முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 18, 2012

மியம்மாவில் தமிழர்


மியம்மாவில் தமிழர்
மறவன்புலவு . சச்சிதானந்தன்
(12.11.2011 தொடக்கம் 20.11.2011 வரை மியம்மா நாட்டில் பயணித்துத் திரட்டியன)

என் பெயர் வேலாயுதம்.
இல்லை, இல்லை, என் பெயர் மிங்கு மிங்கு உலூன்.
நான் சிவன் கோயிலுக்குப் போகிறேன்.
இல்லை இல்லை, சிவன் கோயிலுக்கும் புத்த கோயிலுக்கும் போகிறேன்.”
ஏன் இந்தக் குழப்பம்? என்ன ஆயிற்று இந்தத் தமிழ் மகனுக்கு?
இந்தத் தமிழ் மகனுக்கு மட்டுமன்று, மியம்மாவில் வாழும் ஏறத்தாழ எட்டரை இலட்சம் தமிழ் மக்களுக்கும் இந்தக் குழப்பம் உண்டு.
இலங்கைத் தீவின் பரப்பளவு போன்று பத்து மடங்கு பரப்பளவு கொண்ட நாடு மியம்மா.
தமிழ்நாட்டின் பரப்பளவைப் போன்று மும்மடங்கு பரப்பளவு கொண்ட நாடு மியம்மா.
 1983க்குப் பின்னர் மக்கள்தொகைக் கணக்கெடுக்காத நாடு. ஆனாலும்  அங்கு 6 கோடி மக்கள் வாழலாம் என்கின்றனர் உலகக் கணிப்பாளர்.
இவர்களுள் 2% (12 இலட்சம்) இந்திய மரபினர் என்கிறது மியம்மா அரசு.
15 இலட்சம் இந்துக்கள் அங்கு வாழ்வதாக, மியம்மா இந்து மகா சபை கணித்துள்ளது.
இவர்களுள் 8.5 இலட்சத்தினர், தமிழ்-இந்து மரபினர் என்கின்றனர், மியம்மா தமிழ் இந்துப் பேரவையினர். எஞ்சியோர், ஒடியர், வங்காளிகள், பஞ்சாபியர் என்போர்.
கச்சின்                    15,000
சகாயிங்கு               15,000
சீனா                       15,000
மண்டலே               40,000
சான்                       10,000
அரக்கன்                 25,000
மக்குவே                 10,000
கயா                        15,000
பக்கோ                   75,000
ஐராவதி                  75,000
யாங்கோன்            400,000
காயின்                   10,000
மொன்                    75,000
தண்ணித்தரை        75,000
மொத்தம்                855,000

மியம்மா என்ற பெயர் 1989 முதலாக வழக்கத்துக்கு வந்தது. அந்த நாட்டிற்கு ஆங்கிலேயர் வைத்த பெயர் பர்மா. ஆங்கிலேயர் தலைநகருக்குத் தந்த பெயர் இரங்கோன்; தலைநகரின் இன்றைய பெயர் யாங்கோன். இவ்வாறு ஆங்கிலேயர் வைத்த இடப் பெயர்களை மியம்மாப் பெயராக்கி வருகிறது, இன்றைய அரசு.
காழகம் எனப் பட்டினப்பாலை குறிக்கும் பெயரே மியம்மாவுக்குத் தமிழர் தந்த பெயராகும் என்பாரும் உளர். தமிழருக்கும் மியம்மாவுக்கும் வரலாற்றுக்கு முந்தைய காலத் தொடர்பு.
வங்காள விரிகுடாவின் வடக்கெல்லைக் கரையோரம் மியம்மா நாடு. தென்மேற்குக் கரையோரம் தமிழகம்.   தோராயமாக 2000 கிமீ. கடல் வழிப் பயணத் தொலைவு.
வாடைக் காற்றுடன் வரும் வங்காள விரிகுடாவின் வலசை நீரோட்டம் மிதக்கும் பொருள் எதையும் மியம்மாக் கரையிலிருந்து தமிழகக் கரைக்கு ஓரிரு நாளில் இழுத்து வந்து சேர்த்துவிடும். அவ்வாறே, தென்றல் காற்றுடன் செல்லும் இடசை நீரோட்டம் தமிழகக் கரையிலிருந்து மிதக்கும் பொருள் எதையும் ஓரிரு நாளில் மியம்மாவுக்கு இழுத்துச் சென்று சேர்த்துவிடும்
மணிமேகலைக் காப்பிய ஆதிரையின் கணவன் சாதுவன், கப்பலுடைந்து  நக்காவரத்தில் கரை ஒதுங்கிய செய்தி உண்டு. கங்கை முகத்துவாரத்திலிருந்து, பாய்மரமில்லாப் படகுகளில், நக்காவரம் வழி இலங்கைக்கு வந்த  விசயனின் செய்தியும் மகாவமிசத்தில் உண்டு. இவை வங்காள விரிகுடா நீரோட்டத்தின் விளைவுகள்.
10ஆம் நூற்றாண்டில் இராசேந்திரன் இருமுறை படையெடுத்துச் சென்ற வரலாறு மியம்மாவின் பக்கோ நகரில் கல்வெட்டாக இன்றும் காட்சி  தருகிறது.
பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் வடிவமைந்த மியம்மா மொழியின் வரிவடிவங்களின் தாய், தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் உருவான கிரந்த வரிவடிவம். மியம்மா மொழியின் எழுத்துகள் பல, தமிழ் வரிவடிவச் சாயலுள்ளவை. நெடுங்கணக்கும் தமிழ் நெடுங்கணக்குச் சாயலில்; ஒலிக்குறிகளும் தமிழ் ஒலிக்குறிகளின் சாயலில்.
மியம்மா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகள், தமிழகத்தைப் போலவே சித்திரை முதல் நாளைப் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொள்கின்றன. நிலவுப்பெயர்ச்சி நாட்காட்டியைப் பின்பற்றுகின்றன. தமிழத்திலிருந்து சென்ற ஆகம விதிகள் தெரிந்த சிவாசாரியார்களை  அரச குருக்களாகக் கொள்கின்றன. முடிசூடல், புத்தாண்டுப் பிறப்பு போன்ற நிகழ்வுகளில் சிவாசாரியார்களே சடங்குகளைச் செய்கின்றனர்.
இந்த நாடுகள் புத்த சமயத்தைக் கைக் கொள்வன. தேர்ந்தோர் கொள்கை என்ற தேரவாதப் பிரிவு இந்த நாடுகளில் ஏற்றுக்கொண்ட புத்தப் பிரிவானாலும், புத்தாண்டு போன்ற நிகழ்வுகள், காது குத்துதல், திருமணம் போன்ற வீட்டு நிகழ்வுகளுக்குச் சிவாசாரியர்களையே மக்கள் அழைப்பர்.
இச்சிவாசாரியார்கள் ஆருடம் கூறுபவர்களாகவும் பஞ்சாங்கம் கணிப்பவரர்களாகவும் தென்கிழக்காசிய மக்களிடையேயும் அரண்மனைகளிலும் பயன்படுவர். மியம்மா நாடு இதற்கு விதிவிலக்கல்ல.
வரலாற்றுப் பின்னணியுடன் தமிழக மியம்மாத் தொடர்புகள் நீண்டாலும், அண்மைய மியம்மாத் தமிழரின் வரலாறு ஆங்கிலேய ஆட்சியுடன் தொடங்குகிறதுமியம்மா-ஆங்கிலேயருக்கிடையே 1824, 1852, 1885 ஆகிய மூன்று போர்கள் நடைபெற்றன. முதலாவது போரில் மேற்கு மியம்மா, இரண்டாவது போரில் தெற்கு மியம்மா, மூன்றாவது போரில் வடக்கு மியம்மா  எனப் படிப்படியாக, மியம்மா, ஆங்கிலேயரிடம் வீழ்ச்சியைடந்தது.
1826 தொடக்கம் தமிழர், மியம்மாவுக்குள் ஆங்கிலேயருடன் குடியேறினர். 1852இற்குப் பின்னர், தெற்கு மியம்மாவில் ஐராவதிப் பாசனச் சமவெளியும் தென்கிழக்கே புன்செய் நிலங்களும் நெற்செய்கைக்காகத் திறந்தன. தமிழகத்திலிருந்து தமிழர் விரைந்து சென்று அந்த நிலங்களில் வேளாண் கூலிகளாயினர். அக்காலத்தில் வணிகராகச் சென்ற நகரத்தார், அடுத்த 100 ஆண்டுகளுக்கு மியம்மாவின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாயினர்.
ஏறத்தாழ 185 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணி, இன்றைய (2011) மியம்மாத் தமிழருக்கு உண்டு. ஆறு தலைமுறைகளாக அண்மையத் தமிழர் வாழ்வு மியம்மாவில் தொடர்கிறது.
அசோக மன்னரின் கல்வெட்டுகளில் பொன்விளையும் பூமி என்ற பெயர் கொண்ட மியம்மா, தமிழரின் உழைப்பால், 20ஆம் நூற்றாண்டில், ஆங்கிலேயப் பேரரசின் நெற் களஞ்சியப் பூமியாயிற்று. இரத்தத்தையும் வியர்வையையும் ஈந்த தமிழ்ப் பெருங்குடி மக்களே ஐராவதிப் பாசன நிலங்களையும் தென்மேற்குப் புன்செய் நிலங்களையும் நெற் களஞ்சிய நிலங்களாக்கினர்.
1826இல் மியம்மாவுக்கு ஆங்கிலேயருடன் வந்த நகரத்தார் சமூகம், 1850இல் தண்ணித்தைரை மாநிலத் தலைநகரான, மவுலமீன் நகரில் தம் அலுவலகத்தை முறையாகத் தொடங்கினர்மியம்மா நிலச் சட்டத்தின் சுளிவு நெளிவுகளை  அறிந்தனர், ஒற்றிக்கும் ஈட்டுக்கும் கடன்  கொடுக்கல் வாங்கலராயினர்.
1880இல் மியம்மா முழுவதும் நகரத்தார் ஊடுருவினர், அலுவலங்கள் அமைத்தனர். 1905இல் நகரத்தார் 30 அலுவலகங்களைக் கொண்டிருந்தனர். 1930இல் இந்த அலுவலகங்களின் எண்ணிக்கை 1650 ஆக உயர்ந்தது.
