முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 18, 2012

நாள் முழுவதும் உணர்ந்து ஓதுவோர் உலகெலாம்


நாள் முழுவதும் உணர்ந்து ஓதுவோர் லகெலாம்
மறவன்புலவு . சச்சிதானந்தன்

1800 நாள்மாறும் நெடுங்கோட்டுக்குக் (International Date Line) கிழக்கே அவாய்த் தீவு. அங்கே நாள் நேற்று.
நாள்மாறும் நெடுங்கோட்டுக்குக் கிழக்கே பிசித் தீவு. அங்கு நாள் இன்று.

178.300கி. பிசித் தீவில் (Fiji Islands 17.420தெ.) தென் இந்திய ஐக்கிய சன்மார்க்க சங்கத்தினர் கட்டி எழுப்பிய அழகிய முருகன் கோயில். வானோங்கும் வாயில் கோபுரம். காலை 0600 மணிக்கு வழிபாடு. தேவார திருவாசகங்கள், முருகன் பாடல்கள் எனச் சூரியனை வரவேற்கும் காலை வழிபாடு. ஓரிலட்சம் தமிழர் சார்பில் வழிபாடு.

பூமிப் பந்தில் நாள் தொடங்கும் பொழுதே சிவவழிபாட்டுத் தமிழ் ஒலிக்கிறது, தமிழர் சூரியனை வரவேற்கின்றனர். சிவனை வழிபடுவதால் எம்பெருமானின் வாழ்த்தும் அருளும் உயிரினங்களுக்காகிறது.

174.450கி. ஓக்லாந்து (Auckland, New Zealand, (36.300தெ.) நகரில் சூரியன் தமிழ் வழிபாட்டை ஏற்கிறார். நியுசீலாந்தின் வடதீவில் ஓக்லாந்து நகரம் அங்கே அழகிய பிள்ளையார் கோயில். வெலிங்ரன், தென்துருவத்தை அண்மித்த கிறைசுற்சேர்ச்சு என, நியுசீலாந்தில் 15,000 தமிழர் வாழுமிடமெங்கும் சிவனுக்குத் தமிழை இசைத்து வழிபடுவர்.

166.270கி. நூமியாவின் ( Noumea, Vanuatu, 22.160தெ.) நிக்கல் உலோகச் சுரங்கங்களில் பணிபுரிய வனவத்து நாடு வந்த தமிழர், கோயில் அமைத்து வழிபடுவர். தேவார திருவாசகங்களை ஓதும் 10,000 தமிழரின் வழிபாட்டை ஏற்பர் 8 பாகை கடந்து வரும் சூரியன்.

144.570கி. மெல்போண் நகரில் (Melbourne, Australia, 37.480தெ.) நான்கு கோயில்களில் தேவார திருவாசகங்களை ஓதி காலை 0600 மணிக்கு, ஆத்திரேலியாவின் 60,000 தமிழர் சார்பில் சூரியனை வரவேற்கிறார்கள்.
151.000கி. சிட்னியில் முருகன் கோயிலில் (Sydney, 33.520தெ.),
153.100கி. பிறிசுப்பேன் (Brisbane, 27.280தெ.),
138.350கி. அடிலாயிடு (Adelaide, 34.550தெ.),
130.500கி. இடார்வின் (Darwin, 12.270தெ.)
115.510கி. பேர்த்து (Perth, 31.570தெ.) எனப் பூமிப் பந்தின் சுழற்சியால் சூரியன் உதிக்கும்போதே அங்குள்ள பல கோயில்களிலும் வரவேற்புத் தொடர்கிறது. தேவார திருவாசகங்களுடன் சைவத் தமிழர் வழிபடுவர்.

மலேசியாவில் வாழும் 25 இலட்சம் தமிழர் சார்பில் சரவாக்கு (Sarawak, Malaysia) மாநிலத்தில் தேவார திருவாச வழிபாட்டுடன் நாள் தொடங்குகிறது.
110.200கி. குச்சிங்கு (Kuching 1.310.) மாரியம்மன் கோயிலில் தேவார திருவாசகம் ஓதி மலேசிய நாளைத் தொடங்குவர்.
110.200கி. சொக்சகர்த்தாவில் (Jogjakarta, Java, Indonesia, 7.470தெ.) தெற்கே, பெரும்பாணன் கோயிலில் 600 ஆண்டுகளுக்கு முன்பு தேவார திருவாசகங்களைப் பாடினர், பரவினர். அக் கோயிலில் இன்று வழிபாடு எதுவும் நடைபெறுவதில்லை.
100.000கி. பினாங்கு (Penang, 5.150.) நகர் வரை மலேசியாவில் உள்ள ஆயிரத்துக்கும் கூடுதலான கோயில்களில் தமிழில் வழிபாடு.

