தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு எழுத்துப் பெயர்ப்பில் சீர்மை
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு எழுத்துப் பெயர்க்கத் தமிழ்
லெக்சிக்கன் (Tamil Lexicon, University of Madras) காட்டிய
வழி உண்டு. அந்த வழி செல்ல ஒலிக்குறிகள் தேவை. வழமையான ஆங்கிலக் குவேற்றி (QWERTY)
விசைப்பலகையில் அந்த வசதி இல்லை.
மேலும் 26 ஆங்கில வரிவடிவங்களையே பொதுவாக அனைவரும் அறிவர்.
எனவே தமிழ் ஒலிகளையும் வரிவடிவங்களையும் எழுந்தமானமாக ஆங்கில வரிவடிவங்களுக்கு மாற்றுவது
வழமையாகிவிட்டது. இதில் எவரும் எந்தத் தரத்தையும் சீர்மையாக்கி இலக்கணமாக்கவில்லை.
தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் Tamil என்பர். தமிழ்நாடு என்ற சொல்லை ஆங்கிலத்தில் Tamil
Nadu என்பர்.
தமிழ் ஒலிகளைத் தமிழ் லெக்சிக்கன் வழி மாற்றினால் tamiḻ
nāṭu என்றும் தமிழ் நாடு tamiḻ nāṭu என்றுமாகும்.
தமிழ் ஒலிகளை ஞால ஒலி நெடுங்கணக்கு (International Phonetic Alphabet) வழி மாற்றினால் t̪ʌmɪ˞ɻ என்றும் தமிழ் நாடு t̪ʌmɪ˞ɻ n̺ɑ˞:ɽɨ என்றுமாகும். பார்க்க: முனைவர் புனல் க. முருகையன், பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு; (2010) சென்னை,
காந்தளகம் வெளியீடு.
தமிழின் மெய் எழுத்துகளான, தகரம், ரகரம், டகரம் ஆகிய மூன்று ஒலிகளும் அடைப்பொலிகள்
(plosives). காற்றை ஓரிடத்தில் நிறுத்திப் பின்னர் திடீரென
வெளியேற்றுவதால் வருவன அடைப்பொலிகள்.
மேற்பல்லுடன் நாவின் நுனியைப் படரப் பொருத்திக் காற்றை நிறுத்திப்
பின்னர் காற்றை வெளிவிடத் தகரம் பிறக்கும் (பல் அடைப்பொலி voiceless dental plosive). ஆங்கில வரிவடிவத்தில் இதற்கு இணையாக
th வரும். தமிழ் = thamizh. (that, those, thing,
through)
முன் அண்ணத்தில் நுனிநாவைப் பொருத்திக் காற்றை நிறுத்திப்
பின்னர் காற்றை வெளிவிட ரகரம் பிறக்கும் (அண்பல் அடைப்பொலி alveolar stop). ஆங்கில வரிவடிவத்தில் இதற்கு இணையாக t வரும். இரவல் = itaval, பருத்தி = patuththi
(task, today).
நாவை வளைத்து நுனிநாவை முன் அண்ணத்துக்குச் சிறிது உள்ளே
பொருத்திக் காற்றை நிறுத்திப் பின்னர் காற்றை வெளிவிட டகரம் பிறக்கும் (வளைநா
அடைப்பொலி voiceless retroflex stop). ஆங்கில வரிவடிவத்தில்
இதற்கு இணையாக d வரும். வடக்கு = vadakku. ஒரகடம் = otakadam (dog, dam, dig)
றகரம் அதிரொலி (trill). மேற்பல் அண்ணத்தைத் தொடும் இடத்துக்கு அடுத்த இடம்
முன் அண்ணம். முன் அண்ணத்தில் நுனிநாவைப் பொருத்திக் காற்றை நிறுத்திப் பின்னர்
காற்றை அதிர்வுடன் வெளிவிட றகரம் பிறக்கும் (நுனிநா அதிரொலி trill). ஆங்கில வரிவடிவத்தில் இதற்கு இணையாக r வரும். இறப்பு
= irappu, மறுப்பு = maruppu, சுறா = suraa
(root, radical)
ரகரமும் றகரமும்
மெய்யாக ஒலிக்கையில் இடம் மாறிக் கொள்ளும். ர் = r: பார் = paar, தவிர்க்க = thavirkka. ற் = t: காற்று = kaattu, கற்க = katka.
தகரம், ரகரம், டகரம், றகரம் ஆகிய
வரிவடிவங்களுக்கு இணையான ஆங்கில வரிவடிவங்களாக த = th, ர = t, ட =
d, ற = r, ர் = r, ற் = t என வரைவிலக்கணம்
கொள்வதே சீர்மை.
இச் சீர்மை
முயற்சியை ஏனைய வரிவடிவங்களுக்கும் மேற்கொண்டு தமிழ் ஆங்கில எழுத்துப்பெயர்ப்பு மற்றும்
ஒலிபெயர்ப்பு முயற்சிகளுக்குப் பொருத்தமும் புரிதலும் வேகமும் தருவது நம் கடன்.
muthuvavasi@yahoo.co.in
No comments:
Post a Comment