 சிற்றூர் வங்கிகளாக மியம்மாவெங்கும் பணிபுரிந்தனர். வங்கிகளே செயற்படாத நகரங்கள், சிற்றூர்கள் எங்கும் செட்டியார்கள் வட்டிக்குக் கடன்கொடுத்து நெற்செய்கையை ஊக்குவித்தனர்.
வேளாண் குடிமகன் எவரும் தெற்கு மியம்மாவில் ஒரு கிமீ. எல்லைக்குள் கடன் வாங்கக்கூடிய நகரத்தார் அலுவலகத்துக்குச் செல்லமுடியும் என்ற செய்தியை மியம்மா மாகாண வங்கியியல் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியது. மியம்மாவின் வேளாண் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியதில் நகரத்தாரின் பங்களிப்பு அளப்பரியது என அந்த அறிக்கை தமிழரைப் பாராட்டியது.
1930ஆம் ஆண்டளவில் உலகப் பொருளாதார வீழ்ச்சியால் நெல் விலைகள் சரிந்தன. கடன்களைத் திருப்ப முடியாத வேளாண் குடிமக்களின் ஒற்றி நிலங்கள் நகரத்தாரிடம் சேர்ந்தன. மியம்மாவின் நிலச்சுவான்தார்களாக நகரத்தார் மாறினர்.
மியம்மாவெங்கும் நகரத்தார் அமைத்த 32 தண்டாயுதபாணி கோயில்கள் இருந்தன. வேளாண் நிலங்களில் தமிழர் பணிபுரிந்தனர். சிவன் கோயில், அம்மன் கோயில், முன்னேச்சரன் கோயில், காளி கோயில், ஊர்த் தெய்வங்கள் எனத் தமிழர் அமைத்த கோயில்கள் ஐராவதிப் பாசன நிலமெங்கும் வயல்வெளிகளில் நீக்கமற நிறைந்தன.
இரசிக இரஞ்சனி, தொண்டன் எனத் தமிழ் நாளிதள்கள் அச்சாயின. 50க்கும் கூடுதலான தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. தமிழர் உணவும் உணவகங்களும் மியம்மாவெங்கும் பரவின.
இளையான்குடியில் பிறந்த காரிம் கானி என்ற இசுலாமியத் தமிழர் மியம்மா நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தார். அரசியல் வானில் தமிழர் பலர் கொடிகட்டிப் பறந்தனர். நாடாளுமன்ற உறுப்பினராயினர். இராசன் என்பார் மியம்மா அரசியலை விட்டுச் சென்னை வந்து, 1937-1940  சென்னை மாகாண அமைச்சரவையிலும் இருந்தார்.
 1930ஆம் ஆண்டு, யாங்கோன் துறைமுகத்தில் பணிபுரிந்த தமிழர் வேலை நிறுத்தம் செய்ய, தமிழருக்குப் பதிலாக மியம்மாரிகளைப் பணிக்கமர்த்தியது ஆங்கிலேயத் தனியார் நிறுவனம். இதனால் மியம்மாரிகளுக்கும் தமிழருக்கும் இைடயே வளர்ந்த கசப்புணர்வு, கலவரமாகியது. இருநூறுக்கும் கூடுதலான தமிழரின் பிணங்கள் ஐராவதியில் மிதந்தன; கடலில் கரை ஒதுங்கின. ஆயுத பாணிகளைக் கண்டால் சுடுமாறு அரசின் நிலையானதால்  கலவரமும் ஓய்ந்தது.
இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலத்தில், 1930களின் ஈற்றெல்லையில், மியம்மாத் தலைநகர் யாங்கோனின் மக்கள் தொகையில் 53% தமிழர் எனப் பல்வேறு பதிவுகள் கூறுகின்றன.
அக்காலத்தில் மியம்மாவின் ஒன்றரைக் கோடி மக்கள் தொகையில் இருபத்தைந்து இலட்சத்தினர் (16%) தமிழர்.
இரண்டாம் உலகப்போரின் இறுதிக் காலத்தில் 1942இல் யப்பானியப் படைகள் மியம்மாவுக்குள் முன்னேறின. கடல் வழி தப்பிக்க  முடியாததால், தரை வழியாக, இந்தியாவின் வடகிழக்கு எல்லைக்குக் கால்நைடயாகத் தமிழர் தப்பிச் சென்றனர். ஏறத்தாழ ஐந்து இலட்சம் தமிழர் மியம்மாவை விட்டுப் புறப்பட்டனர் எனினும் வழியில் காடுகளுள் ஓரிலட்சம் தமிழர் வரை நோயுற்றும் பட்டினியாலும் மாண்டனர்.
யப்பானியர் 1942இல் தொடங்கிய சயாம் - பர்மா தொடர்வண்டிப் பாதை அமைப்பதில் கூலிகளாகப் பணிபுரிந்த ஓரிலட்சம் தமிழர் நோயுற்று மாண்டனர்.