100.280கி. பாங்கொக்கு (Bangkok, Thailand,13.430.) தொடக்கம் தாய்லாந்தின் தெற்குக் கிரா நிலஇடுக்கு (Isthmus of Kra) வரையுள்ள கோயில்களில் தமிழில் இசைத்து வழிபடுவர். தாய்லாந்தின் அரசகுரு, கிரந்தத்தில் தமிழை எழுதித் திருமுறைகளை ஓதுகிறார். பாங்கொக்கு மாரியம்மன் கோயிலில் தாய்லாந்து நாட்டவரும் சில ஆயிரம் தமிழரும் திருமுறைகளை ஓதி, நாளைத் தொடங்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி.

103.490கி. சிங்கப்பூரில் (Singapore, 1.210.) வாழும் ஏழு இலட்சம் தமிழர், அங்குள்ள கோயில்களில் காலை சூரிய உதயத்தைத் தேவார திருவாசகம் மற்றும் திருமுறைகள் இசைத்து வழிபட்டு வரவேற்பர்.

98.60கி. மவுலாமீன் (Mawlamyine, Myanmar, 14.80.) மியம்மாவின் தண்ணிக்கரை மாநிலத் தலைநகர். காலை 0600 மணிக்குத் தேவார திருவாசகங்களை மியம்மா வரிவடிவத்தில் எழுதி ஓதும் தமிழ்க் குழந்தைகளின் பத்தி நிலை கண்ணீரை வரவழைக்கும்.
95.130கி. பியேய் நகரில் (Pyey, 18.490.) மார்கழி மாதத்தில் திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவைப் பாடல்களுடன் புலர்காலை 0300 மணிக்குத் தெருவெங்கும் வலம் வந்து தமிழ் முழங்கும் இளைஞர்களின் கூட்டத்தின் பத்திநிலை மெய் சிலிர்க்கும். மியம்மாவின் ஏழு இலட்சம் தமிழர்கள் வழிபடும் பலநூறு கோயில்களின் பூசகர் யாவரும் திருமந்திரம் 510ஆம் பாடலிற்கு அருணைவடிவேலுமுதலியார்ரின் உரை கூறும் வழியில் பயின்று வந்தோரே.

98.400கி. மேடான் (Medan, Sumatra, Indonesia, 3.350.) நகரில் வாழும் 40,000 தமிழர் புலர் காலையில் சூரிய உதயத்தை வரவேற்றுத் தமிழ் இசைத்து வழிபடுவர். இந்தோனீசியாவின் சாவகத்தில் வழிபாடற்ற, பெரும்பாணன் சிவன் கோயிலை முன்பு பார்த்தோம்.

92.430கி. பிளேர் துறை ( Port Blair, Andamans, India, 11.370. நக்காவரத்தின் தலைநகர். அங்கு பல நூற்றாண்டுகளாக வாழும் தமிழர், கோயில்கள் பல அமைத்துத் திருமுறைகளை முறையாக ஓதி வழிபட்டு வருகின்றனர். ஒன்பது கோடித் தமிழரின் தாயகமான இந்தியா, தமிழிசையுடன் சூரிய உதயத்தை வரவேற்கிற நகரமே பிளேர் துறை.
12 பாகை கடந்து தமிழ்நாட்டில் தமிழிசையுடன் சூரியன் உதிக்கிறான்.
72.520கி. மும்பையில் (Mumbai, 19.40.) தமிழர்கள் பத்தி சிரத்தையுடன் தமிழ் இசைத்துச் சூரிய உதயத்தை வரவேற்பர்.

81.490கி. கல்முனையில் (Kalmunai, Sri Lanka, 7.250.) தொடங்கி, 79.250கி. கச்சதீவு (Kachativu, 9.150.) வரை, சூரியனைத் தமிழோடு இசை பாடி, இரண்டாயிரத்துக்கும் கூடுதலான கோயில்களில் இலங்கையில் இன்று வாழும் முப்பது இலட்சம் தமிழர், காலை 0600 மணிக்கு வழிபடும் வழமை வரலற்றுக்கு முற்பட்ட காலத்துக்குரியது.

57.330கி. மொரிசியசு (Port Louis, 20.200தெ.) உலூயித் துறை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் தமிழ்க் கோயில் கூட்டமைப்பினர் நடத்தும் 50க்கும் கூடுதலான கோயில்களில், திருமுறைகள் தொடக்கம் காவடிச் சிந்து வரை தமிழை இசைத்துச் சூரிய உதயத்தை ஓரிலட்சம் தமிழர் வரவேற்பர்.

