முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 18, 2012

பேர்த்து நகரில் பார்த்தவை


பேர்த்து நகரில் பார்த்தவை
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

ஆத்திரேலியாவில் பல மாநிலங்கள். நாட்டுக்கு வருவாய் ஈட்டும் மாநிலங்களுள் முதன்மையானது மேற்கு ஆத்திரேலியா மாநிலம். பேர்த்து அதன் தலைநகர்.
100 ஆண்டுகளக்கு மேலாகப் பேர்த்து நகரில் தமிழர் வாழ்கின்றனர். ஆங்கிலேயரின் மலாயா நாட்டிலிருந்து வந்தவர்களே பெரும்பாலார். 1980களில் ஈழத் தமிழர் பேர்த்து நகருக்குப் பெருமளவில் வரத் தொட்ங்கினர். இன்று பேர்த்து நகரிலும் சுற்று வட்டாரத்திலும் ஏறத்தாழ 2000 தமிழ்க் குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்களுள் ஈழத்தவர் பெரும்பாலார். மலேசியர், சிங்கப்பூரார், தமிழ் நாட்டவர், பிசித் தீவார், தென்னாபிரிக்கர் ஆகியோரே  ஏனயோர்.
2011 மார்கழி 31ஆம் நாள் மாலை 1515 மணிக்குப் பேர்த்து நகர் வானுர்தி நிலையத்தில் எனக்காக்க் காத்திருந்தவர் திரு. சீவன். என் உடையைக் கொண்டு அடையாளம் கண்டார்.
தொலைப்பேசியிலேயே வேகத்துடனும் நிதானத்துடனும் பேசுவார். நேரில் கண்டபொழுது அவரின் உற்சாகம் ததும்பி ஆர்வம் துள்ளிய உள்ளம் என்னை மயக்கியது.
அவருடன் திரு. முருகமூர்த்தி அவர்களின் இல்லம் சென்றேன். திரு. சீவன் தன் பணிக்குப் போனைர். மாலை 1800 மணியளவில் திரு. முருகமூர்த்தியுடன் புறப்பட்டேன். தெற்கே பயணித்தோம். அருள்மிகு பாலமுருகன் கோயிலை அடைந்தோம்.
திருக்கோயில்களின் அமைப்பு முறை காலத்துக்குக் காலம் மாறி வருகின்றன. ஆத்திரேலியாவுக்கு ஏற்றவாறு அமைந்த திருக்கோயில் அருள்மிகு பாலமுருகன் கோயில். அதன் தூண்களற்று அகன்ற மண்டபத்தில் நிற்போர், இறையுணர்வின் இனிமையை, அமைதியை உணர்வர்.
திரு. செயராம சர்மா அங்கு பூசகர். உங்களை முன்பே அறிவேன். உங்கள் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவன். கல்வித் திணைக்களத்தில் உயர் பதவியில் இருந்தேன். ஓய்வுபெற்று இங்கு வந்தேன், என அவர் தன்னை அறிமுகம் செய்தார். என் நண்பர்கள் பலருக்கு அவர் உறவினர்.
திரு. முருகமூர்த்தியின் இல்லத்தில் இரவுணவு தந்தனர். பேர்த்தில் வாழும் சைவ உணவு இல்லத்தார் சிலருள் அவர்களும் அடங்குவர். திருமதி முருகமூர்த்தியும் செல்வி முருகமூர்த்தியும் விருந்தோம்பினர்.
திரு. முருகமூர்த்தியின் வண்டியில் ஏறினேன், சில கிமீ. தொலைவில் திரு. இரமணா நமசிவாயம் வீடு சென்றோம். பேர்த்தில் தங்கும் ஐந்து நாள்களும் அப் பெருந்தகை இல்லத்தில் தங்குமாறு திரு. சீவனின் ஒழுங்கு.