1948 சனவரி 4, மியம்மாவை விட்டு ஆங்கிலேயர் வெளியேறினர். தமிழரின் துன்பங்கள் அன்று தொடங்கின. 1823க்குப் பின் குடியேறியோர் குடிமக்கள் அல்ல என்ற நிலையால் தமிழர் வாழ்வு தடம்புரண்டது.
1826 முதலாக வந்த தமிழருக்கு மியம்மா நாட்டவர் வைத்த பெயர் கலா உலுமோர். கருமைத் தோலர் என்ற பொருளுடன் இழிச்சொல்லாகவும் அப்பெயர் அமைந்தது. (சாதிக் கட்டமைப்புக் கொண்ட) குலத்தார் என்ற பெயரின் பிறழ்ச்சியே கலா என்பாரும் உண்டு.
மியம்மா விடுதலை பெற்றதும், ஆங்கிலேயர் ஆதரவுடன் வந்தோர், வாழ்ந்தோர் மியம்மாத் தேசியத்தின் எதிரிகளாயினர். கலாஉலுமோர்களான தமிழரே மியம்மாரிகளின் நேரடிப் பார்வையில்  எதிரிகள் ஆளாயினர்.
மக்களாட்சி அமைப்புகள் இருந்தவரை, குறைந்தளவு பாதிப்புடன் வாழ்ந்தவர்கள், 1962இன் படைப் புரட்சிக்குப் பின்னர் நேரடிப் பாதிப்படைந்தனர்.
1962 தொடக்கம் 1974 வரை புரட்சிப் பேரவை ஆட்சி செய்தது. பொதுவுடைமைக் கொள்கையால் தனியார் நிறுவனங்கள் அரசுடைமையாயின. நில உடமைச் சட்டங்கள் உழைப்பாளிகளுக்கே நிலத்தை உரிமையாக்கின.
1962இல் தமிழர் வெளியேறுமாறு மியம்மாப் புரட்சி அரசு நடந்துகொண்டது. மொத்த வணிகத்தையும் சில்லறை வணிகத்தையும் தமிழரிடமிருந்து கைப்பற்றி, ஆளுக்கு 175 கியாத்தைக் கொடுத்துத் தமிழ்நாட்டுக்கு பல இலட்சம் தமிழரைக் கப்பலேற்றியது. வாழ்நாள் உழைப்பை ஒரு மணிநேரத்தில் இழந்த தமிழர், ஏதிலிகளாய்த் தமிழகத்தை வந்தடைந்தனர்.
1982இன் குடியுரிமைச் சட்டம், எஞ்சிய தமிழரையும் நாடற்றவராக்கியது. மியம்மாவின் வளம் பெருக உழைத்தோர், இரண்டாந்தர மக்களாயினர். வாக்களிக்கும் உரிமை, நிலம் வைத்திருக்கும் உரிமை, தொழில் தொடங்கும் உரிமை, அரசுப் பணியாளராகும் உரிமை, படையில் சேரும் உரிமை என அடிப்பைட மனித உரிமைகளற்ற நடைப்பிணங்களான  தமிழரே, 1962க்குப் பின் மியம்மாவில் வாழ்ந்தனர். அவர்களின் இயற்கையான பெருக்கமே இன்றைய ஏழு இலட்சம் தமிழர்.
தென்கிழக்குப் புன்செய் நிலங்களின் மேலாட்சி நில உடமையாளரான நகரத்தார் வெளியேற, உழுபவனுக்கே நிலம் என்ற அரசின் கொள்கையால், அந்த நிலங்களின் உடமையாளராகினர் அங்கு பணிபுரிந்த தமிழர். மியம்மாவின் தெற்கெல்லை மாநிலங்களான, தண்ணித்தரை, மொன், பக்கோ ஆகிய மூன்று மாநிலங்களிலும் தமிழர் வேளாண்மைத் தொழிலில் உள்ளனர். மொன், தண்ணித்தரை ஆகிய இரு மாநிலங்களில் தமிழரே 40% மக்கள் தொகை. பக்கோ மாநிலத்தில் தமிழரே 30% மக்கள் தொகை.
ஐராவதியின் முகத்துவாரத்தை ஒட்டிய தலைநகர் யாங்கோனில் 10% தமிழர். எண்பது ஆண்டுகளுக்கு முன் இதே நகரில் 53% தமிழர்.
வடக்கே உள்ள மாநிலங்களில் தமிழர் தொகை வெகுவாகக் குறைந்தது. மாநிலத் தலைநகரங்கள் ஒவ்வொன்றிலும் சைவக் கோயில்கள் உள. அங்கு வழிபட வரும் தமிழர் சொரியலாகப் பரந்துளர். மண்டலே மாநிலத்தில் 3-5% தமிழர் எனலாம்.
இன்றைய மியம்மாவில் ஏறத்தாழ 1000 சைவக் கோயில்களில் வழிபாடு நடைபெற்று வருகிறது. இவற்றுள் பெரும்பாலானவை, ஏறத்தாழ 600 கோயில்கள் வரை, தென்கிழக்கு மாநிலங்களில், சிறுதெய்வக் கோயில்களாக, முன்னீச்சரர், காளி, அங்காளபரமேசுவரி, மாரியம்மன், குதிரைவீரன் கோயில்களாக உள்ளன. வேளாண் தொழிலாளர் வேண்டுதல்களுடன் வயல்களின் வரப்பெல்கைளில் அமைத்த உருவங்கள் காலப்போக்கில்  சிறு சிறு கோயில்களாகி உள.
