்ளமையை மரபாக்கும் குடும்பங்கள் தமக்குள்ளேயே திருமணம் செய்வதால் பழைய அடியார் வழியில் புதிய அடியார் எனச் சைவ மரபு தழைத்ததாம்.

1200 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் இந்தச் செய்தியைக் கூறினார். சுந்தரர் காலத்துக்குப் பின்னர், கண்டராதித்த சோழர் காலத்துக்கு முன்னர் சிதம்பரத்தில் வாழ்ந்தவர் சேந்தனார்.

திருவாரூரிலே வாழ்ந்த குலம் ஒன்றாத் தன் திருப்பல்லாண்டிலே குறிப்பிடுகிறார்.  

சிவபெருமானுக்குப் பரம்பரை பரம்பரையாக அடிமையாய், தத்தமக்குள்ளேயே திருமணம் செய்துகொள்கின்ற அடியவர் குடும்பங்களில் பிறந்த பழ அடியாரோடும் கூடி எம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்கிறார். 

குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி
எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி
மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்
மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. (09029011)
என்ற பாடலில் மழவிடையார் என்ற தொடர் வருகிறது.

மழவிடையார் என்ற குலத்தினர், திருவாரூரில் சிவபெருமானுக்கு அடிமைசெய்த குலத்தவர் என்கிறார் சேந்தனார். 

மழவிடையார் எனில் இளைய காளையை வாகனமாக உடைய சிவபெருமான எனப் பொருள் கொள்வாரும் உளர். 

மழவிடையார் குடிப்பிறந்த பழவடியார் என்கையில் முன்னது குலப்பெயராகுதலே பொருந்தும்.

மழவிடையார் குலத்தவர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். வழிவழி அடியவராய் வாழ்ந்து வருகின்றனர்.

திருவாரூரில் இருந்து இவர்களுட் சிலர் வடக்கே பெயர்ந்தனர். திருவெண்பாக்கம் வந்தனர். பாடல் பெற்ற அக்கோயில் அருகே வாழ்ந்தனர்.

சென்னைக்கு நீர்த் தேக்கமாகப் பூண்டியை அமைத்தனர். திருவெண்பாக்கம் திருக்கோயில் நீரில் மூழ்கியது. அருகே வேறு ஒரிடத்தில் கோயிலைப் பின்னாளில் அமைத்தனர்.

திருவெண்பாக்கத்தில் வாழ்ந்த மழவிடையார் குலத்தினர்பூண்டி நீர்த்தேக்கம் அமைத்த காலத்தில்  மேற்கே கடம்பத்தூரில் குடியேறினர்.

நேற்று (04. 05. 2012) மாலை அம்பத்தூரில் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி. தன் மகள் செல்வி மகாலட்சுமியின் நடன அரங்கேற்றத்தைக் காண வருமாறு பேராசிரியர் சவகர்லால் நேரு அழைத்திருந்தார். பேராசிரியர் செயராமனுடன் சென்றிருந்தேன்.


தன் தந்தையாரைப் பேரா. நேரு எனக்கு அறிமுகம் செய்தார். முன் வரிசையில் இருந்த அவருடன் சற்று நேரம் பேசினேன். பின்னர் மூன்றாம் வரிசையில் எனதிருக்கைக்கு வந்தேன்.

சில மணித்துளிகளானதும் அப்பெரியார் என் பக்கத்தில் இருந்த இருக்கைக்கு வந்தார். என்னோடு பேசத் தொடங்கினார். நடன நிகழ்ச்சி நடைபெறாத இடைவெளிகளில் அவருடன் உரையாடினேன்.

அவருடன் பேசிய ஒவ்வொரு மணித்துளியும் மறவன்புலவில் இருந்தேன். என் தந்தையார் என் பாட்டனார் என்னுடன் பேசுவது போல உணர்ந்தேன். எனக்கும் அவருக்கும் எங்கோ ஓர் உறவுப் பாலம் இருப்பதை உணர்ந்தேன். புளகம் கொண்டேன்.

புலர் காலை 4 மணிக்கே எழுவார். பூந்தோட்டம் போவார். பூப்பறிப்பார். மாலை தொடுப்பார். கோயிலில் கொடுப்பார். புலர்ந்ததும் உழவாரப் பணி. திருவாசகத்தை மெயுருகப் பாடுதல். திருமுறைகளை ஓதுதல். முறையான இசைப் பயிற்சி பெறாவிட்டாலும் இசை நாடாக்களை வாங்கி, பண்ணிசை கற்று நெக்குருகப் பாடும் வழமை.

வேண்டேன்புகழ்
வேண்டேன் செல்வம்,
வேண்டேன் மண்ணும் விண்ணும்,
வேண்டேன் பிறப்பிறப்பு,
சிவம் வேண்டார் தமைநாளும் தீண்டேன்,
சென்று சேர்ந்தேன்,
மன்னு திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன்,
புறம் போகேன்,
இனிப் புறம்போக லொட்டேனே.  (08134007) 
என்ற திருவாசகத்தால் தான் கட்டுண்டவர் என்றார். அந்தப் பாடலை என்னிடம் பாடிக் காட்டினார்.

வேண்டத் தக்க தறிவோய்நீ
   
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
   
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
   
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
   
அதுவும் உன்றன் விருப்பன்றே. (08103006)
என்ற திருவாசக வரிகளே தன் வாழ்வியல் அணுகுமுறை என்றார்.

பேரா. நேருவின் மகள் செல்வி மகாலட்சுமியின் பரத நாட்டியம் கலை விருந்து. பேரா. நேருவின் தந்தையார் திரு. முனுசாமி அவர்கள் அருகில் இருந்து எனக்கு ஊட்டியது வாழ்வியல் விருந்து. பேரா. நேரு, பேரா. செயராமன் போன்ற சான்றோர் பெருமக்களடனான தொடர்பு என் வாழ்வின் பேறு.

அந்த உரையாடலிடையே என் வினாக்களுக்கு விடையாகச் சொன்னவையே மழவிடையார் குலச் செய்திகள்.

1200 ஆண்டுகளுக்கு முன், சேந்தனார் செய்தி சொல்லும் காலத்துக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, சிவபெருமானுக்குப் பழ அடியாராக வாழ்ந்த மழவிடையார் குலத்தைச் சேர்ந்த அடியவருக்கு நேற்றைய நாள் (04. 05. 2012) விரும்பி அடியவனானேன்.
https://mail.google.com/mail/images/cleardot.gif

No comments:

Post a Comment