பேர்த்து நகரில் ஏறத்தாழ 100 ஆண்டுகளாகத் தமிழர் வாழ்கின்றனர். அன்றைய மலாயாவிலிருந்து வந்த தமிழருக்குப் பேர்த்து நகரம் இரண்டாவது வீடு. கிழக்கு ஆத்திரேலிய நகரங்களில் தமிழர் குடியேறாத காலங்களில் பேர்த்து நகருக்கு மலாயாத் தமிழர் வந்து குடியேறினர்.
பேர்த்து நகரின் இந்தத் தமிழ்ப் பின்னணியில் 1981இல் வந்த திரு. இரமணா நமசிவாயம் மாற்றத்துக்கு வழிவகுக்கிறார். கன்னிங்கு வேல் பகுதியில் சிவன் கோயிலுக்குத் தளம் அமைத்த முன்னோடிகளுள் திரு. நமசிவாயம் ஒருவர்.
கோயிலுக்குக் காணி வாங்கியபொழுது புதர்க் காடாக அந்த இடம் இருந்தது. குடிமனைகள் இல்லை. மணல் சாலை ஓரத்தில் காணி.
புதர்களை அகற்ற வார இறுதியில் திரு. நமசிவாயம் உள்ளிட்ட தொண்டர்கள் வருவர். மணல் சாலையில் வந்து சென்றால் மகிழுந்து முழுவதும் புழுதி பரவும். புதர் வெட்டியதால் கைகளில் தழும்புகள் பரவும். தொண்டு செய்வதால் உள்ளத்தில் அமைதி பரவும்.
வேலியிட்டுச் சிறிய மண்டபம் அமைத்துச் சிவன் கோயிலை எழுப்பும் வரை அயராது உழைத்த அருந்தொண்டர் திரு. நமசிவாயம், அவர் துணைவியார் சாந்தி. அவரது இளம் சிறார்கள் அபிராமி, சாரங்கன். பேர்த்து நகரின் முதலாவது தமிழ்த் திருக்கோயிலின் தொடக்கத் தொண்டுள்ளங்களுள் திரு. நமசிவாயம் இல்லத்தினரும் அடங்குவர்.
அவர்கள் இல்லத்தில் தங்குவது கோயிலுள் தங்குவது போன்றதாகும். தவத்தோர் எவராயினும் பேர்த்து வந்தால் அந்த இல்லத்திலேயே தங்குவர். தவத்திரு அரிதாசர் சுவாமிகள் தங்கிய இல்லம். நானும் பேறுற்றேன்.
மறுநாள் காலை அருள்மிகு பாலமுருகன் கோயிலில் தேவாரம் மின்னம்பல தளத்தை விளக்கச் சென்றேன். ஆங்கிலப் புத்தாண்டு நாள். தமிழர் திரண்டிருந்தனர். காலை முதலாக வழிபாடு. வழிபாடு முடிந்ததும் என் காட்சி விளக்கம். திரு. சீவனும் திரு. செயராம சர்மாவும் என்னை அறிமுகம் செய்தனர். திரு. குகநாதனும் திரு. வன்னியசிங்கமும் ஏற்பாடுகளைச் செய்தனர்.
ஒரு மணி நேரம் விளக்கினேன். துண்டு விளம்பரங்களை வந்திருந்தோர் அனைவரின் கைகளுள்ளும் திணித்தேன். நூற்றுக்கும் கூடுதலானோர் வந்திருந்தனர். அங்கேயே மதிய உணவு.
மாலை அருள்மிகு சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்றார் திரு. நமசிவாயம். மேற்கு ஆத்திரேலிய இந்துச் சங்கம் நடத்தும் பேர்த்து இந்துக் கோயில் என மாற்றம் பெற்றுள்ளது.