1962இன் படைப்புரட்சிக்குப் பின்னர், புத்த கோயில் தவிர வேறெந்தச் சமயக் கோயிலையும் புதிதாகக் கட்டக்கூடாதெனவும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு இடங்களைத் திருத்துவதாயின் அரசு அனுமதி வேண்டுமெனவும் கடுமையான அரசு விதிகள் உள.
ஆனால் இந்துக் கோயில்களுக்கு இந்த விதிகளைப் பொருத்தமுடியாதவாறு, ஒவ்வொரு இந்துக் கோயிலிலும் புத்தர் சிலை ஒன்றை வைத்துவிடும் தமிழரின் இணக்கப் போக்கால், தங்குதடையின்றிப் புதிய சைவக் கோயில்கள் எழுகின்றன. பழைய கோயில்களைத் திருத்துகிறார்கள். தமிழகத்திலிருந்தும் மலேசியாவிலிருந்தும் சிவாசாரியார்களை அழைத்துத் திருக்குட நன்னீராட்டுவிழா நடத்துகிறார்கள், புத்தர் சந்நிதிக்கும் சேர்த்து! சிவாசாரியாகள் புறப்பட்டுச் சென்றபின், உயிர்ப்பலி கொடுக்கும் சிறுதெய்வக் கோயில்களும் உண்டு.
ஏறத்தாழ 100 தமிழர், புத்த பிக்குகளாக உள்ளனர். மியம்மாப் புத்தத் திருமடங்களில் வாழ்கின்றனர். இவர்களுள் 25 பிக்குகள், தேரர்வாதப் புத்த சமயத்தில் புலமைபெற்ற அறிஞர்களாவும் உளர்
நகரத்தார் அமைத்த 32 தண்டாயுதபாணி கோயில்கள், அவற்றுக்கான சொத்துகள் பற்றிய விவரங்களைத் தேடவேண்டும். யாங்கோனில் முகில் தெருவில் நகரத்தாரின் ஆறு அறை முருகன் கோயில் சிதிலைடந்த நிலையில், மியம்மாப் பெண்ணை மணந்த நகரத்தார் ஒருவரின் மேற்பார்வையில் இயங்கிவருகிறது.
செல்வந்தர் மற்றும் அரச குடும்பத்தினர் ஆதரவுடன் மியம்மாவில் நெடுங்காலம் வாழ்ந்து வந்த சிவாசாரியார்கள், 1962இன் படைப் புரட்சிக்குப் பின் காணாமல் போயினர்! அவர்கள் மியம்மாப் பெண்கைள மணந்தனர். அந்த வாரிசுகளுள் சிலர் மியம்மா மக்களுக்குக் காதுகுத்தல் போன்ற மியம்மா மக்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்குப் புத்த பிக்குகளுடன் செல்வது இன்றைய நிலை.
தமிழரிடையே பூசகர் குழுமம் உருவாகியுள்ளது. சிவாசாரியார் அல்லாத, ஆனால் சிறுதெய்வ வழிபாடு சார்ந்தோர், அனைத்துக் கோயில்களிலும் பூசனை, வழிபாட்டுக்கு உதவுவர். தங்களுக்குள்ளேயே பயிற்சி முறைகளை வகுத்து, தமிழிலோ மியம்மா மொழியிலோ எழுதிய வடமொழியும் தமிழும் மியம்மா மொழியும்  கலந்த (அவர்களுக்கே புரியாத?) மந்திரச் சொற்களைப் பயன்படுத்திப் பூசனை செய்து வருவர்.
1850களில் தமிழகத்தில் இருந்து செல்லும்பொழுதே கொண்டுசென்ற சாதிப் பெயர்களையும் கட்டமைப்பையும் விடாது காத்துவரும் மியம்மாத் தமிழர், வேளாள சாதியாரைப் பூசகராக ஏற்பர். எனினும் சாதிக் கட்டமைப்புக்கு அப்பால் பலர், பூசகராகச் சேர்வதும் விலகுவதுமாக, பூசகர் சமூகம் மியம்மாவில் நிலைகொண்டுள்ள து. பூசகர் குடும்பத்தில் வந்தவரே பூசகராகும் நிலை அருகும் காலத்தில் தமிழ்மொழி வழிபாட்டை அறிமுகம் செய்து, மியம்மாத் தமிழரின் ஆன்ம ஈேடற்றத் தேடலுக்கு உதவுவது, தமிழகத்தின் கடமை.
சாதிப் பெயரீற்றைச் சேர்க்காமல் எழுதுவது, முன்னேற்றம் விழையும் தமிழர் சிலரின் நிலையானாலும், நகரம் சாராத் தமிழரிடையே முற்று முழுதாகவும் நகர்வாழ் தமிழரிடையே பெரும்பாலாகவும் சாதிப்பெயரீற்று வழமை கடுமையான வழமை. அழைப்பிதழ்கள், விழா நிகழ்வுகள், எங்கும் எதிலும் இந்தப் சாதிப் பெயரீற்று வழமையைக் காணலாம்.