55.180கி. அமீரகம் (United Arab Emirates, 25.150.) மூன்று இலட்சம் தமிழர், நான்கு அல்லது ஐந்து கோயில்கள்,
55.290கி. சீசெல்சு (Seychelles, 4.400.) ஐம்பதினாயிரம் தமிழர், ஒரு கோயில்,
55.320கி இறியுனியன் தீவு (Reunion Is., 21.60தெ.) ஆறு இலட்சம் தமிழர், 50க்கும் கூடுதலாகக் கோயில்கள், இக்கோயில்களில் காலையில் சிவன் மீது தமிழோடு இசைபாடி சூரிய உதயத்தை வழிபடுவர்.

39.400கி மொம்பாசா (Mombasa, Kenya, 4.20தெ.) பல மண்டபங்களுடன் அமைந்த மிகப் பெரிய சிவன்கோயிலை அங்கு பெரும்பான்மையாக வாழும் வட இந்தியர்கள் கட்டியுள்ளனர். அந்த நகரில் வாழும் விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழர் அக்கோயில் செல்வர். தமிழோடு இசை பாடுவர்.

31.100கி. இடர்பன் (Durban, South Africa, 29.510தெ.) தொடக்கம் 18.250கி. நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope, 33.550தெ.) வரை தென்னாபிரிக்காவில் பல நூறு கோயில்களில் திருமுறைகளை ஓதி வழிபட்டுப் புலர் காலையில் சூரிய உதயத்தைக் காண்போர் பதினைந்து இலட்சம் தமிழர்.

28.280கி. உலுசாக்கா (Lusaka, Zambia, 15.250தெ.) நகரில் அம்மன் கோயிலில் நடபெறும் காலை வழிபாட்டில் திருமுறை ஓதும் தமிழர் பலராவர்.

18.300கி. சுவீடன் (Sweden, 60.70.), வடதுருவத்துக்கு அண்மையில் இருந்து மேற்காகப் பிரித்தானியாவில் உள்ள 3.470மே. வேல்சு (Wales, United Kingdom, 52.70.) வரை, ஐரோப்பாவெங்கும் நூற்றுக் கணக்கான கோயில்களில் திருமுறை இசை கேட்கும் காலை வேளைகள் சூரிய உதயத்தை வரவேற்பன. ஐரோப்பிய நகரத் தெருக்களில் சிவனை ஏற்றிய தேர்கள் ஆண்டுக்கொருமுறை உலா வருகின்றன. ஐரோப்பாவின் 30 நாடுகளில் வாழும் நான்கு இலட்சம் தமிழரின் வாழ்வுடன் பிணைந்த வழமைகளாகி வருகின்றன திருமுறைத் தமிழிசை வழிபாட்டு முறைகள்.

56.10மே. சுரினாம் நாட்டில் (Suriname, 3.550தெ.) தென் அமெரிக்காவில் தமிழ் கேட்டு உதிக்கும் சூரியனை, கரிபியனிலும், கனடா உள்ளிட்ட வட அமெரிக்காவிலும் வாழும் பன்னிரண்டு இலட்சம் தமிழர், தாம் அமைத்த நூற்றுக்கணக்கான கோயில்களில் 125.000மே. நெடுங்கோடு வரை, தமிழோடு இசை பாடி வழிபட்டு வரேவற்பர்.

155.600மே. அவாய்த் தீவில் (Hawaii, United States of America, 19.900வ.) சிவன் கோயிலில் தவத்திரு சுப்பிரமணிய சிவாயவின் அடியவர்கள் திருமுறைகளைப் பத்தியுடன் பாடி வழிபடும் இசைகேட்ட நெகிழ்ச்சியுடன் தன் 24 மணி நேரச் சுழற்சியைப் பூமித் தாயார் சூரியனுக்குக் காட்டி மகிழ்கிறார் போலும்.

பிசித் தீவில் தமிழ்கேட்டு, சிவனைப் போற்றும் பாடல் கேட்டு உதித்த சூரியன், பூமிப் பந்தின் சுழற்சியில், காணும் நிலமெங்கும் இடைவிடாது தமிழைக் கேட்டவாறு ஒளி பெருக்கி அவாய்த் தீவிலும் கேட்டவாறு உலகெலாம் உணர்ந்து தமிழை ஓதுவாருக்கு வாழ்வளிக்கிறான், வளம் பெருக்குகிறான். மேன்மைகொள் சைவநீதி உலெகலாம் விளங்கும் காலமாகியது. அசைவில் செழுந் தமிழ் வழக்கு உகெங்கும் அனைத்து வழக்காருக்கும் தெரியும் காலம் வந்தது.

இமய வரம்பராகிய மன்னர்கள் வாழ்ந்த காலம், கடாரம் கொண்ட மன்னர்களின் காலமாகியது. இன்றோ பூமிப் பந்தின் மூலை முடுக்கெல்லாம் பரந்து வாழும் உலகமயமாகிய தமிழரின் காலமாதல், மனித வளர்ச்சியின் பேறு, இயற்கையின் அருங்கொடை, இறைவனின் இன்னருள்.

No comments:

Post a Comment