ஆத்திரேலியாவின் பல்மொழி இந்துத் தொகுப்புக்கு உரிய வழிபாட்டு நடைமுறைகளைக் கொண்டதாக மாற்றம் பெற்றுள்ளது. தமிழர், வடஇந்தியர், கேரளர், கன்னடர், தெலுங்கர், மராத்தியர், கூர்ச்சரர், தென்னாபிரிக்கர் ஆகிய குழுக்களுக்குத் தனித் தனி வழிபாட்டு நாள்கள் ஒதுக்கியுளர்.
அன்று மாலை அங்கு வழிபட வந்த அனைவருக்கும், தேவாரம் மின்னம்பல தளத்தை விளக்கும் துண்டு விளம்பரங்களைக் கொடுத்தேன். நூற்றைம்பது விளம்பரங்களைக் கொடுத்தேன். புரியாதவர்களுக்கத் திரு. நமசிவாயம் விளக்கமளித்தார்.
திங்கள்கிழமை மதியம் திரு. சத்தியமூர்த்தி இல்லத்தில் மதிய உணவு. அங்கு தேவாரம் மின்னம்பல தளம் விளக்கம். மாலை திரு. நமசிவாயம் திருமதி சாந்தி அழைத்துத் திரு. கருணாகரன்-தேவகி இணையரும், திரு. கணேசுவரன் இணையரும் வந்திருந்தனர். தேவாரம் மின்னம்பல தளத்தை விளக்கினேன்.
நமசிவாயம் இணையரின் மகள் அபிராமி. பரத நாட்டிய அரங்கேற்றத்தைப் பேர்த்து நகரிலேயே நிகழ்த்திப் பல்லின மக்களுக்குத் தமிழ்க் கலை நுணுக்கங்களைக் காட்டியவர். அருள்மிகு பாலமுருகன் கோயிலின் இளைஞர் பிரிவுப் பொறுப்பாளர். தொண்டுள்ளம் கொண்டதால் கொல்கத்தாவில் அன்னை திரேசா அமைப்புவரை அவர் பணி நீண்டது. அவரின் தம்பி சாரங்கனோ, தன் 17 வயதிலேயே அரசுப் பணியில் சேர்ந்ததுடன் பல்கலைப் படிப்பையும் தொடர்பவர்.
அருள்மிகு பாலமுருகன் கோயில் பொறுப்பாளர்களுள் ஒருவர் திரு. குகநாதன், செவ்வாய்க்கிழமை மதியம் என்னை அழைத்துச் சென்று, நடுநகரின் குடாவை ஒட்டிய மணிக்கூண்டுக்கு அருகே, அன்னலட்சுமி உணவகத்தில் மதிய உணவு தந்தார். சிவாக் குடும்பத்தினர் நடத்தும் சைவ உணவகம். உணவுக்குக் கட்டணம் இல்லை. கொடுப்பதைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
புதன்கிழமை திரு. நரேந்திரன் இணையர், திரு. மகேந்திரன் இணையர் மதிய உணவு வழங்கிப் போற்றினர். அன்று மாலை அருள்மிகு சிவன்கோயிலுக்குத் திரு. சீவனும் திரு. நமசிவாயமும் அழைத்துச் சென்றனர்.
2012 தை 5ஆம் நாள், வியாழக்கிழமை காலை பிரிசுப்பேனுக்குப் புறப்பட்டேன். வானுர்தி நிலையத்தில் புறப்படு எல்லை வரை திரு. நமசிவாயம் வந்திருந்தார். அவர் அன்பில் திளைத்தேன். அருளாளரின் நல்லாசி பெற்றோர் நமசிவாயம் இல்லத்தவர். திருவண்ணாமலைக்குச் சென்று அருளாளர் பலரின் நீழலில் நல்லறங்களைக் கேட்போர் மட்டுமன்று, அறவாழ்வு வாழ்ந்தும் காட்டும் அந்த இல்லத்தவரின் நிழலில் நானும் சிலநாள்கள் பேர்த்து நகரில் அன்புப் பெருக்கம் பார்த்து அருள் சேர்த்தேனா?

No comments:

Post a Comment