இன்று வாழக்கூடிய ஏழு இலட்சம் தமிழருள் 1962க்குப்பின் பிறந்தோர் யாவரும் மியம்மா மொழிப் பெயரையே பள்ளி, அலுவலக, ஆட்சி சார்ந்த பெயராகக் கொண்டுள்ளனர். தமிழ்ப் பெயர்களை வீட்டுக்குள் பயன்படுத்துவர். பள்ளி செல்லும் தமிழ்க் குழந்தை எதுவும் கேட்ட உடன் மியம்மா மொழிப்பெயரையே தன்பெயராகச் சொல்லும். எவராவது நினைவூட்டினால் மட்டுமே, தமிழ்ப் பெயரைச் சொல்லும்.   
தமிழ் வணிகர்களின் வங்கிக் கணக்குகள் மியம்மா மொழிப் பெயராதலால், பிற பதிவுகள், உடன்பாடுகள், ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, திருமணப் பதிவு, நில உடமைப் பதிவு யாவும் மியம்மா மொழிப் பெயராலேயே அமையும். தமிழ்ப் பெயர் வரா.  
இரசிக இரஞ்சனி, தொண்டன் ஆகிய இரு தமிழ் நாளிதழ்களுக்கும் 1966 முதல் அரசு தடைவிதித்து வெளியீட்டை நிறுத்தியது. அச்சிடும் வெளியீடோ, புத்தகமோ, தமிழில் இருந்தால், மியம்மா மொழிக்கு மொழிபெயர்த்து ஒப்புதல் வாங்கியே வெளியிடவேண்டும் என்பது அரசின் தணிக்கை விதி.
அரசுத் தணிக்கைக்கு உள்ளிட்டே 300 தொடக்கம் 400 படிகள் வரை விற்பனையாகும் ஓரிண்டு மாத இதழ்கள் யாங்கோனில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. சோதிடத் தகவல்களே மீநிற்கும் அந்த இதழ்களில் தமிழ் எழுத்தாளரின் படைப்புகள், திருக்குறளுக்கு மியம்மா மொழியில் மொழிபெயர்ப்பு ஆகிய பக்கங்களும் உள.
55 தமிழ்ப் பள்ளிகள் இருந்த மியம்மாவில் 1962க்குப்பின் தமிழ்ப் பள்ளிகளே இல்லை. தமிழ்ப் பண்பாட்டுக் கல்விப் பேழையான அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தமிழிசையை மீட்டெடுத்த தமிழிசைச் சங்கம், அன்றைய மியம்மாவில் நகரத்தார் ஈட்டிய வருவாயில் தமிழகத்துக்கு ஈந்த செல்வம். இன்றைய மியம்மாத் தமிழரோ, தமிழ்ப் பண்பாட்டுக் கல்வியின்றி, தமிழ் மரபுகளைக் கற்பிக்கமுடியாது திணறுகின்றனர்.
மூன்று மாத காலம் மியம்மாப் பள்ளிகளுக்கு விடுப்புக் காலம். அந்தக் கால இடைவெளியைப் பயன்படுத்தி, தமிழ்க் குழந்கைளுக்குத் தமிழர் அமைப்புகள்  கல்வியூட்டுகின்றன. தண்ணித்தரைத் தலைநகர் மவுலமீன், மொன் தலை நகர் தட்டோன், பக்கோத் தலைநகர் பக்கோ, ஆகிய நகரங்களில் தமிழர் அமைப்புகள் பல, இந்தப் பணியில் ஈடுபடுகின்றன.
விடுப்புக் காலத்தில் இந்த மூன்று மாநிலங்களிலும் ஏறத்தாழ 25,000 குழந்தைகளுக்குத் தமிழ்மொழிப் பாட வகுப்புகளை ஏறத்தாழ 300 பள்ளிகள்  நடத்துகின்றன. இதற்காக ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்குகிறார்கள். மனனப் போட்டி, பேச்சுப் போட்டி, நடனப் போட்டி, இசைப் போட்டி, நாடகப் போட்டி என நடாத்தித் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலை மேம்படுத்துகின்றனர்.
இந்த முயற்சியின் நீட்டமாக, கோயில் விழாக்களில் இந்தக் குழந்தைகளும் இளைஞரும் ஆடியும் பாடியும் உரை நிகழ்த்தியும் அசத்துகின்றன.
யாங்கோனில் 30 தமிழ்ப் பள்ளிகள், ஓரிரண்டு இசைப் பள்ளிகள், நடனப் பள்ளியும் உள. தமிழ் மொழி, இசை, நடன ஆயிரியர்களுக்குப் பயிற்சி, பாடநூல் தயாரிப்பு எனக் கோயில்களே இவற்றின் இயங்கு தளங்கள், அரங்கேற்று தளங்கள்.
பியேய், மண்டலே போன்ற வட நகரங்களில் தமிழ்க் குழந்தைகளின் தமிழ் மொழிக் கல்வி கனவே.
தமிழகத் தொலைக் காட்சிகளை மியம்மாவெங்கும் பார்க்கும் வசதி சில ஆண்டுகளாகவே உண்டு. தமிழ்த் திரைப்படங்களின் குறுந்தட்டுகள், தமிழ் இசை நாடாக்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. யாங்கோனில் தமிழ்ப் புத்தகக் கடை ஒன்றும் உண்டு. தமிழ் அடையாளங்களுக்கு மீட்டுயிர் கொடுக்க இந்த ஊடக ஊடுருவல்கள் உதவுகின்றன. தமிழக நாளிதழ்கள், வார இதழ்கள் இறக்குமதியாவதில்லை. பாங்கொக்கு வழி வாரந்தொறும் வரும் குருவிகள் என்ற பயண வணிகர் அடா விலைக்கு இந்த இதழ்களை யாங்கோனில் கொடுத்துச் செல்ல, ஆர்வமுள்ளோர் வாங்குவர்.
பராசக்தி, இரங்கோன் இராதா போன்ற தமிழகத் திரைப்படங்கள், மியம்மாத் தமிழரின் அவலங்களைக் கூறின. தமிழக நாடகக் குழுக்கள் யாவும் ஒரு காலத்தில் மியம்மா வராமல் முழுமை பெறுவதில்லை. எம்ஜியார் வந்து நாடகம் நடித்த நாடு மியம்மா. இன்றோ மியம்மாவுக்கு எவரும் வருவதில்லை. மியம்மாத் தமிழரின் கலை ஆர்வம் தீராத் தாகமாகவே தொடர்கிறது
அண்மைக் காலமாக, இந்திய எல்லையில் 20 கிமீ. அகலமான நிலப்பரப்பு இருநாட்டவரும் தடையின்றி உலாவும் ஆட்சியற்ற பகுதியானதால், அங்கு வரும் இந்திய வணிகரிடம் இந்திய உற்பத்திப் பொருள்களை வாங்கி, மியம்மாவுக்குள் கொண்டுவரும் தமிழர் தொகையும் கணிசமாக உள்ளது.
இந்திய மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து 120 கிமீ. தென் கிழக்கே அமைந்த இந்த ஆட்சியற்ற நிலத்திற்குள் செல்ல இந்தியக் குடிமக்கள் ரூ. 10 கொடுத்தால் வணிகப் பொருள்களுடன் செல்லலாம்.
மியம்மாவின், வடமேற்கே, சகாயிங்கு மாநிலத்தின் நகரான மொரே நகரை ஒட்டிய ஆட்சியற்ற நிலத்திற்கு மண்டலே நகரில் இருந்து 850 கிமீ. பயணம். மலைகளும் ஆறுகளும் காடுகளும் படர்ந்த மொரே நகரின் அழகு, கண்கொள்ளா வனப்பு.
இந்த ஆட்சியற்ற பகுதிக்குள் வந்த மியம்மா நாட்டவர், தமிழராயினும், இந்தியாவுக்குள் தங்கு தடையின்றி எங்கும் போய்வரலாம். இந்தியாவின் இந்த இணக்கப் போக்குத் தமிழருக்குப் பெருவாய்ப்பு. மியம்மாத் தமிழர் சிலர், இவ்வழியாகத் தமிழகத்துக்கே வந்து விரைந்து திரும்புகிறார்கள்.
1962க்குப் பின்னர், மகிழுந்து, பேருந்து, சரக்குந்து போன்ற வாகனங்களின் இறக்குமதிக்குக் கடும் கட்டுப்பாடுகள் வந்தன. இவற்றுக்கான உதிரிப் பாகங்களின் இறக்குமதியும் மிகக் குறைந்த காலத்தில் தமிழர், உந்து உதிரிப்பாக விற்பனை, உந்து பழுதுபார்த்தல் ஆகிய தொழில்களில் ஆர்வம் காட்டினர். ஓடாத உந்துகளை ஓடவைத்தனர். கிடைக்காத உதிரிப் பாகங்களைப் பழையதிலிருந்து மீட்டுருவாக்கினர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இறக்குமதி விதிகள் தளர்ந்தன. எனினும் உந்துப் பொருளாதாரம் பல நகரங்களில் தமிழர் கையிலேயே உள்ளது. இதைத் தமக்குள்ளேயே தக்கவைப்பதில் பல்நகர இணைணப்புக் குழு உணர்வுடன் தமிழரான உந்து வணிகர் செயற்படுவர். அண்மைக் காலமாக, உந்து உதிரிகளையும் உந்துகளையும் சீனாவிலிருந்து பெருமளவில் இறக்குமதிசெய்து விற்று வருவதிலும் ஒருங்கிணைந்து முன்னேறி உளர்.
தமிழர் தொடாத வணிகம் இல்லை எனுமளவுக்குச் சிறு வணிகராக நகரங்களில் வெற்றிபெற்று வருகின்றனர். நிலம், மனை, துணி, உணவு, மின்பொருள், கணினி, அச்சகம், மருந்து, தங்கும் விடுதி எனத் தொட்டெதல்லாம் துலங்குவோராய் நகரம் சார் தமிழர் உளர்.
தென் மாநிலங்களில் தமிழரான உழவர், சிற்றூர்களில் குடிசை வீடுகளில் வாழ்கின்றனர். நகர் சார் தமிழரின் வீடுகள் வசதிகள் கொண்டவை.
வீட்டுப் பெண்களும் பணிக்கே செல்வர். வேளாண், வணிகம், கல்வி, எனப் பல்தொழிலில் தமிழ்ப் பெண்களின் உழைப்பால் மியம்மா வளர்கிறது.
அரசே பாடசாலைகளையும் பல்கலைக் கழகங்களையும் நடாத்துகிறது. கல்விக்குக் கட்டணமில்லை. தமிழ்க் குழந்தைகள் மியம்மாப் பெயருடன் பள்ளி செல்கின்றன. மியம்மா மொழிவழி கல்வி கற்கின்றன. பட்டப் படிப்புவரை பெரும்பாலான தமிழ் இளைஞர் பயின்றுள்ளனர்.
வழக்கறிஞராக, பொறியியலாளராக, பள்ளி மற்றும் பல்கலைக் கழக ஆசிரியராக இவர்கள் பணி புரிவதால் மியம்மா வளர்கிறது. அரச பணிகளில் இவர்களுள் குடியுரிமை பெற்றவர்களுக்கே வாய்ப்பு.
தென்மாநில உழவர் பெருமக்கள், நில உடமையாளரெனினும் குடியுரிமை பெற்றவர் மிகமிகக் குறைவு. இருவகை  அடையாள அட்டைகளை அரசு வழங்குகிறது.மியம்மாத் தொல்குடி மக்களே  குடியுரிமைக்குத் தகுதி உடையர். இவர்களுக்கு மஞ்சள் அடையாள அட்டை.
1824க்குப் பின் வந்த சீனர், தமிழர், வங்காளிகள், ஏனைய இந்தியர் யாவரும் வரவுக் குடிகள். இவர்களுக்குப் பச்சை அடையாள அட்டை. வாக்களிக்கும் உரிமை, அரச பணிகளில் சேரும் உரிமை இவர்களுக்கு இல்லை. நிலம் வாங்கும், வணிகம் நடத்தும் உரிமைகள் உள.
காலப்போக்கில் பச்சை அடையாள அட்டை வைத்திருப்போருக்கு மஞ்சள் அடையாள அட்டை வழங்குவது 2010 தேர்தலுக்குப் பின் பெருகியுள்ளது. பச்சை அடையாள அட்டைகளின் தொகை குறைந்து மஞ்சள் அடையாள அட்டைகளின் எண்ணிக்கை பெருகிவருவது கடந்த சில ஆண்டுகால மாற்றம்.
  இதனால் தமிழருட் சிலர் மியம்மாப் படையிலும் உளர். அரச பணிகளில் உளர். கல்விப் பணிகளில் உளர். பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும் உளர். மியம்மா ஆட்சியாளரின் நம்பிக்கைக்கு உரியவராக நடந்துகொள்வோர், ஆட்சியாளருடன் இணங்கி நடப்போர்  அரசுப் பணிகளில் முன்னேறுகின்றனர்.
 இரு பெரும் நாடுகளான இந்தியாவும் சீனாவும் மியம்மாவுடன் எல்லைகளைக் கொண்டுள. வங்காள தேசத்துடனும் எல்லை உண்டு. கிழக்கே இலாவோசு, தாய்லாந்து ஆகிய நாடுகள் எல்லைகளைக் கொண்டுள.
இந்திய சீன எல்லைகளை ஒட்டி வாழும் தொல்குடி மக்களின் குலம் வேறு, தென் மாநில மக்களின் குலம் வேறு. வடபகுதித் தொல்குடியினர் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவதும் இந்திய சீன எல்லைக்கோடுகளுக்கு அப்பால் கரந்துறைவதும் மியம்மா அரசுக்குச் சளையாத சவால்களே!
மியம்மாவின் மேற்கில், அரக்கன் மாநிலத்தில் 25% இசுலாமியர். வடக்கே வங்காள தேசத்திலிருந்து தொடரும் இசுலாமிய உரோகணரின் குடிவரவுகளாலும் மியம்மா அரசுக்குக் கலக்கம் உண்டு.
தாய்லாந்து, இலவோசு எல்லைக் கருகே கஞ்சாச் செடி வளர்ப்பும், மூன்று நாடுகள் இணைந்தும் கட்டுப்படுத்த முடியாத கஞ்சா வணிகக் காடைக் கும்பல்களும் மியம்மாவுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலே.
இந்தப் பின்னணியில், மியம்மாத் தமிழரையும் நோக்கிய 1962இன் படைப் புரட்சி அரசுக்கு, இந்தக் கலா உலுமோரைக் கையாள, அடக்குமுறை விதிகளை அவிழ்த்துவிடுவது வழியாக இருந்தது. தமிழரின் இணக்கப் போக்கு, மியம்மா மக்களின் அன்புக் கண்ணோட்டம் யாவும் படிப்படியான அரசியல் மாற்றங்களைக் கொண்டுவருகின்றன.
2010இல் நடைபெற்ற தேர்தல் தந்த அரசின் கொள்கைகள், தமிழருக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளன. மக்களாட்சியை நோக்கிய இன்றைய முன்னேற்றங்கள் மியம்மாத் தமிழருக்கு வளமான எதிர்காலத்தைக் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment